கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு

நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட தலை நாள் விளக்கின் தகை உடையவாகி, புலம் எலாம் பூத்தன தோன்றி; - சிலமொழி!- தூதொடு வந்த, மழை. |
26 |
சிலவாகிய மொழியினையுடையாய்..தோன்றிப்பூக்கள் நன்மைமிக்க கார்த்திகைத் திருவிழாவில் நாட்டிலுள்ளோர் கொளுத்தி வைத்த முதல்நாள் விளக்கைப் போல அழகுடையனவாகி இடமெல்லாம் பூத்தன.மழையும் தூதுடனே வந்தது.
(கார்த்திகை நாளில் நிரை நிரையாக விளக்கிட்டு விழாக் கொண்டாடும் வழக்கம் பண்டைநாள் தொட்டுள்ளது)
முருகியம்போல் வானம் முழங்கி இரங்க, குருகிலை பூத்தன கானம்; பிரிவு எண்ணி, 'உள்ளாது அகன்றார்' என்று ஊடி யாம் பாராட்ட, பள்ளியுள் பாயும், பசப்பு. |
27 |
மேகம் குறிஞ்சிப் பறைபோல முழங்குதலைச் செய்ய, காட்டில் குருக்கத்தியிலை விரிந்தன.(நம் காதலர்கள்) பிரிதலை நன்றென்று நினைத்து, நம் வருத்தத்தைக் கருதாது சென்றார் என்று, நாம் ஊடுதலைப் பாராட்டுவதால் பசலை நோய் படுக்கையிடத்தில் பரவும்.
இமிழ் இசை வானம் முழங்க, குமிழின் பூப் பொன் செய் குழையின் துணர் தூங்க, தண் பதம் செல்வி உடைய, சுரம் - நெஞ்சே! - காதலி ஊர் கவ்வை அழுங்கச் செலற்கு. |
28 |
ஒலிக்கும் இசையினையுடைய வானம் முழங்குதலைச் செய்ய குமிழின் பூக்கள் பொன்னாற் செய்யப்பட்ட குழை போல கொத்துக்களாய் தொங்க, மனமே ,,நம் காதலியின் ஊருக்கு அலர்கெடும் வகை நாம் செல்வதற்கு காடுகள் குளிர்ந்த பதமும் செவ்வியும் உடையவாயின. (அலர் _ஊரார் கூறும் பழிசொல்)
பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன; தங்காத் தகை வண்டு பாண் முரலும், கானம்; பகை கொண்டல் எவ்வெத் திசைகளும் வந்தன்று; சேறும் நாம், செவ்வி உடைய சுரம். |
29 |
சோலைகளெல்லாம் பக்கங்களில் பூத்தன.காட்டின் கண்ணே தங்குதலின்றித் திரியும் அழகையுடைய வண்டுகள் இசைப்பாட்டைப் பாடா நின்றன.பகைத்தெழுந்த மேகம் எல்லாத் திசைகளிலும் வந்தது.காடுகளும் தட்பமுடையவாயின.(ஆதலால்)நாம் செல்லக் கடவேம்.
வரை மல்க, வானம் சிறப்ப, உறை போழ்ந்து இரு நிலம் தீம் பெயல் தாழ, விரை நாற, ஊதை உளரும், நறுந் தண் கா, பேதை பெரு மடம் நம்மாட்டு உரைத்து. |
30 |
மலைகள் வளம் நிறைய வானம் சிறப்பெய்த பெரிய பூமியைய் துளிகளால் ஊடறுத்து இனிய மழை விழாமல் நிற்க, நறுமணம் கமழா நிற்க உதைக் காற்றனாது காதலியின் தலைவன் வரமாட்டான் என கருதி வருந்தியிருக்கும் அறியாமையை நமக்குத் தெரிவித்து, நறிய குளிர்ந்த சோலையில் அசையாமல் நிற்கும்.(ஆதலால்) நீ விரைவில் செல்வாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, வானம், நாம், இலக்கியங்கள், பூத்தன, நாற்பது, கார், பதினெண், கீழ்க்கணக்கு, சுரம், உடைய, காதலியின், ஆதலால், குளிர்ந்த, நிற்க, குமிழின், கானம், கார்த்திகை, சங்க, வந்தது, மேகம், முழங்குதலைச், செய்ய