பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
வளமையும், தேசும், வலியும், வனப்பும், இளமையும், இற்பிறப்பும், எல்லாம் உளவா, மதித்து அஞ்சி மாறும் அஃது இன்மையால்,-கூற்றம் குதித்து உய்ந்து அறிவாரோ இல். |
391 |
செல்வமும், புகழும், இளமையும் என்றிவை யெல்லாம் உளவாக; மதித்து அஞ்சி மாறும் அஃதின்மையால் - அவற்றை மதித்துப் பயந்து நீங்குந்தன்மை கூற்றத்திற்கின்மையால் இயமனினின்றும் பிழைத்துச் சென்றாராக அறியப்படுவார் ஒருவரும் இலர்.
கருத்து: வளமை, தேசு, முதலியவற்றின் நிலையாமை நோக்கித் துறந்து துறவறநெறியிற் சேர்க.
கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவாப் பசித் தோற்றம் பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு, அது கும்பியில் உந்திச் சென்று எறிதலால்,-தன் ஆசை அம்பாய் உள் புக்குவிடும். |
392 |
தான் கொண்டுஒழுகுகின்ற மூன்றற்கும் உதவி செய்த லில்லாத வேட்கைத் தோற்றம் முன்னர் நல்வினை செய்தமையான் வந்த செல்வத்தை அங்குத்தானே பயன்படுத்திக்கொண்டு அவ்வாசை நரகச்சேற்றில் உதைத்துச் சென்று வீழ்த்தலால் ஒருவனுடைய ஆசையாகிய அம்பு ஆயுளைப் புகுந்து கெடுத்துவிடும்.
கருத்து: பிறர்க்குதவி செய்தலில்லாத ஆசையே ஒருவனைநரகத்துள் அழுத்தவல்லது.
செல்வத் துணையும், தம் வாழ்நாள் துணையும், தாம் தெள்ளி உணரார், சிறிதினால் செம்மாந்து, பள்ளிப்பால் வாழார், பதி மகிழ்ந்து வாழ்வாரே,- முள்ளித் தேன் உண்ணுமவர். |
393 |
செல்வத்தின் அளவினையும் தம் வாழ்நாளின் அளவினையும் தாம் தெளிய ஆராய்ந்து அறியாராகி சிறிய இல்லற இன்பத்தினாலே தருக்குற்று அருந்தவர்கள் உறையும் பள்ளியினிடத்து வாழாராகி இல்லின்கணிருந்து இன்புற்று வாழுகின்றவர்களே சிறந்த தேனை உண்ணாது முள்ளிச்செடியின் தேனை உண்ணுகின்றவர்களோ டொப்பர்.
கருத்து: துறவறம் சேர்தலின்றி இல்லறத்திலேயே இருந்து மகிழ்ந்து இருப்பது முள்ளித்தே னுண்பதை யொக்கும்.
வல் நெஞ்சினார் பின் வழி நினைந்து செல்குவை என் நெஞ்சே! இன்று அழிவாய் ஆயினாய்; செல், நெஞ்சே! இல் சுட்டி நீயும் இனிது உரைத்துச் சாவாதே பல் கட்டு, அப் பெண்டிர், மகார். |
394 |
எனக்குறுதி சூழும் என் நெஞ்சமே! வலிய நெஞ்சினராய இயமனுடைய வேலையாட்களின் பின்னே செய்த குற்றங்களை நினைத்து அழிந்து செல்வாய் (ஆனால்) இப்பொழுது இழிந்த செயலிற் புகுந்து நின்று செய்கின்றாய் மனைவாழ்க்கையின் பொருட்டு நீயும் இனியவற்றைக் கூறி நின்று இறவாது.செல் துறவறத்திற்குச் செல்வாயாக நெஞ்சமே அம்மனைவியும் மக்களும் பல தளைகளாவராதலின்.
கருத்து: பெண்டிரும் மக்களும் தளைகளாதலின்,அவற்றை யொழித்துத் துறவறம் சேர்க.
சிறந்த தம் மக்களும் செய் பொருளும் நீக்கி, துறந்தார் தொடரப்பாடு எவன் கொல்,-கறங்கு அருவி ஏனல்வாய் வீழும் மலை நாட!-அஃது அன்றோ, யானை போய், வால் போகாவாறு. |
395 |
ஒலித்துவரும் அருவிகள் தினைப்புனத்தின்கண் வீழும் மலைநாடனே! சிறப்புடைத்தாய தம்முடைய மக்களையும் தாம் ஈட்டிய பொருளையும் பற்றுவிட்டுத் துறந்தவர்கள் தமது உடம்பின்மீது பற்றுக்கொண்டு ஒழுகுதல் எது கருதி ஒரு வாயிலின்கண் யானை போய் அதன் வால் போகாவாற்றை அஃதொக்குமன்றோ
கருத்து:துறவறநெறி நின்றார் அகப்பற்றினை முற்ற நீக்குக என்றது இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 75 | 76 | 77 | 78 | 79 | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், மக்களும், பழமொழி, தாம், நானூறு, கீழ்க்கணக்கு, பதினெண், நெஞ்சே, துறவறம், சிறந்த, செல், தேனை, நின்று, போய், வால், யானை, வீழும், நெஞ்சமே, அளவினையும், நீயும், செய்த, மாறும், அஃது, அஞ்சி, மதித்து, சங்க, இளமையும், அவற்றை, சேர்க, புகுந்து, துணையும், சென்று, வந்த, தோற்றம், மகிழ்ந்து