முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.100.ஆதிபுராணம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.100.ஆதிபுராணம்

5.100.ஆதிபுராணம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
2076 | வேத நாயகன் வேதியர் நாயகன் மாதின் நாயகன் மாதவர் நாயகன் ஆதி நாயக னாதிரை நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே. |
5.100.1 |
வேதங்களுக்கு நாயகனும், வேதியர்க்கு நாயகனும், உமாதேவியின் நாயகனும், பெருந்தவம் உடைய முனிவர்களுக்கு நாயகனும், ஆதிநாயகனும், ஆதிரை என்ற விண்மீனுக்கு நாயகனும், பூதங்களுக்கு நாயகனும் புண்ணியமூர்த்தி ஆவான்.
2077 | செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட் கேறுமோ அத்த னென்றரி யோடு பிரமனும் துத்தி யஞ்செய நின்றநற் சோதியே. |
5.100.2 |
மீண்டும் மீண்டும் செத்துச் செத்துப் பிறப்பதே தெய்வமென்று பொய்யாகக் கருதிப் பக்தி செய்யும் மனப்பாறை உடையவர்கட்கு இறைவன் என்று திருமாலோடு பிரமனும் துதிசெய்யநின்ற சோதி உள்ளத்திற் பொருந்துமோ?
2078 | நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயண ரங்ஙனே ஏறு கங்கை மணலெண்ணி லிந்திரர் ஈறி லாதவன் ஈச னொருவனே. |
5.100.3 |
நூறுகோடி பிரமர்கள் அழிந்தனர்; ஆறுகோடி திருமால்களும் அங்ஙனமே ஆயினார்கள்; நீர் பொங்கிப்பெருகும் கங்கையாற்று மணலைவிட எண்ணிக்கையற்ற இந்திரர் நிலையும் அவ்வண்ணமே; முடிவற்றவனாய்த் திகழ்பவன் ஒப்பற்றவனாகிய இறைவன் மட்டுமே.
2079 | வாது செய்து மயங்கும் மனத்தராய் ஏது சொல்லுவீ ராகிலு மேழைகாள் யாதோர் தேவ ரெனப்படு வார்க்கெலாம் மாதே வன்னலால் தேவர்மற் றில்லையே. |
5.100.4 |
அறிவற்றவர்களே! ஒருவரோடொருவர் வாதம் செய்து மயங்கும் மனத்தை உடையவர்களாய் ஏது சொல்லுவீராகிலும், யாதோர் தேவர் எனப்படுவார்க்கெல்லாம் தேவன் மகாதேவனாகிய சிவபிரான் மட்டுமன்றி வேறு யாரும் இல்லை.
2080 | கூவ லாமை குரைகட லாமையைக் கூவ லோடொக்கு மோகட லென்றல்போல் பாவ காரிகள் பார்ப்பரி தென்பரால் தேவ தேவன் சிவன்பெருந் தன்மையே. |
5.100.5 |
கிணற்றாமை கடலாமையை நோக்கி இக்கிணற்றோடொக்குமோ கடல்? என்று கூறுதலைப்போன்று தேவதேவனாகிய சிவபெருமானின் பெருந்தன்மையைப் பாவிகளாகிய மக்கள் பார்த்தற்கு அரிது என்பர்.
2081 | பேய்வ னத்தமர் வானைப் பிரார்த்தித்தார்க் கீவ னையிமை யோர்முடி தன்னடிச் சாய்வ னைச்சல வார்கள் தமக்குடல் சீவ னைச்சிவ னைச்சிந்தி யார்களே. |
5.100.6 |
பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் அமர்வானும், வேண்டியிருந்தவர்களுக்கு அருள்வழங்குவானும், தேவர்கள் முடிகள் திருவடிகளில் சாய்க்கப்பெறுவானும், தமக்குடலினுள் சீவனுமாய்ச் சிவனுமாய் இருப்பவனை வஞ்சனை உடையவர்கள் சிந்தியார்கள்.
2082 | எரிபெ ருக்குவ ரவ்வெரி யீசன துருவ ருக்கம தாவ துணர்கிலார் அரிய யற்கரி யானை யயர்த்துபோய் நரிவி ருத்தம1 தாகுவர் நாடரே. |
5.100.7 |
வேள்விகளில் அக்கினி வளர்ப்பார்கள்; அவ்வக்கினி இறைவன் திருமேனி வகையாவது என்பதை உணரும் ஆற்றல் இல்லாதவர்கள் திருமாலுக்கும் பிரமனுக்கும் அரிய கடவுளைக் காண்டற்கு அயர்த்து நரிவிருத்தம் ஆகுவர்.
