முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.004.திருவண்ணாமலை
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.004.திருவண்ணாமலை
5.004.திருவண்ணாமலை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அருணாசலேசுவரர்.
தேவியார் - உண்ணாமுலையம்மை.
1102 | வட்ட னைம்மதி சூடியை வானவர் சிட்ட னைத்திரு வண்ணா மலையனை இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும் அட்ட னையடி யேன்மறந் துய்வனோ. |
5.004.1 |
கந்தையுடை அணிந்தானும், மதிசூடியும், வானவர்க்கு உயர்ந்தானும், திருவண்ணாமலை வடிவினனும், விருப்பம் உடையானும், இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் அட்டானும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ.
1103 | வான னைம்மதி சூடிய மைந்தனைத் தேன னைத்திரு வண்ணா மலையனை ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த ஆன னையடி யேன்மறந் துய்வனோ. |
5.004.2 |
வானத்துள்ளவனும், பிறைசூடிய பேராற்றல் உடையவனும், தேனென இனிப்பவனும், திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும், பன்றிக்கொம்பை அணிந்தவனும், இகழ்ந்தார் புரங்கள் மூன்றினையும் எய்த விடையேறுடையவனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
1104 | மத்த னைம்மத யானையு ரித்தவெஞ் சித்த னைத்திரு வண்ணா மலையனை முத்த னைம்முனிந் தார்புர மூன்றெய்த அதத னையடி யேன்மறந் துய்வனோ. |
5.004.3 |
ஊமத்தமலர் அணிந்தவனும், யானைத் தோலை உரித்துப் போர்த்து எம் சித்தத்துறைபவனும், திருஅண்ணாமலைத் தலத்துக்குடையவனும், முத்தனும், முனிந்தார் புரங்கள் மூன்றையும் எரியுண்ணச்செய்த அத்தனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
1105 | காற்ற னைக்கலக் கும்வினை போயறத் தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக் கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ. |
5.004.4 |
காற்றாகியுள்ளவனும், கலக்குகின்ற வினைகள் விட்டு நீங்கத் தோற்றம்புரிபவனும், திருவண்ணாமலைத் தலத்துக் குடையவனும், உலகினை நன்றுந் தீதுமாய்க் கூறுசெய்து வகுத்தவனும், கொடியவர் புரங்கள் மூன்றையும் எய்த வீரநெறி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
1106 | மின்ன னைவினை தீர்த்தெனை ஆட்கொண்ட தென்ன னைத்திரு வண்ணா மலையனை என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த அன்ன னையடி யேன்மறந் துய்வனோ. |
5.004.5 |
மின் ஒளியுருவாயவனும், வினைகளைப் போக்கி என்னை ஆட்கொண்ட அழகியவனும், திருவண்ணாமலைத் தலத்துக்குடையவனும், என்னை உடையவனும், இகழ்ந்தவர் புரங்கள் மூன்றையும் எய்த அத்தன்மையனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
1107 | மன்ற னைம்மதி யாதவன் வேள்விமேல் சென்ற னைத்திரு வண்ணா மலையனை வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங் கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ. |
5.004.6 |
ஐந்துவகை மன்றங்களில் (சபைகளில்) எழுந்தருளியிருப்பவனும், மதியாத தக்கன் வேள்வியின்மேல் உருத்துச் சென்றவனும், திருவண்ணாமலைத் தலத்துக்கு உடையவனும், புலனைந்தும் வென்ற வென்றி உடையவனும், சினந்தார் புரங்கள் மூன்றையும் கொன்றவனும் ஆகிய பெருமானைக் கொடிய வனாகிய அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
1108 | வீர னைவிட முண்டனை விண்ணவர் தீர னைத்திரு வண்ணா மலையனை ஊர னையுண ரார்புர மூன்றெய்த ஆர னையடி யேன்மறந் துய்வனோ. |
5.004.7 |
வீரச்செயல்களைப் புரிந்தவனும், விடம் உண்டவனும், விண்ணவர்க்கு அச்சம் நீக்குபவனும், திருவண்ணாமலை வடிவினனும், மருத நிலத்தை இடங்கொண்டவனும், உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், ஆத்திமாலை சூடியவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
1109 | கருவி னைக்கடல் வாய்விட முண்டவெம் திருவி னைத்திரு வண்ணா மலையனை உருவி னையுண ரார்புர மூன்றெய்த அருவி னையடி யேன்மறந் துய்வனோ. |
5.004.8 |
கருவாயிருந்து காப்பவனும், கடலெழு நஞ்சு உண்ட எம்திருவாகியவனும், திருவண்ணாமலை வடிவினனும், உருவத்திருமேனி உடையவனும் உணராதவர் புரங்கள் மூன்றையும் எய்தவனும், அருவத்திருமேனி உடையவனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
1110 | அருத்த னையர வைந்தலை நாகத்தைத் திருத்த னைத்திரு வண்ணா மலையனைக் கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த அருத்த னையடி யேன்மறந் துய்வனோ. |
5.004.9 |
பொருள் வடிவாயுள்ளவனும், ஐந்தலையுடைய நாகத்தைத் திருந்த அணிந்தவனும், திருவண்ணாமலை வடிவினனும், தலைவனானவனும், தீக்குணங்களைக் கடியாதார் புரங்கள் மூன்றையும் எய்தவனும், உயிர்களுக்கு வினைப்பயனைப் பிறழாது நுகர்விப்போனும் ஆகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங்கூடுமோ.
1111 | அரக்க னையல றவ்விர லூன்றிய திருத்த னைத்திரு வண்ணா மலையனை இரக்க மாயென் உடலுறு நோய்களைத் துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ. |
5.004.10 |
இராவணன் அலறுமாறு அழகிய திருவிரலை ஊன்றிய திருத்தமானவனும். திருவண்ணாமலை வடிவினனும், இரக்கம் கொண்டு என் உடலில் உற்ற நோய்களைத் துரத்திய அருளாளனுமாகிய பெருமானைத் தொண்டுபுரியும் அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவண்ணாமலை- ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - துய்வனோ, னைத்திரு, அடியேன், மறந்து, யேன்மறந், புரங்கள், கூடுமோ, உய்தலுங், மலையனை, பெருமானை, மூன்றையும், திருவண்ணாமலை, மூன்றெய்த, உடையவனும், வடிவினனும், திருவண்ணாமலைத், தார்புர, அணிந்தவனும், னைம்மதி, னையிகழ்ந், எய்தவனும், உணராதவர், ஆட்கொண்ட, ரார்புர, அருத்த, நோய்களைத், திருத்த, நாகத்தைத், உடையவனுமாகிய, தலத்துக்கு, திருச்சிற்றம்பலம், மூன்றினையும், இகழ்ந்தார், திருமுறை, தலத்துக்குடையவனும், னைக்கொடி, மலையனைக், யார்புர