நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு
கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும் விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும், ஆக்கம் சிதைக்கும் வினை. |
11 |
ஒருவர் செய்த தீமைகளுக்காக அவரைக் கறுவாமை வேண்டும். ஆனால் அவர் செய்த நன்மைகளை மறவாமை வேண்டும். நம்மிடம் தோன்றும் கோபத்தை விட வேண்டும். பிறரது முன்னேற்றத்தைத் தடுக்கும் தவறான செயல்களை ஒழித்தல் வேண்டும்
பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறு கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி, முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர் தவத்தின் தருக்குவர், நோய். |
12 |
பாம்பு தன்னுடைய பல்லினால் பிறருக்குத் துன்பம் தரும். கொல்லும் தன்மை கொண்ட காளை தன்னுடைய கொம்புகளால் பிறருக்குத் துன்பத்தைத் தரும். பெண்கள் தங்களின் ஊடலால் ஆண்களைத் துன்பப்படுத்துவர். தவ வலிமை கொண்ட முனிவர்கள் பிறரைச் சபிப்பதால் துன்பத்தைக் கொடுப்பர்.
பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்ற பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின் தீர்தலின் தீப் புகுதல் நன்று. |
13 |
பண் அமையாத யாழிசையை விட பேரோசை கொண்ட பறையே மேலானது. பெருந்தன்மை இல்லாத ஆண்மகனைவிட கற்புடன் திகழும் பெண்கள் உயர்வானவர். பதங்கெட்டு சுவையற்ற உணவை உண்ணுவதைவிட பசியுடன் இருத்தல் நல்லது. தன்னை விரும்பிய கணவனைப் பிரிந்து உயிர்வாழும் கொடுமையை விட தீயில் விழுந்து உயிர் விடுதல் நன்று.
வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம் இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல், கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம், இன்மைக் குழியுள் விரைந்து. |
14 |
செல்வ வளம் எனும் பாத்தியுள் ஈகைக் குணம் வளரும். இன்சொல் எனும் பாத்தியுள் உறவினர் கூட்டம் வளரும். கருணையற்ற கடுஞ்சொற்களைப் பேசும் பாத்தியுள் வஞ்சனை வளரும். வறுமையாகிய பாத்தியுள் இரத்தல் எனும் பயிர் விளையும்.
இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது வேண்டின், வெகுளி விடல்! |
15 |
ஒருவன் தனக்கு இழிவு வரவேண்டுமானால் பிறரிடம் கையேந்த வேண்டும். இந்நிலத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் புகழ் உண்டாகும்படியான செயலைச் செய்ய வேண்டும். தான் இறந்த பிறகு தன்னுடன் துணை வர வேண்டுமானால் தருமம் செய்ய வேண்டும். பிறரை வெற்றிக் கொள்ள வேண்டுமானால் கோபத்தை விட வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, வேண்டும், நன்று, பாத்தியுள், வளரும், நோய், வேண்டின், இலக்கியங்கள், நான்மணிக்கடிகை, குழியுள், எழூஉம், கொண்ட, எனும், வேண்டுமானால், பதினெண், கீழ்க்கணக்கு, செய்த, இரவு, செய்ய, பிறருக்குத், கோபத்தை, வெகுளி, சங்க, செய்யும், பாம்பு, தரும், தன்னுடைய, பெண்கள்