நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு
வாலிழையார் முன்னர் வனப்பு இலார் பாடு இலன்; சாலும் அவைப்படின், கல்லாதான் பாடு இலன்; கற்றான் ஒருவனும் பாடு இலனே, கல்லாதார், பேதையார், முன்னர்ப்படின். |
96 |
அழகிய பெண்டிர்க்கு முன்னால் அழகில்லாத ஆண்கள் பெருமையடைதல் இல்லை. கற்றவர் கூடிய அவையில் கல்லாதவன் பெருமையடைதல் இல்லை. கல்லாதார் முன்பு கற்றானும் பெருமையடைதல் இல்லை. அறிவிலார் முன்பும் அறிஞர் பெருமையடைதலில்லை.
மாசு படினும், மணி தன் சீர் குன்றாதாம்; பூசுக் கொளினும், இரும்பின்கண் மாசு ஒட்டும்; பாசத்துள் இட்டு, விளக்கினும், கீழ் தன்னை மாசுடைமை காட்டிவிடும். |
97 |
அழுக்கு சேர்ந்தாலும் நன்மணியின் பெருமை குறையாது. கழுவி எடுத்தாலும் இரும்பில் மாசு உண்டாகும். கீழ் மக்களிடத்து பாசத்தைக் காட்டினாலும் அவர்கள் தங்கள் கீழ்மைத் தன்மையைக் காட்டிவிடுவர்.
எண் ஒக்கும், சான்றோர் மரீஇயாரின் தீராமை; புண் ஒக்கும், போற்றார் உடனுறைவு; பண்ணிய யாழ் ஒக்கும், நாட்டார் கழறும் சொல்; பாழ் ஒக்கும், பண்பு உடையாள் இல்லா மனை. |
98 |
சான்றோர்களைப் பிரியாமை அறிவுடைமையாகும். தம்மைப் போற்றி இணங்காதவரோடு வாழ்தல் புண்ணுக்கு நிகராகும். நண்பர்கள் இடித்துரைக்கும் சொல் வலியதாயினும் யாழோசைப்போல இனிமையுடையதாகும். மனைவி இல்லாத வீடு பாழ் மனையாகும்.
ஏரி சிறிதுஆயின், நீர் ஊரும்; இல்லத்து வாரி சிறிதுஆயின், பெண் ஊரும்; மேலைத் தவம் சிறிதுஆயின், வினை ஊரும்; ஊரும், உரன் சிறிதுஆயின், பகை. |
99 |
ஏரி சிறிதாக இருந்தால் நீர் வழிந்து போய்விடும். வீட்டில் வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவாள். முன் தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும். வலிமை குறைந்தால் பகைவர் வென்றிடுவர்.
அலைப்பான், பிறது உயிரை ஆக்கலும் குற்றம்; விலைப்பாலின் கொண்டு, ஊன் மிசைதலும் குற்றம்; சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்; கொலைப்பாலும் குற்றமே ஆம். |
100 |
பிற உயிரை அழிப்பதற்காக வளர்த்தலும் குற்றம். விலை கொடுத்து பிற உயிரை வாங்கி அதன் ஊனை உண்ணுதல் குற்றம். சொல்லத் தகாத சொற்களைப் பேசுவதும் குற்றம். கொலை புரிதலும் குற்றமேயாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, குற்றம், சிறிதுஆயின், ஒக்கும், இலக்கியங்கள், ஊரும், நான்மணிக்கடிகை, உயிரை, இல்லை, மாசு, பாடு, கீழ்க்கணக்கு, பதினெண், பெருமையடைதல், தவம், நீர், சங்க, பாழ், கல்லாதார், கீழ், இலன், சொல்