நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு
ஊழியம் யாண்டு எண்ணி யாத்தன; யாமமும் நாழிகையானே நடந்தன; தாழீயா, தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர்; வெட்கென்றார் வெஞ் சொலால் இன்புறுவார். |
71 |
ஊழிகள் ஆண்டுகளால் கணக்கிடப்பட்டு கழிந்தன. யாமம் நாழிகையால் வரையறுக்கப்பட்டு கழிந்தது. அறிஞர்கள் அறிந்தவர்களிடம் காலம் தாழாமல் ஐயம் திரிபறக் கேட்டுத் தெளிந்தனர். அறிவிலாதார் பிறரை நிந்தித்தே காலத்தைக் கழித்து மகிழ்கின்றனர்.
கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத பேதையான் வீழ்வானேல், கால் முரியும்; எல்லாம் ஒருமைத் தான் செய்த கருவி; தெரியின், மெய் பொய்யா வித்து ஆகிவிடும். |
72 |
கல்வியறிவு உடையவன் தனக்குத் தளர்ச்சி ஏற்பட்டாலும் மேலும் முயன்று உயர்வான். கல்வியறிவு அற்றவன் தனக்கு ஏற்பட்டத் தளர்விலிருந்து மீளும் வழியறிய மாட்டான். யாருக்கும் ஒருபிறப்பின் செய்கைகள் மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாகும். மெய்யுணர்வே வீடு பேற்றிற்கு வழி வகுக்கும்.
தேவர் அனையர், புலவரும்; தேவர் தமர் அனையர், ஒர் ஊர் உறைவார்; தமருள்ளும் பெற்றன்னர், பேணி வழிபடுவார்; கற்றன்னர், கற்றாரைக் காதலவர். |
73 |
கல்வியறிவுடைய புலவர்களுக்கு தேவர்கள் ஒப்பாவர்; அப்புலவர் வாழும் ஊரில் வாழ்வோர் அத்தேவர்களின் உறவினருக்கு ஒப்பாவர்; அவ்வுறவினருள்ளும் அவர் அருள் பெற்றோர் பெற்றோரை ஒப்பாவர்; அப்புலவரை விரும்புவோர் அவரையே ஒப்பர்.
தூர்ந்து ஒழியும், பொய் பிறந்த போழ்தே; மருத்துவன், 'சொல்' என்ற போழ்தே, பிணி, உரைக்கும்; - நல்லார், 'விடுக!' என்ற போழ்தே விடுக! அதற்கு உரியான், 'தா' எனின், தாயம் வகுத்து! |
74 |
பொய் பிறந்தபோதே நட்புக் கெடும். மருத்துவன் சொல் என்ற போதே பிணியாளன் நோய் சொல்வான். பெரியோர் ஒரு செயலை விடு என்ற போழ்தே அதை அறவே விட்டுவிட வேண்டும். பொருளுக்குரியவன் தருக என்ற போழ்தே அவன் பங்கை வகுத்துத் தந்துவிட வேண்டும்.
நாக்கின் அறிப இனியவை மூக்கினான் மோந்து அறிப, எல்லா மலர்களும்; நோக்குள்ளும் கண்ணினான் காண்ப, அணியவற்றை; தொக்கு இருந்து, எண்ணினான் எண்ணப்படும். |
75 |
சுவைக்கு இனியதை நாவினாற் சுவைத்து அறிவர். மலரின் மணத்தை மூக்கினால் முகர்ந்து அறிவர். அழகிய பொருள்களைக் கண்களாற் கண்டு அறிவர். உணரக் கூடிய கருத்துக்களைப் புலவர்கள் ஒன்றாய்க் கூடி ஆராய்ந்தறிவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, போழ்தே, இலக்கியங்கள், ஒப்பாவர், அறிவர், பதினெண், கீழ்க்கணக்கு, நான்மணிக்கடிகை, சொல், அறிப, மருத்துவன், வேண்டும், விடுக, அனையர், சங்க, தெளிந்தனர், கல்வியறிவு, தேவர், பொய்