கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
சிரல்வாய் வனப்பின ஆகி, நிரல் ஒப்ப ஈர்ந் தண் தளவம் தகைந்தன; சீர்த்தக்க செல்வ மழை மதர்க் கண், சில் மொழி, பேதை ஊர் நல் விருந்து ஆக, நமக்கு. |
36 |
குளிர்ச்சிமிக்க செம்முல்லைப் பூக்கள் மீன் குத்திக் குருவியின் வாய் போலும் அழகுடையவனாகி வரிசை பொருந்த அரும்பின.(ஆதலினால் இப்போது)செல்வத்தையுடைய மழைபோல குளிர்ந்த மதர்த்த கண்களையும் சிலவாகிய மொழியினையுமுடைய காதலியது ஊரானது நமக்கு நல்ல விருந்தாகுமிடமாகட்டும்.
கருங் கடல் மேய்ந்த கமஞ் சூழ் எழிலி இருங் கல் இறு வரை ஏறி, உயிர்க்கும் பெரும் பதக் காலையும் வாரார்கொல், வேந்தன் அருந் தொழில் வாய்த்த நமர்? |
37 |
கரிய கடலின் நீரைக் குடித்த , நிறைந்த சூலினையுடைய மேகம் இரு பெரிய கற்களையுடைய பக்க மலையின் மேல் ஏறியிருந்து நீரைச் சொரியும் மிக்க செவ்வியையுடைய காலத்தும் அரசனது போர்த்தொழில் வாய்க்கப்பெற்ற நம் தலைவர் வாராதிருப்பாரோ!.
புகர் முகம் பூழிப் புரள, உயர் நிலைய வெஞ் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும் தண் பதக் காலையும் வாரார்; எவன் கொலோ,- ஒண்டொடி! - ஊடும் நிலை? |
38 |
உயர்ந்த நிலையினையுடைய கடுங்கோபம் கொண்ட ஆண் யானைகள் புள்ளிமையுடைய முகம் புழுதியில் புரளும் வகையில் பெண் யானைகளுடன் கூடி விளையாடும் குளிர்ந்த செவ்வியையுடைய காலத்திலும் தலைவர் வரவில்லை (ஆதலால்) ஒள்ளிய தொடியினையுடையாளே அவருக்காக ஊடல் கொள்வதில் பயன் என்ன?
அலவன் கண் ஏய்ப்ப அரும்பு ஈன்று அவிழ்ந்த கருங் குரல் நொச்சிப் பசுந் தழை சூடி, இரும் புனம் ஏர்க் கடிகொண்டார்; பெருங் கெளவை ஆகின்று, நம் ஊர் அவர்க்கு. |
39 |
வண்டின் கண்ணினை ஒப்ப அரும்பினை ஈன்று, பின் மலர்ந்த கரிய பூங்கொத்தினையுடைய நொச்சியினது பழைய தழையைச் சூடிக் கொண்டு , பெரிய புனங்களை உழவர் புதிதாக ஏர் விழுக்கத் தொடங்கினார்கள் (ஆதலால்) நம் ஊரின் கண் நம் தலைவர்க்கு பெரிய அலராயிற்று.
பருவம் காட்டித் தலைமகளைத் தோழி
வற்புறுத்தியது
'வந்தன செய் குறி; வாரார் அவர்' என்று நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி, இந்தின் கரு வண்ணம் கொண்டன்று, எழில் வானம்; ஈந்தும், - மென் பேதை! - நுதல். |
40 |
மெல்லிய பேதையே! தலைவர் செய்த குறிகள் வந்து விட்டன. அவர் வரமாட்டார் என வருத்தப்பட்ட ஒருத்தியாகிய உனக்கு நோயைத் தீர்க்கும் மருந்தாகி, அழகிய முகில் ஈந்தின் கனியின் நிறம் போல கொண்டது உன் நுதல் இனி ஒளி வரப் பெறும். (என தோழி மகிழ்ந்து தலைவியிடம் கூறினாள்))
சிறப்புப் பாயிரம்
முல்லைக் கொடி மகிழ, மொய் குழலார் உள் மகிழ, மெல்லப் புனல் பொழியும் மின் எழில் கார்; - தொல்லை நூல் வல்லார் உளம் மகிழ, தீம் தமிழை வார்க்குமே, சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து. |
முல்லைக் கொடிகள் மகிழ்ந்து மணம் வீச, கரிய கூந்தலையுடைய பெண்கள் உள்ளம் மகிழ, மழை பொழியும் மின்னலை உடைய கார் மேகத்தினைக் கொண்டு, கற்றறிந்தார் தீம் தமிழை வளர்க்கும் என்று மகிழ கார் நாற்பது என்ற இந்நூல் இருக்கிறது.
கார் நாற்பது முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, கார், நாற்பது, மகிழ, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, பதினெண், பெரிய, கரிய, தலைவர், அவர், தோழி, கொண்டு, முல்லைக், தீம், தமிழை, பொழியும், ஈன்று, நுதல், மகிழ்ந்து, எழில், செவ்வியையுடைய, நமக்கு, பேதை, ஒப்ப, சங்க, குளிர்ந்த, கருங், வாரார், முகம், காலையும், பதக், ஆதலால்