பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

மாய்வதன் முன்னே, வகைப்பட்ட நல் வினையை ஆய்வு இன்றிச் செய்யாதார், பின்னை வழி நினைந்து, நோய் காண் பொழுதின், அறம் செய்வார்க் காணாமை, நாய் காணின் கல் காணாவாறு. |
361 |
உணர்வு அழிவதன் முன்னே பல திறத்த செயல்களான் வரும் அறங்களை ஆராய்தலின்றிச் செய்யாதவர்கள் பிற்காலத்தில் செய்வோம் என்று நினைத்திருந்து நோய்கள் சூழ்ந்து நின்று தமக்கு இறுதியை ஆராயும்பொழுது தாம் கூறியபடி அறம் செய்வாரைக் காணாதிருத்தல் நாயைக் கண்ட பொழுது கல் மறைதலை யொக்கும்.
கருத்து: அறத்தைப் பொருள் பெற்றபொழுதே ஆராய்தலின்றி உடனேசெய்க.
தக்கம் இல் செய்கைப் பொருள் பெற்றால், அப்பொருள் தொக்க வகையும் முதலும் அது ஆனால், 'மிக்க வகையால் அறம் செய்!' என, வெகுடல்,- அக்காரம் பால் செருக்குமாறு. |
362 |
மாறுபாடில்லாத செயல்களை உடைய செல்வத்தை ஒருவன் பெற்றால் அச் செல்வம் திரண்டு வந்த திறனும் அதற்குக் காரணமாயிருப்பதும்அறமேயென் றறியப்படுமானால் பலதிறப்பட்ட நெறியால் அறம் செய் யென்று ஒருவன் சொல்ல அவனைச் சினத்தல் சர்க்கரை கலந்த பாலை உட்கொள்ளாது குமட்டித் துப்புதலை யொக்கும்.
கருத்து: அறத்தாற் பொருள் பெறலா மென் றறிபவன் பலதிறப்பட்ட நெறியால் அறமியற்றக் கடவன்.
உலப்பு இல் உலகத்து உறுதியை நோக்கிக் குலைத்து அடக்கி நல்லறம் கொள்ளார்க் கொளுத்தல்- மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர் அலைத்துப் பால் பெய்துவிடல். |
363 |
அழிவில்லாத உலகத்து அடையும் உறுதியாகிய நன்மையை நோக்கி நல்ல அறநெறியைக் கைக்கொள்ளாதாரை அந் நெறியினின்றும் நீக்கி அடக்கி அறநெறியைக் கொள்ளுமாறு அறிவு கொளுத்துதல் மாறுபட்டு அழுதுகொண்டு பாலுண்ணாத குழந்தைகளை தாய்மார்கள் வருத்திப் பால் உண்பித்தலை யொக்கும்.
கருத்து: அறிவுடையோர் அஃதிலராகித் தீநெறியிற் செல்லும் மடவோரை அடக்கி அறிவு கொளுத்துக.
அறம் செய்பவர்க்கும், அறவுழி நோக்கி, திறம் தெரிந்து செய்தக்கால், செல்வுழி நன்று ஆம்;- புறம் செய்ய, செல்வம் பெருகும்; அறம் செய்ய, அல்லவை நீங்கி விடும். |
364 |
செல்வத்திற்கு வேண்டும் புறச் செயல்களைச் செய்ய அதனால் செல்வம் வளரும் அறங்களைச் செய்ய அதனால் பாவங்கள் பற்றுதலைவிட்டு ஒழியும் (ஆதலால்) அறங்களைச் செய்கின்றவர்களுக்கும் அறஞ்செய்யு மிடத்தை ஆராய்ந்து செய்யும் கூறுபாட்டை அறிந்து செய்தால் செல்லுகின்ற மறுமையுலகின்க ணின்பமுண்டாகும்.
கருத்து: அறஞ்செய்வார்இடனும் செய்யும் கூறுபாடும் அறிந்து செய்க.
தோற்றம் அரிது ஆய மக்கட் பிறப்பினால், ஆற்றும் துணையும் அறம் செய்க!-மாற்று இன்றி, அஞ்சும் பிணி, மூப்பு, அருங் கூற்றுடன் இயைந்து, துஞ்சு வருமே, துயக்கு! |
365 |
அறிவின் மயக்கம் அஞ்சத் தகும் நோய், மூப்பு, அருங்கூற்று என்ற இவைகளுடன் சேர்ந்து, தடையில்லாது இறந்துபடுமாறு வந்து சேரும். (ஆதலால்), தோன்றுதற்கருமையாகிய இம் மக்கள் பிறப்பைப் பெற்றதனால், ஒல்லும் வகையான் அறவினையைச் செய்க.
கருத்து: ஒவ்வொருவரும் தத்தமக் கியலுமாற்றான்அறம் செய்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 71 | 72 | 73 | 74 | 75 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, அறம், கருத்து, செய்க, செய்ய, இலக்கியங்கள், பால், பழமொழி, செல்வம், அடக்கி, பதினெண், பொருள், நானூறு, யொக்கும், கீழ்க்கணக்கு, மூப்பு, அறிவு, அதனால், அறிந்து, செய்யும், ஆதலால், அறநெறியைக், அறங்களைச், ஒருவன், நோய், முன்னே, சங்க, பெற்றால், செய், உலகத்து, நெறியால், பலதிறப்பட்ட, நோக்கி