திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
அணிக்குரல்மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன மணிக்குரல்மேல் மாதராள் ஊடி - மணிச்சிரல் பாட்டை இருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே யாட்டை இருந்துறையும் ஊர். |
141 |
(பாணனே!) மணியொலி போன்ற பேச்சினையுடைய மேன்மையுள்ள தலைவி அழகிய குரலினானே மேன்மைபெற்ற பெண்களாகிய பரத்தையருடன் (புணர்ந்து) விளையாடினேன் என்று நினைத்து பிணக்கினை மேற்கொண்டு ஆண்டுக்காலம்வரை மனத்தை யடக்கி தங்கும் ஊரானது அழகிய சிச்சிலிப்பறவை தங்கி பாட்டினை பாடுகின்ற பாய்ந்து செல்லும்படியான நீர் வளப்பத்தினுடைய வயல்களோடு கூடியது. (என்றுதலைவன் பாணனிடங் கூறினான்.)
தண்கயத்துத் தாமரைநீள் சேவலைத் தாழ்பெடை புண்கயத் துள்ளும் வயலூர ! - வண்கயம் போலும்நின் மார்பு புளிவேட்கைத்து ஒன்றுஇவள் மாலும்மா றாநோய் மருந்து. |
142 |
குளிர்ந்த குளத்தினிடத்திலே (மலர்ந்துள்ள) தாமரைப்பூவிலேயுள்ள பெரிய ஆண் அன்னப் பறவையினை கீழ்ப்படிதலுள்ள பெண் அன்னப்பறவையானது நீரிலிருந்து நினைக்கும்படியான கழனிகள் சூழப் பெற்ற மருத நிலத்தூர்த் தலைவனே! வளப்பம் பொருந்திய குளத்தினை போன்ற உனது மார்பானது (நின்னோடு) கூடி வாழும் இவளது மயக்கத்தைத் தரும் நீங்காத காமநோய்க்கு. மருந்து - மருந்தாகி புளியம்பழத்தின்கண் மக்கள் கொள்ளும் விருப்பம்போல் மேலும் மேலும் விரும்பும் மேன்மையினைக் கொண்டதாகும். (என்று தோழிதலைவனிடங் கூறினாள்.)
நல்வயல் ஊரன் நறுஞ்சாந்து அணிஅகலம் புல்லிப் புடைபெயரா மாத்திரைக்கண் - புல்லியார் கூட்டு முதலுறையும் கோழி துயிலெடுப்ப பாட்டு முரலுமாம் பண். |
143 |
(அன்னாய்!) வளப்பமிக்க மருத நிலத்துார்த் தலைவனின் மணமிக்க சந்தனக் குழம்பு அணியப் பெற்ற மார்பின் கண்ணே (நம் செல்வி அன்புடன்) கூடியிருந்து விட்டு விலகாத வேளையிலேயே (வீட்டருகே) நெருங்கி பொருந்தியுள்ள நெற் கூடுகளின் உச்சியிலே தங்கியிருக்கும் சேவலானது (கூவித்) துாக்கத்தினின்றும் எழுப்ப இசையோடு கூடிய பாடல்களை பாடத் தொடங்கிவிடும். (என்று தோழிசெவிலித் தாயினிடம் கூறினாள்.)
அரத்தம் உடீஇ, அணிபழுப்பப் பூசிச் சிரத்தையால் செங்கழுநீர் சூடிப் - பரத்தை நினைநோக்கிக் கூறினும் நீமொழியல் என்று மனைநோக்கி மாண விடும். |
144 |
(தலைவனே!) செம்பட்டினை (தலைவியின் சேடிகளிலொருத்திக்குத் தோழி) உடுத்து வித்து (அணிந்துள்ள) செவ்வணிகளெல்லாம் நிறமாறும்படியாக (செஞ்சாந்து) அணிந்து மிகுந்த கருத்தோடு கூடி சிவந்தகுவளை மலர்களை சூட்டி (தலைவன் விருப்பத்தினைப் பெற்றுள்ள) பரத்தையானவள் உன்னைப் பார்த்து (வசை மொழிகள்) சொல்வாளாயினும் (அவளுக்கு எதிராக) நீ ஒன்றும் சொல்லாது திரும்புவாயாக என்ற அறிவுரையினை அச் சேடிக்குச் சொல்லி (நீ வாழும்) (இப் பரத்தையின்) வீட்டை நோக்கி (மகப்பேற்றால் நின் குலம் விளங்கி) மேன்மையுறும்படியாக அனுப்பியுளாள். (நீ இதனைக் காண்பாயாக
பாட்டார வம்பண் அரவம் பணியாத கோட்டரவம் இன்னிவை தாங்குழுமக் - கோட்டரவம் மந்திரம் கொண்டோங்கல் என்ன மகச்சுமந்து இந்திரன்போல் வந்தான் இடத்து. |
145 |
பாட்டுக்களாகிய ஒலியும் இன்னிசையாகிய ஒலியும் கோடுதலில்லாத கொம்பாகிய குழலினது ஒலியும் இம்முறையான பல வொலிகளும் கூடி ஒலிக்க. (செய்யும்சிறப்பின்கண்ணே தலைமகன்) வளைவாகிய நச்சுப்பற்களையுடைய (வாசுகி யென்னும்) பாம்பினை (பாற்கடலைக் கடைந்த) மந்திரமலையானது மேற் கொண்டு சிறப்புற்றதைப் போல தன் மகனை மேற்கொண்டு (மருத நிலத் தெய்வமாகிய) வேந்தனைப் போல (தலைமகளின்) இடப்பக்கத்தே வந்து சேர்ந்தனன். (என்று தோழிகூறி மகிழ்ந்தாள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், நூற்றைம்பது, மருத, கூடி, ஒலியும், பதினெண், கீழ்க்கணக்கு, திணைமாலை, வாழும், கோட்டரவம், கூறினாள், மேலும், மருந்து, என்ன, சங்க, அழகிய, மேற்கொண்டு, பெற்ற, தலைவனே