முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.002.கோயில்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.002.கோயில்
5.002.கோயில்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர் (எ) சபாநாதர்.
தேவியார் - சிவகாமியம்மை.
1082 | பனைக்கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்ப வர்மனங் கோயிலாக் கொண்டவன் அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத் தினைத்த னைப்பொழு தும்மறந் துய்வனோ. |
5.002.1 |
பனைபோன்ற கையையும், மும்மதங்களையும் உடைய யானைத்தோலை உரித்துப் போர்த்தவன்; தன்னை நினைப்பவர் மனத்தைக் கோயிலாக் கொண்டவன்; வேடம் அனைத்துமாம் அம்பலக்கூத்தன். இத்தகைய சிற்றம்பலக் கூத்தனைத் தினையளவுப் பொழுதும் மறந்து வாழ்வேனோ!
1083 | தீர்த்த னைச்சிவ னைச்சிவ லோகனை மூர்த்தி யைமுத லாய ஒருவனைப் பார்த்த னூக்கருள் செய்தசிற் றம்பலக் கூத்த னைக்கொடி யேன்மறந் துய்வனோ. |
5.002.2 |
அநாதியே பாசங்களின் நீங்கி நின்று தன்னை அடைந்தார்க்கு அவற்றை நீக்கியருளும் தூயனை, பேரின்ப வடிவினனை, சிவலோக நாயகனை, ஞான உருவினனை, உலகத்தோற்றத்தின் முன் அதற்கு மூலமாய் முன்னின்ற ஒருவனை, அருச்சுனனுக்கு வேடனாய்த்தோன்றியும், பாசுபதமீந்தும் அருள்செய்த சிற்றம்பலத்துக்கூத்தப்பிரானைக் கொடியேனாகிய யான் மறந்து வாழ்வேனோ? மறவேன்.
1084 | கட்டும் பாம்புங் கபாலங்கை மான்மறி இட்ட மாயிடு காட்டெரி யாடுவான் சிட்டர் வாழ்தில்லை யம்பலக் கூத்தனை எட்ட னைப்பொழு தும்மறந் துய்வனோ. |
5.002.3 |
தன்னைச் சுற்றிக் கட்டிக்கொண்டிருக்கும் பாம்பையும், கையின்கண் பிரமகபாலத்தையும் மான்கன்றையும் உடையவனும், சர்வசங்கார நிலையில் விரும்பி எரிவீசி ஆடுவோனும் ஆய சிட்டர்கள் வாழும் தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தனை எள்ளளவுப் பொழுதேனும் மறந்து வாழ்வேனோ?
1085 | மாணி பால்கறந் தாட்டி வழிபட நீணு லகெலாம் ஆளக் கொடுத்தவென் ஆணியைச் செம்பொ னம்பலத் துள்நின்ற தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ. |
5.002.4 |
பிரமசாரியாகிய சண்டேசர் பசுக்களின் பாலைக்கறந்து அபிடேகித்து வழிபட நீண்ட உலகம் பலவற்றையும் ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தவன்; பொன் உரையாணி போன்றவன்; செம்பொன்னம்பலத்துள் நின்று ஆடும் செம்பொருள். அவனைத் தனியனாய நான் மறவேன்.
1086 | பித்த னைப்பெருங் காடரங் காவுடை முத்த னைமுளை வெண்மதி சூடியைச் சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற அத்த னையடி யேன்மறந் துய்வனோ. |
5.002.5 |
பித்தன் என்ற பெயருடையவனை, இடுகாட்டையே ஆடுமிடமாகக்கொண்ட, இயல்பாகவே பாசங்களின் நீங்கியோனை, இளம்பிறைசூடியவனை, எல்லாம் வல்லவனை, செம்பொற் சபையிலே நின்று ஆடும் தலைவனை அடியேன் மறவேன்.
