திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
எங்கை இயல்பின் எழுவல் யாழ்ப் பண்மகனே! தங்கையும் வாழும் அறியாமல் - இங்கண் உளர உளர உவன்ஓடிச் சால வளர வளர்ந்த வகை. |
136 |
யாழையுடைய பாணனே! இவ்விடத்தே (எனக்கு வாய்த்த உவ்விடத்தே திரிபவனாகிய என் மகன் தன் சிறிய கை (சாடை) களாலும் செவ்வாயின் மழலை மொழிகளாலும் பொருள் புலப்படாத நிலையில் பன்முறை குழறிக் கொண்டு விரைந்து சென்று மிகவும் நாளடைவில் வளர்ந்த முறையான் நான் எனக்குப் பின்னவளாகிய பரத்தை (தலைவனோடு கூடிச் சிறப்புற்றிருக்குந்) தன்மையினைப் போன்று கிளர்ச்சியுற்று வாழ்கின்றனன். (ஆகலின் எனக்கொரு குறையுமின்று.என்று தலைவி பாணனிடங் கூறினாள்.)
கருங்கோட்டுச் செங்கண் எருமை கழனி இருங்கோட்டு மென்கரும்பு சாடி - அருங்கோட்டால் ஆம்பல் மயக்கி அணிவளை ஆர்ந்து அழகாத் தாம்பல் அசையினவாய் தாழ்ந்து. |
137 |
பெரிய கொம்பினையும் சிவந்த கண்களையுங் கொண்ட எருமையானது வயல்களில் (விளைந்துள்ள) பெரிய (கொம்பு) கழிகளாகிய மெதுவான கரும்புகளை மோதி அரிய கொம்புகளாலே குமுத மலர்களை கலக்கி அழகிய குவளை மலர்களை தின்று வாயினைத் தாழவைத்து அழகாக பற்கள் அசை போடுவனவாகக் காணப்படும். (பாராய் தோழீ!என்று தலைவி கூறினாள்.)
கன்றுள்ளிச் சோர்ந்தபால் காலொற்றித் தாமரைப்பூ வன்றுள்ளி அன்னத்தை ஆர்த்துவான் - சென்றுள்ளி வந்துஐ,ஆ என்னும் வகையிற்றே மற்றிவன் தந்தையார் தம்மூர்த் தகை. |
138 |
இம்மைந்தனின் தகப்பனாராகிய தலைவரின் மருத நிலத்தூரின் தன்மையானது கன்றினை (எருமைகள்) நினைந்து (மடிவழியாகச்) சோரவிடப்பட்ட பாலானது தாமரைப் பூவினிடத்தே பெரிய (வெண்மையான) துளியினைப் போன்று அமர்ந்திருக்கும் அன்னப் பறவையினை உண்பிக்க வேண்டி வாய்க்காலாகப் புறப்பட்டு (தாமரைத் தடாகத்தைச்) சேர்ந்து உள்ளிருந்து மேலேறி (கண்டார் இஃதென்?) அழகிய காட்சித்து என்று வியக்கும் மேன்மையினை யுடைத்து. (என்றுதலைவி தோழியிடங் கூறினாள்)
மருதோடு காஞ்சி அமர்ந்துயர்ந்த நீழல் எருதோடு உழல்கின்றார் ஓதை - குருகோடு தாராத்தோறு ஆய்ந்தெடுப்பும் தண்ணம் கழனித்தே ஊராத்தே ரான்தந்தை ஊர். |
139 |
(மேலமர்ந்து) ஊர்தற் கியலாத சிறு தேரினையுடையானாகிய என் மகனின் தகப்பனது மருத நிலத்தூரானது மருதமரங்களுடன் காஞ்சி மரங்களும் பொருந்தி வானளாவிய தாலுண்டான நிழலின்கண்ணே காளைகளுடனே உழைப்பவர்களாகிய உழவர்களின் ஒலியானது நாரைகளுடன் வாத்துக்களின் ஒலிகள் தோறும் சென்று கலந்து மிகுந்து காணும்படியான குளிர்ந்த அழகிய வயல்களோடு கூடியதாம் (என்றுதலைவி தோழியிடங் கூறினாள்).
மண்ணார் குலைவாழை உள்தொடுத்த தேன்நமதென்று உண்ணாப்பூந் தாமரைப் பூவுள்ளும் - கண்ணார் வயலூரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள் மயல் ஊ ரரவர் மகள். |
140 |
மண்ணிடத்தே படிந்த குலையினையுடைய வாழை மரத்தினிடத்தே வைக்கப்பெற்ற தேனினை நம்முடைய தென்று நினைத்து உண்டு மயக்க (முற்ற) (மருத நிலத்துார்த்) தலைவரின் மகளாகிய தலைவி அழகிய தமாரைப் பூவினிடத்திலும் தன் கண்ணிடத்தே நிறைந்து நின்றுள்ள மருத நிலைத்துார்த் தலைவனின் நிறவழகினை கண்டு (மாலை) தொடுத்தலைச் செய்வாள். (என்று செவிலிக்குத் தோழிகூறினாள்.)
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், கூறினாள், அழகிய, மருத, திணைமாலை, பெரிய, தலைவி, நூற்றைம்பது, கீழ்க்கணக்கு, பதினெண், தாமரைப், என்றுதலைவி, தோழியிடங், காஞ்சி, போன்று, தலைவரின், வளர்ந்த, மலர்களை, சென்று, சங்க