ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு

தவிர்வன சில
(பஃறொடை வெண்பா)
முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்; துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக் கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி, நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே, தொல் வரவின் தீர்ந்த தொழில். |
56 |
முற்றிய புல்லின்கண்ணும், முற்றிய காட்டின்கண்ணும் சேர்ந்திரார்; அவற்றைத் தீக்கு உணவாக ஊட்டார்; மழை பெய்யாநிற்கக் காலைப்பரப்பி ஓடார்; தேறமுடியாத காட்டுள் தமியராய்ப் போகார்; மழை குறைந்து பெய்யா தொழிதலால் வறுமை மிகப் பெரிதாயிற்றாயினும், தங்குடி யொழுக்கத்தை நீங்கிய தொழில்களைச் செய்யார்.
கருத்துரை: உலர்ந்த புற்றரையிலும் முதிர்ந்த காட்டிலும் தங்குதலும், அவற்றைத் தீயிட்டுக் கொளுத்துதலும், மழை பெய்கையில் காலைப் பரப்பி யோடுதலும்; வழிதுறை தெரியாத காட்டில் தனியாகப் போதலும்; வறுமை வந்த காலத்து நல்லொழுக்கந் தவறுதலும் தகாத காரியங்களாம்.
நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பாழ் மனையும், தேவ குலனும், சுடுகாடும், ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும், தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்; - நோய் இன்மை வேண்டுபவர். |
57 |
குடியில்லாத மனையகத்தும், தேவாலயங்களுக்குள்ளும் சுடுகாட்டுள்ளும், ஊரில்லாத இடத்து உளதாய தனி முதுமரத்தின்கண்ணும், அறிவின்றித் துணையோடல்லது தாமே போகார், பகலுறங்கார் நோயின்மை வேண்டுவோர்.
கருத்துரை: பாழ் வீடு, சுடுகாடு; தனித்த பாழ் மரம் இவற்றினிடத்துத் தனித்துச் சேராமலும் பகலில் தூங்காமலுமிருப்பது, நோயில்லாதிருப்பதற்கு ஏது.
ஒருவர் புறப்படும்போது செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
எழுச்சிக்கண், பின் கூவார், தும்மார்; வழுக்கியும், எங்கு உற்றுச் சேறிரோ?' என்னாரே; முன் புக்கு, எதிர் முகமா நின்றும் உரையார்; இரு சார்வும்; கொள்வர், குரவர் வலம். |
58 |
பிறர் எழுந்து போகத் தொடங்கின பொழுது அவரைப் பின்னே நின்று அழையார். அப்பொழுது தும்முவதுஞ் செய்யார். மறந்தும் எங்குப் போகிறீர் என்று சொல்லார். முன்னே புக்கு எதிர்முகமாக நின்றும் ஒன்றைச் சொல்லார். அவர்க்கு இருமருங்கும் நின்று சொல்வார். தம் குரவர் போம்பொழுது வலங்கொண்டு போவர்.
கருத்துரை: ஒருவர் எழுந்து போம்பொழுது அவரை அழைத்தல், எங்கே போகிறீர் என்று கேட்டல் செய்யலாகாது, பெரியோர் பக்கம் நின்று பேசுக, வலங்கொண்டு போக.
சில தீய ஒழுக்கங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
'உடம்பு நன்று!' என்று உரையார்; ஊதார், விளக்கும்; அடுப்பினுள் தீ நந்தக் கொள்ளார்; அதனைப் படக் காயார், தம்மேல் குறித்து. |
59 |
பிறரைப் பார்த்து உமது உடம்பு நன்றாயிருக்கிறது என்று சொல்லார், விளக்கினை வாயால் ஊதி யவியார், அட்டிலடுப்பின்கண் நெருப்பவியச் செய்யார், அந்நெருப்பின் சுடர் தம் மேற்படக் குளிர்கெடக் காயார்.
கருத்துரை: ஒருவருடம்பு நன்றாயிருக்கிற தென்பதும், விளக்கை வாயாலூதல், ஒருபொருள் வேகும்போது அடுப்பு நெருப்பை அவித்தல் முதலியவையும் தீயொழுக்கங்களாம்.
சான்றோருடன் செல்லும் போது செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
யாதொன்றும், ஏறார், செருப்பு; வெயில் மறையார்; - ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு ஓர் ஆறு செல்லும் இடத்து. |
60 |
யாதொன்றிலும் ஏறிப்போகார், செருப்புத்தொடார், தம்மேல் வெயில்மறைக்கக் குடை பிடித்துப் போகார் ஆன்றவிந்த மூத்த விழுமியார் தம்முடன்கூட வழிபோமிடத்து.
கருத்துரை: பெரியோருடன் செல்லும்பொழுது வாகனத்தில் ஏறியும் காலிற் செருப்பணிந்தும் குடை பிடித்தும் செல்லுதல் கூடா.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, வெண்பா, இலக்கியங்கள், நின்று, ஆச்சாரக், பாழ், செய்யார், போகார், கோவை, பதினெண், சொல்லார், கீழ்க்கணக்கு, போம்பொழுது, எழுந்து, உரையார், குரவர், போகிறீர், சிந்தியல், செல்லும், மூத்த, விழுமியார், குடை, தம்மேல், காயார், இன்னிசைச், நின்றும், உடம்பு, வலங்கொண்டு, தாமே, பரப்பி, ஓடார், தமியர், துளி, ஊட்டார், சங்க, தீக்கு, முற்றிய, அவற்றைத், ஒருவர், செய்யத், தகாதவை, இடத்து, இன்னிசை, வறுமை, நோய், புக்கு