பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

பட்ட வகையால் பலரும் வருந்தாமல் கட்டு உடைத்தாகக் கருதிய நல்லறம், முட்டு உடைத்தாகி, இடை தவிர்ந்து வீழ்தலின், நட்டு அறான் ஆதலே நன்று. |
366 |
அறம் செய்வதற்குப் பொருந்திய நெறியால் பலரும் வருந்தாதவாறு தனக்கு உறுதி உடைத்தாகுமாறு கருதிச் செய்தொழுகிய நல்லறத்தை இடையூறுடைத்தாகி அதனான் இடையிலே நிறுத்தி ஒழிதலைவிட பயிரை நட்டுவைத்து அதனைஅறுத்துப் பயன்பெறா தொழிந்தானெனப்படுதலே நல்லது.
கருத்து: அறஞ் செய்வார் இடர்ப்பாடு நோக்கி இடைநிறுத்தலாகாது.
பல நாளும் ஆற்றார் எனினும், அறத்தைச் சில நாள் சிறந்தவற்றால் செய்க!-கலை தாங்கி நைவது போலும் நுசுப்பினாய்!-நல்லறம் செய்வது செய்யாது, கேள். |
367 |
மேகலையைத் தாங்கி இறுவது போலும் நுசுப்பினை உடையாய் நல்லறம் செய்யும் நன்மையைச் சுற்றத்தார் செய்யார் (ஆதலால்) பல நாட்களும் அறத்தைச் செய்யாராயினும் அறத்தைச் சில நாளாயினும்சிறந்த நெறிகளாற் செய்துய்வாயாக.
கருத்து: அறத்தைச் சில நாளாயினும்செய்துய்க.
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண், நோக்கப் படினும், உணங்கலைப் புள் கவரும்;- போற்றிப் புறந்தந் தகப்பட்ட ஒண் பொருட்கும் காப்பாரின் பார்ப்பார் மிகும். |
368 |
வெயிலில் காயும் பொருள்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இமை கொட்டும் அளவிலே எங்ஙனம் காவல் செய்து கொள்ளப்படினும் அவ்வுணங்கலைப் புட்கள் திருடிச்செல்லும். (அதுபோல) அரண் செய்து பாதுகாத்துத் தமக்காக வைக்கப்பட்டிருக்கும் ஒள்ளிய பொருளுக்கும். காவல் செய்வாரைவிட அதனைக் கொள்ளப்பார்க்கின்றவர்கள் மிகப் பலராவர்.
கருத்து: பொருளைக் கொள்ளப் பார்க்கின்றவர்கள் பலராதலின், உடனேஅறஞ் செய்துவிடுதல் நல்லது.
இன்றி அமையா இரு முது மக்களைப் பொன்றினமை கண்டும், பொருள் பொருளாக் கொள்பவோ? ஒன்றும் வகையான் அறம் செய்க! ஊர்ந்து உருளின் குன்று, வழி அடுப்பது இல். |
369 |
தம்மையின்றி உயிர் வாழாத இருவராகிய முதிய தாயும் தந்தையும் தாந் தேடிய பொருளையும் தம்மையும் விட்டுவிட்டு இறந்தமையை அறிந்தும் செல்வத்தை ஒரு பொருளாக மனத்தில் கொள்வார்களோ? பொருந்தும் நெறியான் அறத்தைச் செய்துய்க மலை ஊர்ந்து உருண்டு செல்லுமாயின் அதனைவழி நின்று தடுப்பது ஒன்றுமில்லை யாதலின்.
கருத்து: செல்வத்திற்கே யன்றி உனக்கும் நிலையாமை உண்மையால் உடனேஅறம் செய்க.
அற்றாக நோக்கி அறத்திற்கு அருள் உடைமை முற்ற அறிந்தார் முதல் அறிந்தார்; தெற்ற முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்- முயல் விட்டுக் காக்கை தினல். |
370 |
அறத்தினுக்கு அருள் உடையரா யிருத்தல் பண்பாதலை ஆராய்ந்து அதன் திறனை முழுதும் அறிந்தார்கள் காரணம் அறிந்து அறம் செய்வாரெனப்படுவார் தெளிவாக காரணமாகிய அருளைவிட்டு திறந் தெரியாமையான் அவ்வறத்தையும் கைவிட்டாருடைய பாதுகாவாத கொடை நிலத்தில் கண்ணோடும் முயலைவிட்டு ஆகாயத்தின்கண் செல்லும் காக்கையைப் பின் தொடர்ந்து சென்று தின்ன முயலுதலை யொக்கும்.
கருத்து:அருளோடு கூடிய அறம் சிறந்தது என்றது இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 72 | 73 | 74 | 75 | 76 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, அறத்தைச், கருத்து, இலக்கியங்கள், அறம், பழமொழி, பதினெண், நானூறு, செய்க, நோக்கி, கீழ்க்கணக்கு, நல்லறம், ஊர்ந்து, செய்து, அருள், அறிந்தார், காவல், தாங்கி, பலரும், சங்க, நல்லது, போலும்