முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.008.திருஅன்னியூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.008.திருஅன்னியூர்
5.008.திருஅன்னியூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - ஆபத்சகாயர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1144 | பாற லைத்த படுவெண் தலையினன் நீற லைத்தசெம் மேனியன் நேரிழை கூற லைத்தமெய் கோளர வாட்டிய ஆற லைத்த சடையன்னி யூரனே. |
5.008.1 |
பருந்துகள் அலைக்கும் வெள்ளிய மண்டைஓட்டைக் கையிற் கொண்டவனும், திருநீறு பூசிய சிவந்த மேனியனும், உமையம்மை ஒரு கூறுகொண்ட மெய்யனும், அரவு ஆட்டி ஆறலைக் குஞ் சடையனும் அன்னியூர்த்தலத்து இறைவனே.
1145 | பண்டொத் தமொழி யாளையொர் பாகமாய் இண்டைச் செஞ்சடை யன்னிருள் சேர்ந்ததோர் கண்டத் தன்கரி யின்னுரி போர்த்தவன் அண்டத் தப்புறத் தானன்னி யூரனே. |
5.008.2 |
பண் பொருந்திய இனியமொழியுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனும், இண்டையணிந்தசடையனும், இருளார்கண்டனும், யானைத்தோல் உரித்துப் போர்த்தவனும், அண்டங்களுக்கு அப்புறத்தில் உள்ளவனும் அன்னியூர்த் தலத்து இறைவனே.
1146 | பரவி நாளும் பணிந்தவர் தம்வினை துரவை யாகத் துடைப்பவர் தம்மிடம் குரவம் நாறுங் குழலுமை கூறராய் அரவ மாட்டுவர் போலன்னி யூரரே. |
5.008.3 |
நாள்தோறும் வாழ்த்தி வணங்குவோரது வல்வினைகளைத் துரக்கும்படி நீக்குபவரும், தம்மிடப்பாகத்தில் குரவு நறுமணம் வீசும் குழல் உமையைக் கூறாகவுடையவரும், அரவம் ஆட்டு பவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1147 | வேத கீதர்விண் ணோர்க்கு முயர்ந்தவர் சோதி வெண்பிறை துன்று சடைக்கணி நாதர் நீதியி னாலடி யார்தமக் காதி யாகிநின் றாரன்னி யூரரே. |
5.008.4 |
வேதங்களை இசையோடு ஓதுவோரும், விண்ணோர்க்கும் உயர்ந்தவரும், ஒளிவெண்பிறை பொருந்திய சடையுடைய தலைவரும், நீதியினால் தம் அடியார்களுக்கெல்லாம் ஆதியாகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1148 | எம்பி ரானிமை யோர்கள் தமக்கெலாம் இன்ப ராகி யிருந்தவெம் மீசனார் துன்ப வல்வினை போகத் தொழுமவர்க் கன்ப ராகிநின் றாரன்னி யூரரே. |
5.008.5 |
தேவர்களுக்கெல்லாம் இன்பம் செய்வோராகிய எம் ஈசனாரும், எம் தலைவரும், துன்பஞ்செய்யும் வல்வினை போதற்காகத் தொழும் அன்பர்களுக்கு அன்பராகி நின்றவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1149 | வெந்த நீறுமெய் பூசுநன் மேனியர் கந்த மாமலர் சூடுங் கருத்தினர் சிந்தை யார்சிவ னார்செய்ய தீவண்ணர் அந்த ணாளர்கண் டீரன்னி யூரரே. |
5.008.6 |
வெந்த திருநீறு மெய்யின்கண் பூசிய நலம் வாய்ந்தவரும், நறுமலர் சூடும் கருத்தினராகிய அன்பர் சிந்தைகளில் நிறைந்த சிவனாரும், சிவந்த தீயின் வண்ணம் உடையவரும், அழகிய தண்ணளி உடையவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே, காண்பீராக.
1150 | ஊனை யார்தலை யிற்பலி கொண்டுழல் வானை வானவர் தாங்கள் வணங்கவே தேனை யார்குழ லாளையொர் பாகமா ஆனை யீருரி யாரன்னி யூரரே. |
5.008.7 |
தசை பொருந்தியிருந்த வெண்டலையிற் பலி கொண்டு திரியும் பெருமான் வானவர் வணங்குமாறு, உமாதேவி யாரை ஒரு பாகமாகக்கொண்டு ஆனைத்தோல் போர்த்தவர் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1151 | காலை போய்ப்பலி தேர்வர்கண் ணார்நெற்றி மேலை வானவர் வந்து விரும்பிய சோலை சூழ்புறங் காடரங் காகவே ஆலின் கீழறத் தாரன்னி யூரரே. |
5.008.8 |
நெற்றிக்கண் உடையவரும், காலையே போய்ப் பலி ஏற்பவரும், வானவர்களும் விரும்புகின்ற சோலை சூழ் புறங்காட்டினை அரங்காகக் கொண்டுவரும், ஆலின்கீழ் அறத்தை நான்கு முனிவர்களுக்கு உரைத்தவரும் அன்னியூர்த் தலத்து இறைவரே.
1152 | எரிகொள் மேனிய ரென்பணிந் தின்பராய்த் திரியு மூவெயில் தீயெழச் செற்றவர் கரிய மாலொடு நான்முகன் காண்பதற் கரிய ராகிநின் றாரன்னி யூரரே. |
5.008.9 |
தீவண்ண மேனியரும், எலும்பணிந்து இன்புறுவாரும்,திரிந்துவந்து தொல்லைகள் புரிந்த மூவெயில்களைத் தீயெழச் சினந்தவரும், மாலும் நான்முகனும் காண்பதற்கு அரியவரும் அன்னியூர்த்தலத்து இறைவரே.
1153 | வஞ்ச ரக்கன் கரமுஞ் சிரத்தொடும் அஞ்ச மஞ்சுரமோ ராறுநான் கும்மிறப் பஞ்சின் மெல்விர லாலடர்த் தாயிழை அஞ்ச லஞ்சலென் றாரன்னி யூரரே. |
5.008.10 |
வஞ்சனை பொருந்திய இராவணனின் இருபது கைகளும் தலைகளொடு இறும்படியாகப் பஞ்சின் மெல் விரலால் அடர்த்தபோது உமையம்மை அஞ்ச, " ஆயிழையே! அஞ்சல்! அஞ்சல்!" என்று அருளியவர் அன்னியூர்த்தலத்து இறைவரே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅன்னியூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - இறைவரே, அன்னியூர்த்தலத்து, றாரன்னி, பொருந்திய, அன்னியூர்த், வானவர், உடையவரும், தலத்து, திருச்சிற்றம்பலம், ராகிநின், திருமுறை, தீயெழச், அஞ்சல், பஞ்சின், வல்வினை, நின்றவரும், சிவந்த, உமையம்மை, திருஅன்னியூர், திருநீறு, தலைவரும், கொண்டவனும், இறைவனே