முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » வைணவ இலக்கியங்கள் » நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் » திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
திருவெழுகூற்றிருக்கை தனியன்கள்
எம்பெருமானார் அருளிச்செய்தவை
வாழிபரகாலன் வாழிகலிகன்றி, வாழி குறையலூர் வாழ்வேந்தன், - வாழியரோ மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர்கோன் தூயோன் சுடர்மான வேல். |
சீரார் திருவெழு கூற்றிருக் கையென்னும் செந்தமிழால், ஆரா வமுதன் குடந்தைப் பிரான்றன் அடியிணைக்கீழ், ஏரார் மறைப்பொரு ளெல்லா மெடுத்திவ் வுலகுய்யவே சேராமற் சொன்ன அருள்மாரி பாதம் துணைநமக்கே. |
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை
2672 |
ஒருபே ருந்தி யிருமலர்த் தவிசில், ஒருமுறை அயனை யீன்றனை, ஒருமுறை இருசுடர் மீதினி லியங்கா, மும்மதிள் இலங்கை யிருகால் வளைய, ஒருசிலை ஒன்றிய ஈரெயிற் றழல்வாய் வாளியில் அட்டனை, மூவடி நானிலம் வேண்டி, முப்புரி _லொடு மானுரி யிலங்கும். மார்வினில், இருபிறப் பொருமா ணாகி, ஒருமுறை யீரடி,மூவுல களந்தானை, நாற்றிசை நடுங்க அஞ்சிறைப் பறவை ஏறி, நால்வாய் மும்மதத் திருசெவி ஒருதனி வேழத் தரந்தையை, ஒருநாள் இருநீர் மடுவுள் தீர்த்தனை, முத்தீ நான்மறை ஐவகை வேள்வி, அறுதொழில் அந்தணர் வணங்கும் தன்மையை,ஐம்புலன் அகத்தினுள் செறுத்து, நான்குடன் அடக்கி முக்குணத் திரண்டவை யகற்றி, ஒன்றினில் ஒன்றி நின்று,ஆங் கிருபிறப் பறுப்போர் அறியும் தன்மையை, முக்கண் நாற்றோள் ஐவாய் அரவோடு ஆறுபொதி சடையோன் அறிவருந் தன்மைப் பெருமையுள் நின்றனை, ஏழுல கெயிற்றினில் கொண்டனை, கூறிய அறுசுவைப் பயனும் ஆயினை, சுடர்விடும் ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை, சுந்தர நாற்றோள் முந்நீர் வண்ண,நின் ஈரடி ஒன்றிய மனத்தால், ஒருமதி முகத்து மங்கையர் இருவரும் மலரன, அங்கையில் முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை, நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை, மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே, அறுபதம் முரலும் கூந்தல் காரணம் ஏழ்விடை யடங்கச் செற்றனை, அறுவகைச் சமயமும் அறிவரு நிலையினை, ஐம்பால் μதியை ஆகத் திருத்தினை, அறமுதல் நான்க வையாய் மூர்த்தி மூன்றாய் இருவகைப் பயனாய் ஒன்றாய் விரிந்து நின்றனை, குன்றா மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை, வருபுனல் பொன்னி மாமணி யலைக்கும், செந்நெலொண் கழனித் திகழ்வன முடுத்த, கற்போர் புரிசைக் கனக மாளிகை, நிமிர்கொடி விசும்பில் இளம்பிறை துவக்கும், செல்வம் மல்குதென் திருக்குடந்தை, அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடர வமளியில் அறிதுயில் அமர்ந்த பரம,நின் அடியிணை பணிவன் வருமிடர் அகல மாற்றோ வினையே. |
(2) |
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருவெழுகூற்றிருக்கை - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய இலக்கியங்கள் - ஒருமுறை, நின்றனை, அமர்ந்தனை, நாற்றோள், அறிதுயில், அந்தணர், திருமங்கையாழ்வார், ஒன்றிய, திருவெழுகூற்றிருக்கை, தன்மையை