[1.நரிவிருத்தம் என்பது நரியினது வரலாறு எனப் பொருள் படும். காட்டில் வேடனொருவன் யானையைக் கொல்ல ஓர் அம்பை எய்து மற்றோர் அம்பை வில்லில் பூட்டி வைத்துக் கொண்டிருந்தான். அவ்வேளையில் பாம்பு ஒன்று அவனைக் கடித்தது. தன்னைக் கடித்த பாம்பை வாளால் வெட்டிக்கொன்று தானும் மூர்ச்சித்து விழுந்து இறந்தான். ஒரே நேரத்தில் யானையும் பாம்பும் இறந்தன. வேடனும் இறந்தான். நரி ஒன்று அவ்வழியே வந்து அவற்றைக் கண்டு , அளவற்ற மகிழ்ச்சி கொண்டு, யானை ஆறுமாதத்திற்கு உணவாகும்; வேடனுடல் ஏழுநாட்களுக்கு உணவாகும்; பாம்பை ஒருநாளுக்கு உணவாக வைத்துக்கொள்வோம். இப்போது நம் பசிக்கு இவ்வேடன் கையில் இருக்கும் வில்லிலுள்ள நரம்பாலாகிய நாணைக் கடித்துச் சுவைத்துப் பசியைப் போக்கிக் கொள்வோம் என்று நினைத்து வில்லில் பூட்டியிருந்த நாணை ஆவலோடு சென்று கடித்தது. உடனே இழுத்துக் கட்டப் பட்டிருந்த நாணறுந்த வில் திடீரென நிமிர்ந்த வேகத்தில் நரியின் வாயைக் கிழித்தது. நரியின் எண்ணக் கோட்டைகள் இடிந்தன. நரியும் இறந்தது. மக்களின் மனக்கோட்டைகள் ஒன்று நினைக்க ஒன்றாய் முடிதலை இக்கதை விளக்குகின்றது. பழங்காலத்திலேயே இக்கதை வழங்கியதாகத் தெரிகிறது. பிற்காலத்திலும் திருத்தக்கதேவர் இக்கதையை விருத்தப் பாடலால் பாடியுள்ளார்.]
2083 | அருக்கன் பாதம் வணங்குவ ரந்தியில் அருக்க னாவா னரனுரு வல்லனோ இருக்கு நான்மறை யீசனை யேதொழும் கருத்தி னைநினை யார்கன் மனவரே. |
5.100.8 |
அந்தியில் சூரியன் பாதங்களை வணங்குவர்; சூரியனாவான் சிவபெருமானின் உருவம் அல்லனோ? இருக்கு முதலிய நான்கு வேதங்கள் இறைவனையே தொழும் கருத்தினைக் கல்மனம் படைத்தவர்களாய்ச் சிலர் நினைக்கமாட்டார்கள்.
2084 | தாயி னும்நல்ல சங்கர னுக்கன்பர் ஆய வுள்ளத் தமுதருந் தப்பெறார் பேயர் பேய்முலை யுண்டுயிர் போக்கிய மாயன் மாயத்துப் பட்ட மனத்தரே. |
5.100.9 |
பேய்ப்பெண்ணினது பேய்முலைப்பாலினை உண்டு அவள் உயிர் போகச்செய்த திருமாலுடைய மாயத்துப் பொருந்திய மனத்தை உடையவர்கள் தாயினும் நல்லவனாகிய சங்கரனுக்கு அன்பர்கள் ஆகிய உள்ளத்து அமுது அருந்தப்பெறா இயல்பினராவர்.
2085 | அரக்கன் வல்லரட் டாங்கொழித் தாரருள் பெருக்கச் செய்த பிரான் பெருந் தன்மையை அருத்தி செய்தறி யப்பெறு கின்றிலர் கருத்தி லாக்கய வக்கணத் தோர்களே. |
5.100.10 |
கருத்தில்லாத கீழ்மைக்குணமுடைய மக்கள், இராவணனது வலிய அரட்டுத்தன்மையினை ஒழித்துப் பின்னும் பேரருள் பெருக்கச்செய்த சிவபெருமானின் பெருந்தன்மையை விருப்பம் புரிந்து அறியப்பெறுகிலர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
ஐந்தாம் திருமுறை முற்றும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆதிபுராணம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நாயகனும், நாயகன், திருமுறை, இறைவன், சிவபெருமானின், பாம்பை, கடித்தது, வில்லில், நரிவிருத்தம், உடையவர்கள், நரியின், கருத்தி, மாயத்துப், இருக்கு, இக்கதை, உணவாகும், மக்கள், இறந்தான், யாதோர், செத்துப், பிறப்பதே, செத்துச், திருச்சிற்றம்பலம், ஐந்தாம், பிரமனும், மீண்டும், ஆதிபுராணம், மயங்கும், செய்து, பிரமர்கள், மனத்தை