கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு
கார்ச் சேண் இகந்த கரை மருங்கின் நீர்ச் சேர்ந்து, எருமை எழில் ஏறு, எறி பவர் சூடி, செரு மிகு மள்ளரின் செம்மாக்கும் செவ்வி, திருநுதற்கு யாம் செய் குறி. |
31 |
எருமையினது எழுச்சியையுடைய ஆண் மேகத்தையுடைய வானின் எல்லையைக் கடந்து உயர்ந்த கரையின் பக்கத்திலுள்ள நீரையடைந்து எறியப்பட்ட பூங்கொடிகளைச் சூடிக்கொண்டு போரின்கண் மறமிக்க வீரரைப்போல இறுமாந்திருக்கும் காலமே அழகிய நெற்றியுடையாளுக்கு நாம் மீள்வதற்குச் செய்த குறியாகும்.(ஆகவே விரைந்து தேரைச் செலுத்துவாய்)
கடாஅவுக, பாக! தேர் கார் ஓடக் கண்டே; கெடாஅப் புகழ் வேட்கைச் செல்வர் மனம்போல் படாஅ மகிழ் வண்டு பாண் முரலும், கானம் பிடாஅப் பெருந்தகை நற்கு. |
32 |
அழியாத புகழை விரும்புகின்ற செல்வரது மனதைப்போல , கெடுதலில்லாத மகிழ்ச்சியையுடைய வண்டுகள் காட்டின்கண் பிடவமாகிய பெருந்தகையாளிடத்து நன்றாக இசைப்பாட்டினை பாடா நிற்கும்.பாகனே..மேகம் ஓடுதலைக் கண்டு தேரை விரைவாகச் செலுத்துவாயாக.
கடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி குடமலை ஆகத்து, கொள் அப்பு இறைக்கும் இடம்' என ஆங்கே குறி செய்தேம், பேதை மடமொழி எவ்வம் கெட. |
33 |
கடலினிது நீரை முகர்ந்த , நிறைந்த சூலினையுடைய மேகம், மேற்கு மலையிடத்து தான் கொண்ட நீரினைச் சொரியும் சமயமென்று அப்பொழுதே பேதையாகிய மடப்பத்தினையுடைய மொழியை உடையவளது வருத்தம் நீங்க குறி செய்தேம்( ஆதலால் தேரினை விரந்து செலுத்துக)
விரி திரை வெள்ளம் வெறுப்பப் பருகி, பெரு விறல் வானம் பெரு வரை சேரும் கரு அணி காலம் குறித்தார், திரு அணிந்த ஒள் நுதல் மாதர்திறத்து. |
34 |
மிக்க பெருமையையுடைய மேகம் விரித்த அலையையுடைய கடலினிது நீரை நிறைய உண்டு பெரிய மலையை அடையா நிற்கும். மழை சூழ்ந்து கொள்ளும் கார் காலத்தை தெய்வ உத்தியென்னும் தலைக்கோலத்தை(ஒருவித தலையணி) அணிந்த ஒள்ளிய நெற்றியையுடைய காதலியினிடத்து (தான் மீண்டும் வரும் காலமாக) தலைவன் குறிப்பிட்டான்.
சென்ற நம் காதலர் சேண் இகந்தார்!' என்று எண்ணி ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர, வென்றி முரசின் இரங்கி, எழில் வானம் நின்றும் இரங்கும், இவட்கு. |
35 |
விதியினால் பிரிந்து சென்ற தலைவன் நெடுந்தூரத்தைக் கடந்து சென்றாரென நினைத்து பசலை நோயுடனே , பலதுன்பங்களும் மிகப் பெறுதலால் இவள் பொருட்டு எழுச்சியினையுடைய மேகம் வெற்றியை அறிவிக்கும் முரசின் ஒலியைப்போல வானில் இருந்தும் இரங்கா நிற்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, கார், மேகம், இலக்கியங்கள், குறி, நிற்கும், கீழ்க்கணக்கு, நாற்பது, பதினெண், அணிந்த, வானம், பெரு, தலைவன், முரசின், சென்ற, தான், கடலினிது, எழில், சேண், கடந்து, செய்தேம், சங்க, நீரை