நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு
பிணி அன்னர் பின் நோக்காப் பெண்டிர்; உலகிற்கு அணி அன்னர், அன்புடைய மக்கள்; பிணி பயிலும் புல் அன்னர், புல் அறிவின் ஆடவர் கல் அன்னர், வல்லென்ற நெஞ்சத்தவர். |
31 |
அடுத்து வருவதையுணர்ந்து நடந்து கொள்ளாத பெண்டிர் நோய்க்கு ஒப்பாவர். அன்புடைய மக்கள் அணிகலனுக்கு நிகராவர். சிற்றறிவுடைய ஆடவர் புல்லுக்கு நேராவர். வன்மையான நெஞ்சம் உடையவர் கல்லுக்கு இணையாவர்.
அந்தணரின் மிக்க பிறப்பு இல்லை; என் செயினும், தாயின் சிறந்த தமர் இல்லை; யாதும் வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை; எண்ணின், இளமையோடு ஒப்பதூஉம் இல். |
32 |
அருள் குணம் கொண்ட அந்தணரைப் போன்ற உயர்பிறப்பு இல்லை. தாயை விடச் சிறந்த உறவு வேறு இல்லை. செல்வ வளத்துடன் கூடிய வாழ்க்கைக்கு ஒப்பான அழகு வேறு இல்லை. இளமையைப் போன்று இன்பமானதும் வேறு இல்லை.
இரும்பின் இரும்பு இடை போழ்ப; பெருஞ் சிறப்பின் நீர் உண்டார் நீரான் வாய் பூசுப; - தேரின், அரிய அரியவற்றால் கொள்ப; பெரிய பெரியரான் எய்தப்படும். |
33 |
இரும்புக் கருவிகளைக் கொண்டே இரும்பை வெட்டுவர். பாயசம் முதலான சிறந்த நீருணவுகளை உண்டோர் நீரினாலேயே வாயைக் கழுவுவர். அரிய செயல்களை அரிய முயற்சியினாலேயே செய்து முடிப்பர். பெறற்கரிய பெரிய பேறுகளையும் பெரியோரே அடைவர்.
மறக் களி மன்னர் முன் தோன்றும்; சிறந்த அறக் களி இல்லாதார்க்கு ஈயும் முன் தோன்றும்; வியக் களி நல்கூர்ந்தார் மேற்றாம்; கயக் களி ஊரில் பிளிற்றிவிடும். |
34 |
அரசனுக்கு முன்னால் போரிடும் போது வீரர்களுக்கு வீரக்களிப்பு உண்டாகும். வறியார்க்கு ஒன்றீவதே செல்வர்கட்கு உண்மையான ஈகைக் களிப்பாம். ஒன்றைப் பெற்று வியக்கும் களிப்பு ஏழைகட்குண்டு. கீழ்மகனது கீழ்மையாலான களிப்பு ஊரெல்லாம் தெரிவித்து ஆரவாரம் செய்தலேயாகும்.
மையால் தளிர்க்கும், மலர்க்கண்கள்; மால் இருள், நெய்யால் தளிர்க்கும், நிமிர் சுடர்; பெய்ய முழங்கத் தளிர்க்கும், குருகிலை; நட்டார் வழங்கத் தளிர்க்குமாம், மேல். |
35 |
குவளை மலர் போன்ற கண்கள் மையிடுதலால் விளங்கும். விளக்கு நெய்விடுதலால் நிமிர்ந்தெரியும். குருக்கத்தி மழை முழக்கத்தால் இலை தளிர்க்கும். சான்றோர் பிறருக்குக் கொடுப்பதால் தளிர்ப்பர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இல்லை, சிறந்த, இலக்கியங்கள், அன்னர், தளிர்க்கும், அரிய, கீழ்க்கணக்கு, வேறு, பதினெண், நான்மணிக்கடிகை, முன், களிப்பு, தோன்றும், பெரிய, புல், பிணி, சங்க, பெண்டிர், அன்புடைய, மக்கள், ஆடவர்