முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.006.திருவாரூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.006.திருவாரூர்
5.006.திருவாரூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முல்லைவனேசுவரர்.
தேவியார் - கரும்பனையாளம்மை.
1122 | எப்போ தும்மிறை யும்மற வாதுநீர் முப்போ தும்பிர மன்தொழ நின்றவன் செப்போ தும்பொனின் மேனிச் சிவனவன் அப்போ தைக்கஞ்ச லென்னுமா ரூரனே. |
5.006.1 |
மூன்று பொழுதினும் பிரமன் தொழ நின்றவனும், புகழ்ந்து போற்றத்தக்க செம்பொன்னின் வண்ணமேனி உடையவனும், உயிர் உடம்பைவிட்டு நீங்கும் அப்போதைக்கு அஞ்சல் என்று அபயங் கொடுப்பவனுமாகிய சிவபெருமானை எப்போதும் சிறுபொழுதும் நீர் மறவாது இருக்க. (சே - போதும் எனப்பிரித்து விடையின்மீது இவர்ந்து வரும் எனினும் அமையும்)
1123 | சடையின் மேலுமொர் தையலை வைத்தவர் அடைகி லாஅர வைஅரை யார்த்தவர் படையின் நேர்தடங் கண்ணுமை பாகமா அடைவர் போலிடு காடரா ரூரரே. |
5.006.2 |
மருங்கில்மட்டுமின்றிச் சடையின்மேலும் ஒரு தையலை வைத்தவரும், அரவை அரையிற் கட்டியவரும், இடுகாடரும் ஆரூரரும் ஆகியவர் வேற்படையொத்த பெரிய கண்ணை உடைய உமையொரு பாகமாகத் தோன்றி அருள் புரிவர்.
1124 | விண்ட வெண்டலை யேகல னாகவே கொண்ட கம்பலி தேருங் குழகனார் துண்ட வெண்பிறை வைத்த இறையவர் அண்ட வாணர்க் கருளுமா ரூரரே. |
5.006.3 |
வெண்தலையே இரக்கும் கலனாகக் கொண்டு வீடுகள்தோறும் பலிதேரும் இளமையுடையவரும், துண்டாகிய வெள்ளிய பிறை முடிவைத்த இறையவரும், தேவர்களுக்கு அருளும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
1125 | விடையு மேறுவர் வெண்தலை யிற்பலி கடைகள் தோறுந் திரியுமெங் கண்ணுதல் உடையுஞ் சீரை யுறைவது காட்டிடை அடைவர் போலரங் காகவா ரூரரே. |
5.006.4 |
திருவாரூர்ப் பெருமான், விடையும் ஏறுவர்; வெண்தலையிற் பலி பெறுவதற்கு இல்லங்களின் முன்புறந்தோறும் திரியும் கண்ணுதலார்; உடையாகச் சீரையைக் கொண்டவர். உறைவதற்குச் சுடு காட்டையே அரங்கமாக அடைவர்.
1126 | துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர் வளைக்கை யாளையொர் பாக மகிழ்வெய்தித் திளைக்குந் திங்கட் சடையில் திசைமுழு தளக்குஞ் சிந்தையர் போலுமா ரூரரே. |
5.006.5 |
திருவாரூர்ப் பெருமான், துளையுள்ள துதிக்கை உடைய யானையின் உரித்த தோலைப் போர்த்தவர்; வளையணிந்த கையாளாகிய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்தெய்தியவர்; அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும்; உலகமே உருவமா (விச்சுவரூபியா)க நின்றாடுவார் என்பது கருத்து.
1127 | பண்ணி னின்மொழி யாளையொர் பாகமா விண்ணி னார்விளங் கும்மதி சூடியே சுண்ண நீறுமெய்ப் பூசிச் சுடலையின் அண்ணி யாடுவர் போலுமா ரூரரே. |
5.006.6 |
பண்ணையொத்த இனிய மொழியாளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு விசும்பில் விளங்கும் பிறையினைச் சூடி, திருநீற்றுப் பொடியினைத் திருமேனியிற் பூசிச் சுடலையினை அண்மித் திருவாரூர்ப் பெருமான் ஆடுவர்.
1128 | மட்டு வார்குழ லாளொடு மால்விடை இட்ட மாவுகந் தேறு மிறைவனார் கட்டு வாங்கங் கனன்மழு மான்தனோ டட்ட மாம்புய மாகுமா ரூரரே. |
5.006.7 |
தேனொழுகும் புதுமலரணிந்த குழலாளாகிய உமையம்மையொடு பெரிய (திருமாலாகிய) விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவனார், கட்டுவாங்கம், சுடர்ந்தெரியும் கனல், மழு, மான் எனுமிவற்றைக்கொண்ட எட்டுத் தோளராகிய திருவாரூர்ப் பெருமானே ஆவர்.
1129 | தேய்ந்த திங்கள் கமழ்சடை யன்கனல் ஏந்தி யெல்லியு ளாடு மிறைவனார் காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் ஆய்ந்த நான்மறை யோதுமா ரூரரே. |
5.006.8 |
பிறைத் திங்கள் விளங்கும் சடையினரும், கனலைக் கரத்தேந்தி நள்ளிருளில் நட்டம் ஆடும் இறைவரும், காமனைச் சினந்து நோக்கிய கண்ணினரும், ஆராய்ந்த நான்மறைகளால் ஓதப்பெறும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
1130 | உண்டு நஞ்சுகண்டத்து ளடக்கியங் கிண்டை செஞ்சடை வைத்த இயல்பினான் கொண்ட கோவண ஆடையன் கூரெரி அண்டவாண ரடையுமா ரூரரே. |
5.006.9 |
நஞ்சினை உண்டு கண்டத்துள் அடக்கியவரும், இண்டை மாலையைத் தம் செஞ்சடையுள் வைத்த இயல்பினரும், கோவணத்தை ஆடையாகக் கொண்டவரும், மிகுந்த எரியைக் கரத்தில் உடையவரும், தேவர்கள் அடைந்து வழிபடும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
1131 | மாலு நான்முக னும்மறி கிற்கிலார் கால னாய அவனைக் கடந்திட்டுச் சூல மான்மழு வேந்திய கையினார் ஆல முண்டழ காயவா ரூரரே. |
5.006.10 |
திருமாலும் நான்முகனும் அறிய இயலாதவரும், காலனைக் கடந்திட்டுச் சூலமும், மானும், மழுவும் ஏந்திய கையினரும், ஆலம் உண்டதனால் அழகுபெற்று விளங்கிய கண்டத்தையுடைய வரும் திருவாரூர்ப் பெருமானேயாவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாரூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவாரூர்ப், பெருமானேயாவர், பெருமான், அடைவர், எட்டுத், விளங்கும், பூசிச், உமையம்மையை, திங்கள், மிறைவனார், கடந்திட்டுச், போர்த்தவர், திருச்சிற்றம்பலம், திருமுறை, கொண்டு, திருவாரூர், யாளையொர், போலுமா