1087 | நீதி யைநிறை வைமறை நான்குடன் ஓதி யையொரு வர்க்கும் அறிவொணாச் சோதி யைச்சுடர்ச் செம்பொனி னம்பலத் தாதி யையடி யேன்மறந் துய்வனோ. |
5.002.6 |
நீதியாகவும், நிறைவாகவும், மறைகள் நான்கையும் தந்து பிரமனாதியர்க்கு உபதேசித்தவனாகவும், ஒருவர்க்கும் அறிய வொண்ணாத சோதியாகவும், ஒளி வீசும் செம்பொன்னம்பலத்து ஆதியாகவும் உள்ள பெருமானை அடியேன் மறந்து உய்தலும் கூடுமோ.
1088 | மைகொள் கண்டனெண் தோளன்முக் கண்ணினன் பைகொள் பாம்பரை யார்த்த பரமனார் செய்ய மாதுறை சிற்றம்ப லத்தெங்கள் ஐய னையடி யேன்மறந் துய்வனோ. |
5.002.7 |
திருநீலகண்டனும், எட்டுத்தோளனும்,முக்கண்ணினனும், படம் கொண்ட பாம்பை அரையிற் கட்டிய பரமனும், திருமகள் உறையும் சிற்றம்பலத்தின்கண் எங்கள் ஐயனுமாகிய பெருமானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
1089 | முழுதும் வானுல கத்துள தேவர்கள் தொழுதும் போற்றியுந் தூயசெம் பொன்னினால் எழுதி மேய்ந்தசிற் றம்பலக் கூத்தனை இழுதை யேன்மறந் தெங்ஙன முய்வனோ. |
5.002.8 |
விண்ணிலுள்ள தேவர் வந்து பரவிப்போற்றித் தூய செம்பொன்னினால் முழுதும் எழுதி மேய்ந்த சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமானை இழிவுடைய யான் மறந்து எங்ஙனம் உய்வன்?
1090 | காரு லாமலர்க் கொன்றையந் தாரனை வாரு லாமுலை மங்கைம ணாளனைத் தேரு லாவிய தில்லையுட் கூத்தனை ஆர்கி லாஅமு தைமறந் துய்வனோ |
5.002.9 |
கார்காலத்துப் பூக்கும் கொன்றை மாலையனை,கச்சணிந்த தனங்களை உடைய உமைகேள்வனை, தேர் உலாவும் தில்லையுள் கூத்தப்பெருமானை, உண்ணத்தெவிட்டாத அமுது போல் வானை அடியேன் மறந்து உய்தலுங் கூடுமோ.
1091 | ஓங்கு மால்வரை யேந்தலுற் றான்சிரம் வீங்கி விம்முற வூன்றிய தாளினான் தேங்கு நீர்வயல் சூழ்தில்லைக் கூத்தனைப் பாங்கி லாத்தொண்ட னேன்மறந் துய்வனோ. |
5.002.10 |
உயர்ந்த திருக்கயிலாயத்திருமலையை எடுக்கலுற்ற இராவணன் சிரங்கள் பருத்து விம்முதல் அடைய ஊன்றிய திருவடி உடையவனும் நீர்வளம் சான்ற தில்லையுட் கூத்துனும் ஆகிய பெருமானை நல்ல சார்பில்லாத தொண்டனேன் மறந்து உய்தலுங்கூடுமோ.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கோயில் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - துய்வனோ, மறந்து, யேன்மறந், பெருமானை, அடியேன், கூத்தனை, னம்பலத், வாழ்வேனோ, நின்று, மறவேன், கூடுமோ, சிற்றம்பலத்துக், தில்லையுட், உய்தலுங், துள்நின்ற, உடையவனும், முழுதும், செம்பொ, பாசங்களின், கொண்டவன், கோயிலாக், திருச்சிற்றம்பலம், திருமுறை, கூத்தனைத், னைப்பொழு, றம்பலக், னைச்சிவ, தும்மறந், கோயில்