திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

மடங்குஇறவு போலும்யாழ்ப் பண்பிலாப் பாண! தொடங்குறவு சொல்துணிக்க வேண்டா - முடங்கிறவு பூட்டுற்ற வில்ஏய்க்கும் பூம்பொய்கை யூரன்பொய் கேட்டுற்ற கீழ்நாள் கிளர்ந்து. |
131 |
மடக்கப்பெற்ற இறால் மீனினைப்போன்ற யாழினையுடைய நற் பண்புகளை மேற்கொண் டிராத பாணனே! வளைவுற்ற இறால் மீன்கள் நாணினாலே தொடுக்கட்பபட்ட வில்லினை ஒத்திருக்கும் மலர்கள் நிரம்பிய பொய்கைகள் மிகுந்த மருத நிலத்துார்த் தலைவன் பொய்மையான மொழிகளை தெரிந்து பெற்ற, கீழ்நாள் சென்ற நாட் செய்திகளை கிளர்தலாக எடுத்துச் சொல்லி எமக்குள் தொடங்கப் பெற்றுள்ள உறவின் தன்மையினை நின்சொற்களினாலே துணிந்து கொள்ளுமாறு கூறவேண்டுவதின்று. (யாம் நன்கு அறிவேம்,என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)
எங்கை யரில்உள்ளா னேபாண! நீபிறர் மங்கை யரில் என்று மயங்கினாய் - மங்கையரில் என்னாது இறவாது இவணின் இகந்தேகல் பின்னாரில் அந்தி முடிவு. |
132 |
என் பின்னவர்களாகிய பரத்தையர்தம் மனையகத்தே உள்ளவனாகிய பாண்மகனே! நீ (எனக்குப்) பிறராயுள்ள பரத்தையரினது மனை யென்று (என் மனையைப்) பிறழ வுணர்ந்து வந்து விட்டாய் என் பின்னவர்களாகிய பரத்தையரின் மனையகத்தே (இப்பொழுது) மாலை வேளையின் இறுதியாகிய மணவிழாத் தொடக்க வேளையாகும், (ஆகலின்) மீண்டும் எம் மனையினை அப்பரத்தையர் மனையெனக் கருதாது (வேறு எவர் மனையினையும் இம் முறையிலே) தவறாகக் காணாது இவ்விடத்திருந்து நீங்கி. (மணவிழாத் தொடக்க வேளையினையுடைய பரத்தையர் மனைக்குச்) செல்வாயாக. (என்றுதலைவி பாணனிடங் கூறினாள்.)
பாலையாழ்ப் பாண்மகனே! பண்டுநின் நாயகற்கு மாலையாழ் ஓதி வருடாயோ? - காலையாழ் செய்யும் இடமறியாய் சேர்ந்தாநின் பொய்ம்மொழிக்கு நையும் இடமறிந்து நாடு. |
133 |
பாலையென்னும் பண்ணினாற் சிறந்த யாழினையுடைய பாணனே! முன்பு நின் தலைவனுக்கு மாலைக் காலத்தே பாடவேண்டிய பண்ணினை பாடி ஊழியஞ் செய்த தில்லையோ; காலைவேளையிற் பாடவேண்டிய பண்ணினை பாடும்படியான நிலையினை தெரியாதவனாய் சாம்புதலில்லாத உன்னுடைய பொய்மையான சொற்களுக்கு உளநெகிழும்படியான இடத்தினை தெரிந்து விரும்பிச் செல்வாயாக. (என்றுதலைவி பாணனிடங் கூறினாள்.)
கிழமை பெரியோர்க்குக் கேடின்மை கொல்லோ பழமை பயன்நோக்கிக் கொல்லோ- கிழமை குடிநாய்கர் தாம்பல பெற்றாரில் கேளா அடியேன் பெற்றா அருள். |
134 |
பெருந்தன்மை முதலிய நற்பண்புகள் மிகுந்த மக்கட்கு யாவரையும் தமக்குரியரெனக் கொண்டாடுந் தன்மை நீங்காதுறையும் போக்காலோ பழமையானவைகள் மக்கட்குப் பல்லாற்றானும் பயனுறுதலை நினைந்து பார்த்தமையாலோ உரிமைகள் (பல வாய்ந்த) பல குடிமக்கள் தக்க தலைவர்களை பெற்றார்களைப் போல (மிகவும் தாழ்மையுள்ள யான் சுற்றம் போன்று (வாயில் நேர்தற்குக் காரணமாக) அடைந்த (தலைவி காட்டிய) இவ்வருளானது. (எனக்கு வாய்த்தது?என்று விறலி தோழியினிடங் கூறினாள்.)
என்கேட்டி ஏழாய்! இருநிலத்தும் வானத்தும் முன்கேட்டும் கண்டும் முடிவறியேன் - பின்கேட்டு அணியிகவா நிற்க அவன்அணங்கு மாதர் பணியிகவான் சாலப் பணிந்து. |
135 |
பெண்ணே! நான் சொல்வதைக் கேட்பாயாக (அன்று நம்மைப் பிரிந்து சென்ற) அத்தலைவன் தெய்வம் போல்பவளாகிய தலைவியின் பின்னே (சென்று) அவள் ஏவுவன செய்து மார்பிலணிந்துள்ள அணிகலன்கள் மார்பினை விட்டு முன் செல்லும்படியாக மிகுதியும் அவளை வணங்கி அவள் கூறுங் கட்டளைகளை விலக்க விருப்பமில்லாதவனாய் நடக்கின்றான் என்னே! பெரிய பூவுலகத்திலும் துறக்கத்திலும் இதற்குமுன் இம்முறையினைக் கேட்டாவது கண்டாவது முடிந்த நிலையினை தெரியேன். (என்றுகாமக்கிழத்தி தன் தோழியிடங் கூறினாள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, கூறினாள், இலக்கியங்கள், பாணனிடங், திணைமாலை, பதினெண், நூற்றைம்பது, கீழ்க்கணக்கு, செல்வாயாக, தொடக்க, என்றுதலைவி, மணவிழாத், நிலையினை, கொல்லோ, அவள், கிழமை, பாண்மகனே, பண்ணினை, பாடவேண்டிய, தலைவி, யாழினையுடைய, இறால், கீழ்நாள், சங்க, பாணனே, மிகுந்த, பின்னவர்களாகிய, சென்ற, தெரிந்து, பொய்மையான, மனையகத்தே