பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
இம்மைத் தவமும், அறமும், என இரண்டும், தம்மை உடையார் அவற்றைச் சலம் ஒழுகல், இம்மைப் பழி ஏயும்; அன்றி, மறுமையும், தம்மைத் தாம் ஆர்க்கும் கயிறு. |
371 |
தம்மை வீட்டின்கண் செலுத்தும் விருப்பம் உடையார் தாம் இப் பிறப்பின்கண்ணே செய்யும் தவமும் அறமும் ஆகிய இவ்விரண்டு நெறியின்கண்ணும் அவற்றை வஞ்ச மனத்தராய்ச் செய்தல் இம்மையின்கண் பழியை உண்டாக்குதலே யல்லாமல் மறுபிறப்பின்கண்ணும் நிரயத்தினின்றும் தாம் வெளியேறாதவாறு தம்மை இறுகக் கட்டி வீழ்த்தும் கயிறாகவும் ஆகும்.
கருத்து:வஞ்ச மனத்தராய்த் தவமும் அறமும் புரிந்தொழுகுவார் பழியையும், நிரயத்தையும் அடைந்து துன்புறுவர்.
33. ஈகை
சிறிய பொருள் கொடுத்துச் செய்த வினையால், பெரிய பொருள் கருது வாரே;-விரி பூ விராஅம் புனல் ஊர!-வேண்டு அயிரை இட்டு, வராஅஅல் வாங்குபவர். |
372 |
விரிந்த பல பூக்களும் கலந்திருக்கின்ற நீர் நாடனே! இம்மையில் தம்மாலியன்ற சிறிய பொருளை உள்ளன்போடு வறியோர்க் கீந்து வந்த நல்வினையால் மறுமையின்கண் மிக்க செல்வத்தைப்பெற நினைப்பவர்கள் விரும்பப்படும் அயிரை யென்னும் சிறு மீனைத் தூண்டிலிற் கோத்துவிட்டு பெரியவரால்மீனை இழுப்பவரோடொப்பர்.
கருத்து: அறிவுடையோர் இம்மையில் இயன்ற அறத்தைச் செய்து மறுமையில் மிக்கபேற்றைப் பெறுவர்.
கரப்புடையார் வைத்த, கடையும் உதவா, துரப்புடைய மன்னர்க்கே துப்புரவு; அது அல்லால், நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல்- சுரத்திடைப் பெய்த பெயல். |
373 |
வறியோர்க் கீயாது மறைத்து வைப்பவர்கள் அரிதின் முயன்று பகைவரைக் கடிதலுடைய அரசர்க்கே பயன்படுவதல்லாமல் அவன்வழி வந்தவர்க்கும் உதவுவதில்லை. (அங்ஙனமின்றி) வறுமையால் துன்பம் மிகுந்தவர்களுக்கு பயன்படுமாறு ஒரு பொருளை ஈதல் பாலைநிலத்தின்கண் சொரியப்பட்ட மழைநீரைஒக்கும்.
கருத்து: புதைத்துவைத்தலின்றிப் பொருளைவறியோர்க்கு ஈவாயாக.
பல் ஆண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது வல்லான் தெரிந்து வழங்குங்கால், வல்லே வளம் நெடிது கொண்து அறாஅது;-அறுமோ, குளம் நெடிது கொண்டது நீர்? |
374 |
மிகுந்த நீரைக் கொண்டதாகிய குளம் இறைத்தால் நீர் வற்றுதல் உண்டோ? (இல்லை.) (அதுபோல்) பல ஆண்டுகளாக ஒன்றுசேர்ந்து குற்றமுடைய தாய்க் கிடந்த பொருளை கொடைவல்லா னொருவன் செய்யும் நெறியறிந்து அதனை வறியோர்க்கு விரைந்து வழங்குமிடத்து செல்வத்தை மிகுதியாகக் கொண்ட அது கெடுதல் இல்லை.
கருத்து: ஈதலாற் செல்வம்குறைபடுதல் இல்லை.
'நினைத்தது இது' என்று, அந் நீர்மையை நோக்கி, மனத்தது அறிந்து ஈவார் மாண்டார்;-புனத்த குடிஞை இரட்டும் குளிர் வரை நாட!- கடிஞையில் கல் இடுவார் இல். |
375 |
புனத்தின்கண் கோட்டான்கள் கூப்பாடு செய்கின்ற குளிர்ந்த மலையை உடைய நாடனே! இரக்கும் பாத்திரத்தில் அன்னமிடுவதன்றிக் கற்களை இடுவார் இல்லையாதலால் வருகின்ற தன்மையைப் பார்த்து இவன் கருதி வந்த பொருள் இதுவென்று முகத்தான் அறிந்து மனத்தின் அளவை அறிந்து கொடுக்கின்றவர்களே அறத்தான் மாட்சிமைஉடையவராவர்.
கருத்து:வறியோர் வேண்டும் பொருளைக் குறிப்பறிந்து கொடுப்பாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 73 | 74 | 75 | 76 | 77 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், இல்லை, பழமொழி, பொருள், பொருளை, நீர், அறிந்து, தாம், தம்மை, கீழ்க்கணக்கு, தவமும், பதினெண், நானூறு, அறமும், ஈதல், வந்த, இடுவார், வறியோர்க், குளம், நெடிது, சிறிய, உடையார், சங்க, செய்யும், வஞ்ச, நாடனே, அயிரை, இம்மையில்