முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.099.பாவநாசம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.099.பாவநாசம்

5.099.பாவநாசம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
2066 | பாவ மும்பழி பற்றற வேண்டுவீர் ஆவில் அஞ்சுகந் தாடு மவன்கழல் மேவ ராய்மிக வும்மகிழ்ந் துள்குமின் காவ லாளன் கலந்தருள் செய்யுமே. |
5.099.1 |
பாவமும் பழியும் ஆகிய பற்றுக்கள் அறுதலை விரும்புபவர்களே! பஞ்சகவ்வியம் உகந்து திருவபிடேகம் கொள்ளும் அப்பெருமான் கழலை மகிழ்ந்து மேவுபவராய் நினைவீராக; காத்து ஆள்வோனாகிய இறைவன் கலந்து அருள் செய்வான்.
2067 | கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் ஒங்கு மாகட லோதநீ ராடிலென் எங்கு மீச னெனாதவர்க் கில்லையே. |
5.099.2 |
கங்கை நீராடிலும், காவிரியில் நீராடிலும், மணமும் குளிர்ச்சியும் உடைய குமரித்துறையில் நீராடிலும்,பெருகி ஓலிக்கின்ற கடல் நீர்த்துறைதோறும் நீராடிலும் என்ன பயன்? எங்கும் இறைவன் என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
2068 | பட்ட ராகிலென் சாத்திரங் கேட்கிலென் இட்டு மட்டியு மீதொழில் பூணிலென் எட்டு மொன்று மிரண்டு மறியிலென் இட்ட மீச னெனாதவர்க் கில்லையே. |
5.099.3 |
பட்டர் ஆயினும், சாத்திரங்கள் பல கேட்பினும், இட்டும் சேர்த்தும் கொடுக்கும் தொழில் பூணிலும், எட்டும் ஓன்றும் இரண்டும் அறிந்தாலும் என்ன பயன்? விருப்பம் இறைவனுக்கு என்னாதவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம்.
2069 | வேத மோதிலென் வேள்விகள் செய்யிலென் நீதி நூல்பல நித்தல் பயிற்றிலென் ஓதி யங்கமோ ராறு முணரிலென் ஈச னையுள்கு வார்க்கன்றி யில்லையே. |
5.099.4 |
வேதம் ஓதினாலும், வேள்விகள் செய்தாலும், நீதிநூல்கள் பலவற்றை நித்தமும் பயிற்றினாலும், ஆறங்கங்களை ஓதி உணர்ந்தாலும் என்ன பயன்? ஈசனை உள்குபவர்க்கு அன்றிமற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லையாம்.
2070 | காலை சென்று கலந்துநீர் மூழ்கிலென் வேலை தோறும் விதிவழி நிற்கிலென் ஆலை வேள்வி யடைந்தது வேட்கிலென் ஏல ஈசனென் பார்க்கன்றி யில்லையே. |
5.099.5 |
காலையில் சென்று கலந்து நீரில் முழ்கினாலும், வேளைகள் தோறும் விதிவழிநின்றாலும், ஆலை போன்று வேள்வி அடைந்து வேட்பிலும் என்னபயன்? உள்ளம் பொருந்த இறைவன் என்பார்க்கேயன்றி மற்றவர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
2071 | கான நாடு கலந்து திரியிலென் ஈன மின்றி யிரும்தவஞ் செய்யிலென் ஊனை யுண்ட லொழிந்துவான் நோக்கிலென் ஞான னென்பவர்க் கன்றிநன் கில்லையே. |
5.099.6 |
காட்டுப பகுதிகளிற் கலந்து திரிந்தாலும், இழிவின்றிப் பெருந்தவம் செய்தாலும், ஊன் உண்ணுதலையொழிந்து வானத்தை நோக்கினாலும் என்ன பயன்? ஞானமயமாகியன்றி மற்றவர்க்கு இவற்றால் நற்பயன் இல்லை.
2072 | கூட வேடத்த ராகிக் குழுவிலென் வாடி யூனை வருத்தித் திரியிலென் ஆடல் வேடத்த னம்பலக் கூத்தனைப் பாட லாளர்க்கல் லாற்பய னில்லையே. |
5.099.7 |
வேடங்கள் கூடியவராகித் திரண்டாலும், உடலை வாடிவருத்தித் திரிந்தாலும் என்ன பயன்? ஆடல்வேடத்தைஉடையவனாகிய அம்பலக்கூத்தனைப் பாடுபவர்க்கு அல்லால் மற்றையோர்க்குப் பயன் இல்லை.
2073 | நன்று நோற்கிலென் பட்டினி யாகிலென் குன்ற மேறி இருந்தவஞ் செய்யிலன் சென்று நீரிற் குளித்துத் திரியிலென் என்று மீசனென் பார்க்கன்றி யில்லையே. |
5.099.8 |
நன்கு தவம்நோற்றாலும், உண்ணாவிரதம் கிடப்பினும், மலையில் ஏறிப் பெருந்தவம் செய்தாலும், சென்று நீரிற்குளித்துத் திரிந்தாலும் என்ன பயன்? என்றும் ஈசன் என்பார்க்கேயன்றி பற்றையோர்க்கு இவற்றாற் பயன் இல்லை.
2074 | கோடி தீர்த்தங் கலந்து குளித்தவை ஆடி னாலும் அரனுக்கன் பில்லையேல் ஓடு நீரினை யோட்டைக் குடத்தட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனோ டொக்குமே. |
5.099.9 |
கோடிதீர்த்தங்கள் தோறும் கலந்து குளித்து அவற்றில் நீராடிக் கிடந்தாலும் அரனிடத்து அன்பு இல்லையாயின். ஓடும் இயல்பினை உடைய நீரை ஓட்டைக்குடத்திலே நிறைத்து மூடிவைத்திட்ட மூர்க்கன் ஓருவனின் செயலோடே அது ஓக்கும்.
2075 | மற்று நற்றவஞ் செய்து வருந்திலென் பொற்றை யுற்றெடுத் தானுடல் புக்கிறக் குற்ற நற்குரை யார்கழற் சேவடி பற்றி லாதவர்க் குப்பய னில்லையே. |
5.099.10 |
மற்றும் நற்றவங்கள் பல செய்து வருந்தினால் என்ன பயன்? திருக்கயிலாயத்தை உற்று எடுத்த இராவணனது உடல் புகுந்து இற்றுப்போம்படிப் பொருந்திய நல்லொலிக் கழல்களபணிந்த சேவடியினிடத்துப் பற்றுதல் இல்லாதவர்க்குப் பயனே இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 94 | 95 | 96 | 97 | 98 | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாவநாசம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கலந்து, இவற்றாற், நீராடிலும், சென்று, செய்தாலும், திரிந்தாலும், திரியிலென், இறைவன், தோறும், யில்லையே, கில்லையே, யாடிலென், என்பார்க்கேயன்றி, பெருந்தவம், செய்து, னில்லையே, வேடத்த, பார்க்கன்றி, மற்றவர்க்கு, செய்யிலென், னெனாதவர்க், திருச்சிற்றம்பலம், திருமுறை, என்னாதவர்க்கு, இல்லையாம், பாவநாசம், வேள்விகள், வேள்வி