முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.003.திருவரத்துறை
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.003.திருவரத்துறை
5.003.திருவரத்துறை
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
1092 | கடவு ளைக்கடலுள்ளெழு நஞ்சுண்ட உடலு ளானையொப் பாரியி லாதவெம் அடலு ளானை யரத்துறை மேவிய சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.1 |
நாம் தொழுவது கடவுளும், பாற்கடலுள் எழுந்த நஞ்சு உண்டு தரித்த, அருட்டிருமேனியுடையவனும், ஒப்புமை சொல்லத் தக்கார் இல்லாத ஆற்றல் உள்ளவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய ஒளியானவனும் ஆகிய பெருமானையே.
1093 | கரும்பொப் பானைக் கரும்பினிற் கட்டியை விரும்பொப் பானைவிண் ணோரும் அறிகிலா அரும்பொப் பானை யரத்துறை மேவிய சுரும்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.2 |
நாம் தொழுவது, கரும்பும், கரும்பினிற் கட்டியும் ஒப்பானும், விரும்பிய பொருளை ஒப்பானும், தேவரும் அறியா அரும்பு ஒப்பானவனும், அரத்துறைத் தலத்தை விரும்பிய வண்டு போல்வானும் ஆகிய பெருமானையே.
1094 | ஏறொப் பானையெல் லாவுயிர்க் கும்மிறை வேறொப் பானைவிண் ணோரும் அறிகிலா ஆறொப் பானை யரத்துறை மேவிய ஊறொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.3 |
நாம்தொழுவது ஏறு ஒப்பானும், எல்லா உயிர்க்கும் இறைவனாகச் சிறந்து நிற்பானும், தேவரும் அறியாநெறி ஒப்பானும், அரத்துறைத் தலத்தை மேவிய உறுபொருளாவானுமாகிய பெருமானையே.
1095 | பரப்பொப் பானைப் பகலிருள் நன்னிலா இரப்பொப் பானை யிளமதி சூடிய அரப்பொப் பானை யரத்துறை மேவிய சுரப்பொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.4 |
நாம் தொழுவது திருவரத்துறையை விரும்பி எழுந்தருளியவனும் பிறை சூடியவனுமாகிய பகல் ஒளியின் பரப்பையும், இருளில் நன்மைபுரியும் வளர்மதியின் வளர்ச்சியினையும், குறும்பையும், அன்புகாரணமாக உண்டாகும் பாலின் சுரத்தலையும் ஒக்கும் முதல்வனையே, பிறரை அன்று.
1096 | நெய்யொப் பானைநெய் யிற்சுடர் போல்வதோர் மெய்யொப் பானைவிண் ணோரு மறிகிலார் ஐயொப் பானை யரத்துறை மேவிய கையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.5 |
நாம் தொழுவது நெய்யும், நெய்யிற் சுடர் போல் விளங்கும் மெய்யும், பெருவியப்பும் போல்வானும், தேவரும் அறியாதவனும் அரத்துறை யென்னுந் தலத்தை விரும்பிய ஒழுக்க மாவானுமாகிய பெருமானையே.
1097 | நெதியொப் பானை நெதியிற் கிழவனை விதியொப் பானைவிண் ணோரு மறிகிலார் அதியொப் பானை யரத்துறை மேவிய கதியொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.6 |
நாம் தொழுவது நியதி ஆவானும், நியதியின் தலைவனும், விதியாவானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும், விச்சுவாதிகளும் ஆகிய அரத்துறையென்னுந் தலத்தை மேவி உயிர்களுக்குக் கதியாயிருப்பானையே.
1098 | புனலொப் பானைப் பொருந்தலர் தம்மையே மினலொப் பானைவிண் ணோரு மறிகிலார் அனலொப் பானை யரத்துறை மேவிய கனலொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.7 |
நாம் தொழுவது புனலும், பொருந்தாதார்க்கு மின்னலும். அனலும் போல்வானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும் அரத்துறைத் தலத்துக் கனல் போன்றவனுமாகிய பெருமானையே.
1099 | பொன்னொப் பானைப்பொன் னிற்சுடர் போல்வதோர் மின்னொப் பானைவிண் ணோரு மறிகிலார் அன்னொப் பானை யரத்துறை மேவிய தன்னொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.8 |
நாம் தொழுவது, பொன்னும், பொன்னின் சுடர் போன்ற மின்னலும், அன்னையும் ஒப்பானும், தேவர்களாலும் அறிய முடியாதவனும், அரத்துறைத் தலத்து எழுந்தருளியிருந்து தனக்குத் தானே ஒப்பானவனுமாகிய பெருமானையே.
1100 | காழி யானைக் கனவிடை யூருமெய் வாழி யானைவல் லோருமென் றின்னவர் ஆழி யான்பிர மற்கும ரத்துறை ஊழி யானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.9 |
நாம்தொழுவது, காழித்தலத்துக் கடவுளும், பெருமையை உடைய விடையூரும் நித்தத் திருமேனி உள்ளவரும், பிறரால் வல்லோரும் என்று கூறப்படுவோராகிய திருமால் பிரமனுக்கும், ஒடுங்கும் தானமாக உள்ளவருமாகிய திரு அரத்துறை அடிகளையே.
1101 | கலையொப் பானைக் கற்றார்க்கோ ரமுதினை மலையொப் பானை மணிமுடி யூன்றிய அலையொப் பானை யரத்துறை மேவிய நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே. |
5.003.10 |
நாம் தொழுவது கலையும், கற்றார்க்கமுதும், மலையும் போல்வானும், மலையெடுக்கலுற்ற இராவணனை மணி முடியின்கண் ஊன்றி அலைக்கலுற்றானும், அரத்துறை மேவிநிலை பெற்றிருப்பானுமாகிய பெருமானையே.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவரத்துறை - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தொழுவதே, டீர்நாந், யரத்துறை, தொழுவது, பானைக்கண், பெருமானையே, பானைவிண், ஒப்பானும், தலத்தை, அரத்துறைத், விரும்பிய, போல்வானும், மறிகிலார், தேவரும், முடியாதவனும், தேவர்களாலும், அரத்துறை, மின்னலும், பானைப், நாம்தொழுவது, கரும்பினிற், திருச்சிற்றம்பலம், திருமுறை, கடவுளும், பானைக், ணோரும், திருவரத்துறை, அறிகிலா