ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு

கால் இல்லார், கண் இல்லார், நா இல்லார், யாரையும் பால் இல்லார், பற்றிய நூல் இல்லார், சாலவும் ஆழப் படும் ஊண் அமைத்தார், இமையவரால் வீழப்படுவார், விரைந்து. |
36 |
நொண்டிகளுக்கும், குருடர்களுக்கும், ஊமைகளுக்கும், எவரையும் தம்பக்கம் துணையாக இல்லாதவர்களுக்கும், பதிந்த நூலறிவில்லாதவர்க்கும் நீரினாற் சமைக்கப்பட் டாழ்ந்த உணவை விரும்பி யளித்தவர், தேவர்களால் விரைவாக விரும்பப்படுவார்.
கருத்து: முடவர் முதலாயினாருக்கு வயிறு நிறைய உணவு படைத்தல் வேண்டும்.
அழப் போகான், அஞ்சான், அலறினால் கேளான், எழப் போகான், ஈடு அற்றார் என்றும் தொழப் போகான், என்னே, இக் காலன்! நீடு ஓரான், தவம் முயலான், கொன்னே இருத்தல் குறை. |
37 |
காலனானவன் ஒருவன் இறுதிக்காலம் வந்து விட்டால், அழுதாலும் விட்டுப் போகின்றவனல்லனன், ஓ என அலறிக் கூவினுங் கேட்டிரங்குகின்றவனல்லன், எழுந்தெங்கேனுஞ்செல்வதற்கும் விடாதவன், இழந்து வலியற்றிருப்போர் நின்னையே குலதெய்வமாக வழிபடுவோம் என்று வணங்கவும் விட்டுச் செல்கின்றவனல்லன், இக்காலன் என்ன தன்மையனாயிருக்கின்றான், ஆதலின், காலனது வரவுக்கோர் உபாயஞ்சூழாது, தவம்புரியாது வீணாட் கழித்துக் கொண்டிருப்பது தகாத செய்கை.
கருத்து: காலனைக் கடக்க விரும்புவோர் வாணாளை வீணாக்காமல் விரைவாகத் தவ முயலவேண்டும்.
எழுத்தினால் நீங்காது, எண்ணால் ஒழியாது, ஏத்தி வழுத்தினால் மாறாது, மாண்ட ஒழுக்கினால், நேராமை சால உணர்வார் பெருந் தவம் போகாமை, சாலப் புலை. |
38 |
இறப்பும் பிறப்புமாகிய துன்பம் கல்வியறிவினளவே நீங்காது, தியான அளவிலே நீங்காது, துதிக்குந் தோத்திரத்தினாலும் நீங்காது, இவை முதலாகிய மாட்சிமைப் பட்ட ஒழுக்கங்களினாலேயும் அவை தீர்த்துப் பேரின்பம் வாயாமை முற்றுங் கண்ட துறந்தோரது மாதவத்தை அடையாதிருத்தல் மிக்க அறியாமையாம்.
கருத்து: உணர்ந்தோரெல்லாரும் ஒழுக்கமுந் தவமுங் கெட்டு வெறும் பொருளற்ற வழிபாடுகள் செய்தல் பெரிதுந்தவறாகும்.
சாவது எளிது; அரிது, சான்றாண்மை; நல்லது மேவல் எளிது; அரிது, மெய் போற்றல்; ஆவதன்கண் சேறல் எளிது; நிலை அரிது; தெள்ளியர் ஆய் வேறல் எளிது; அரிது, சொல். |
39 |
இறத்தல் எளியது, அதற்கு முன் நல்லோன் எனப் பெயர்படைத்தல் அரியது, நல்ல பொருளை விரும்பி யதனை யடைதல் எளியது, வாய்மையைத் தனக்குக் காப்பாகக் கொண்டொழுகுவது அரியது, தனக்குத் துணையாவதாகிய பெருந்தவத்திற்குச் செல்வது எளியது, நிட்டை கைகூடும் வரை நிலைத்தல் அரியது, தெளிந்த ஞானியரான விடத்தும் ஐம்புலன்களையும் வென்று அவித்தலை எளிய காரியமாகச் செய்தல் அரியதாகுமெனச்சொல்.
கருத்து: கல்வி கேள்விகளால் நிறைந்தொழுகுதல் முதலாயின அருமையாகும்.
உலையாமை, உற்றதற்கு ஓடி உயிரை அலையாமை ஐயப்படாமை, நிலையாமை தீர்க்கும் வாய் தேர்ந்து, பசி உண்டி நீக்குவான், நோக்கும் வாய் விண்ணின் உயர்வு. |
40 |
தனக்குற்ற துன்பத்துக் கோடித் தளராது, பிறருயிரை வருந்த அலையாது, மறுமையை ஐயப்படாது, நிலையாத பிறப்பைத் தீர்க்கும் வா யாராய்ந்து, பசியினையு முண்டியினையு நீக்கித் தவஞ் செய்வா னுறைதற்கே யாராயுமிடம் விண்ணினுச்சி.
கருத்து: உலையாமை முதலியன உடையான் விண்ணுலக நிலைக்கும் மேல் நிலையை அடையான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, இல்லார், கருத்து, எளிது, நீங்காது, இலக்கியங்கள், அரிது, அரியது, எளியது, ஏலாதி, போகான், கீழ்க்கணக்கு, பதினெண், உலையாமை, தீர்க்கும், வாய், சங்க, விரும்பி, செய்தல், கல்வி, தவம்