நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு
திரு ஒக்கும், தீது இல் ஒழுக்கம்; பெரிய அறன் ஒக்கும், ஆற்றின் ஒழுகல்; பிறனைக் கொலை ஒக்கும், கொண்டு கண்மாறல்; புலை ஒக்கும், போற்றாதார் முன்னர்ச் செலவு. |
6 |
நல்லொழுக்கம் செல்வம் போன்றது. முறையான இல்லற ஒழுக்கம் துறவறத்தைப் போன்று தூய்மையானது. பிறரைப் பழித்துப் புறங்கூறுதல் கொலை செய்தல் போன்றது. தம்மை மதியாதவரை மதித்தல் என்பது இழிதகைமையானது ஆகும்.
'கள்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; காதலி மாட்டு உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; 'ஒண் பொருள் செய்வம்!' என்பார்க்கும் துயில் இல்லை; அப் பொருள் காப்பார்க்கும் இல்லை, துயில். |
7 |
திருடர்களுக்கும் தூக்கம் இல்லை. ஒரு பெண்ணை விரும்பும் தலைமகனுக்கும் தூக்கம் இல்லை. செல்வத்தை ஈட்டுபவனுக்கும் தூக்கம் இல்லை. அச்செல்வத்தைத் திருடு போகாது காப்பாற்றுபவனுக்கும் தூக்கம் இல்லை.
கற்றார்முன் தோன்றா, கழிவு இரக்கம்; காதலித்து ஒன்று உற்றார்முன் தோன்றா, உறா முதல்; தெற்றென அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா; எல்லாம் வெகுண்டார் முன் தோன்றா கெடும். |
8 |
இழந்த பொருள்களுக்காக வருந்துதல் கற்றுணர்ந்த பெரியோர்களுக்கு இல்லை. சிறந்த நிலையை அடைய ஊக்கத்துடன் செயல்படுபவரிடத்து அந்நிலை விரைவில் கிட்டவில்லையே என்ற முயற்சித் துன்பம் இல்லை. அறத்தின் நல் இயல்பைத் தீயவர்கள் அறிய முடியாது. கோபம் கொள்பவர் முன் எல்லா நன்மைகளும் புலப்படாமல் போகும்.
நிலத்துக்கு அணி என்ப, நெல்லும் கரும்பும்; குளத்துக்கு அணி என்ப தாமரை; பெண்மை நலத்துக்கு அணி என்ப, நாணம்; தனக்கு அணி தான் செல் உலகத்து அறம். |
9 |
நெல்லும், கரும்பும், வயலுக்கு அழகு சேர்க்கும். தாமரை மலர்கள் குளத்துக்கு அழகு சேர்க்கும். நாணம் பெண்ணுக்கு அழகு. மறுபிறவியில் வீடுபேறு அடைய செய்யப்படும் அறம் ஒருவனுக்கு அழகாகும்.
கந்தில் பிணிப்பர், களிற்றை; கதம் தவிர, மந்திரத்தினால் பிணிப்பர், மா நாகம்; கொந்தி, இரும்பின் பிணிப்பர், கயத்தை; சான்றோரை நயத்தின் பிணித்துவிடல்! |
10 |
யானையைக் கட்டுத் தறியினாலும், பாம்பை மந்திரத்தாலும், கீழ்மக்களைக் கொடிய இரும்பு விலங்காலும் வயப்படுத்துவர். சான்றோரை இன் சொற்களால் தன்வயப்படுத்துவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இல்லை, துயில், தோன்றா, ஒக்கும், தூக்கம், இலக்கியங்கள், பதினெண், அறம், நான்மணிக்கடிகை, என்ப, கீழ்க்கணக்கு, பிணிப்பர், அழகு, குளத்துக்கு, சான்றோரை, தாமரை, சேர்க்கும், கரும்பும், நாணம், முன், போன்றது, கொலை, ஒழுக்கம், என்பார்க்கும், சங்க, அடைய, பொருள், நெல்லும்