முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.035.திருக்குரங்காடுதுறை
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.035.திருக்குரங்காடுதுறை
2.035.திருக்குரங்காடுதுறை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - குலைவணங்குநாதர்.
தேவியார் - அழகுசடைமுடியம்மை.
1841 | பரவக்
கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி அரவச் சடையந் தணன்மே யவழகார் குரவப் பொழில்சூழ் குரங்கா டுதுறையே. |
2.035. 1 |
பூதகணங்கள் சூழ இரவில் சுடுகாட்டில் நின்று எரி ஆடுபவனும், அரவணிந்த சடையினை உடைய அந்தணனும் ஆகிய சிவபிரானது குராமரப் பொழில் சூழ்ந்த குரங்காடுதுறையைப் பரவ வலிய வினைகள் கெட்டொழியும்.
1842 | விண்டார்
புரமூன்று மெரித்த விமலன் இண்டார் புறங்காட் டிடைநின்றெரி யாடி வண்டார் கருமென் குழன்மங் கையொர்பாகம் கொண்டா னகர்போல் குரங்கா டுதுறையே. |
2.035.2 |
தன்னோடு பகை பூண்டவராகிய அசுரர்களின் முப்புரங்களையும் எரித்தழித்த விமலனும், இண்டங்கொடிகள் படர்ந்த சுடுகாட்டில் நின்று எரியாடுபவனும், வண்டுகள் மொய்க்கும் மெல்லிய கூந்தலை உடையவளாகிய உமையம்மையை ஒருபாகமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.
1843 | நிறைவில்
புறங்காட்டிடைநே ரிழையோடும் இறைவில் லெரியான் மழுவேந் திநின்றாடி மறையின் னொலிவா னவர்தா னவரேத்தும் குறைவில் லவனூர் குரங்கா டுதுறையே. |
2.035. 3 |
நிறைதல் இல்லாத சுடுகாட்டுள் நின்று அழிவற்ற எரியைக் கையில் உடையவனாய் மழு ஏந்தி உமையம்மையோடு ஆடுபவனும், வேத ஒலியால் தேவர், அசுரர் ஆகியோரால் தொழப்படும் குறைவற்றவனும் ஆகிய சிவபிரானது ஊர், குரங்காடுதுறை.
1844 | விழிக்குந்
நுதன்மே லொருவெண் பிறைசூடித் தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப் பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன் கொழிக்கும் புனல்சூழ் குரங்கா டுதுறையே. |
2.035.4 |
விழியை உடைய நெற்றியின்மேல் தலையின் முன்பாகத்தில் பிறைசூடி, ஒலிக்கும் சுடுகாட்டை அடைந்து எரியாடி, எல்லோரும் பழித்துரைக்கப் பலியேற்றுத்திரியும் சிவபிரானது ஊர் பொன் கொழிக்கும் காவிரி நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறையாகும்.
1845 | நீறார்
தருமே னியனெற் றியொர்கண்ணன் ஏறார் கொடியெம் மிறையீண் டெரியாடி ஆறார் சடையந் தணனா யிழையாளோர் கூறா னகர்போல் குரங்கா டுதுறையே. |
2.035.5 |
நீறு பூசிய மேனியன். நெற்றிக் கண்ணன். விடைக்கொடியை உடைய எம் தலைவன் மிகுதியான தீயில் நின்று ஆடுபவன். கங்கை சூடிய சடையினை உடைய கருணையாளன். உமையொருபாகன். அவனது நகர் குரங்காடுதுறை.
1846 | நளிரும்
மலர்க்கொன் றையுநா றுகரந்தைத் துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில் குளிரும் புனல்சூழ் குரங்கா டுதுறையே. |
2.035. 6 |
குளிர்ந்த கொன்றைமலர், மணம் வீசும் சிவகரந்தைத் தளிர் ஆகியவற்றைக் கலந்தணிந்து சுடுகாட்டில் எரியில் நின்றாடும் அழகனாய், விளங்கும் பாம்பை இடையில் கட்டியவன் ஆகிய சிவபிரான் மேவிய கோயிலைக் கொண்டது குளிர்ந்த நீரால் சூழப்பட்ட குரங்காடுதுறை.
1847 | பழகும்
வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் முழவங் குழன்மொந் தைமுழங் கெரியாடும் அழகன் னயின்மூ விலைவேல் வலனேந்தும் குழகன் னகர்போல் குரங்காடு துறையே. |
2.035. 7 |
பிறவிதோறும் பழகிய வினைகளைத் தீர்ப்பவன். பார்வதி தேவியோடு முழவு, குழல், மொந்தை ஒலிக்க இடுகாட்டுள் முழங்கும் தீயில் நின்று எரியாடும் அழகன். கூரிய மூவிலைவேலை வெற்றிக்கு அடையாளமாக ஏந்தும் இளையோன் ஆகிய சிவபிரானது நகர் குரங்காடுதுறை.
1848 | வரையார்த்
தெடுத்தவ் வரக்கன் வலியொல்க நிரையார் விரலா னெரித்திட் டவனூராம் கரையார்ந் திழிகா விரிக்கோ லக்கரைமேல் குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே. |
2.035.8 |
கயிலைமலையை ஆரவாரித்துப் பெயர்த்த இராவணனின் வலிமை கெடுமாறு காலிலமைந்த விரலால் நெரித்தவனாகிய சிவபிரானது ஊர், கரையைப் பொருந்தி ஓடிவரும் காவிரியாற்றின் அழகிய கரைமேல் ஒலி பொருந்திய பொழில் சூழ்ந்திலங்கும் குரங்காடுதுறையாகும்.
1849 | நெடியா
னொடுநான் முகனுந் நினைவொண்ணாப் படியா கியபண்டங்கனின் றெரியாடி செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின் கொடியா னகர்போல் குரங்கா டுதுறையே. |
2.035. 9 |
திருமால், பிரமர்கள் நினையவும் ஒண்ணாத இயல்பினன். பாண்டரங்கக் கூத்தை ஆடியவன். எரியில் நின்று ஆடு பவன். முடை நாற்றம் வீசும் தலையோட்டை ஏந்தியவன். சிவந்த கண்களை உடைய திருமாலாகிய வெள்விடையைக் கொடியாக உடையவன். அவனது நகர் குரங்காடுதுறை.
1850 | துவரா
டையர்வே டமலாச் சமண்கையர் கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம் நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக் குவையார் கரைசேர் குரங்கா டுதுறையே. |
2.035. 10 |
துவராடை அணிந்த புத்தர்களும், வேட மல்லாத வேடம் பூண்ட சமணர்களாகிய கீழோரும் பேசும் ஐய உரைகளை விரும்பாத சிவபிரானது ஊர், மலைகளிலிருந்து சிதைந்து வந்த மணிகள், பொன், அகில், சந்தனம் ஆகியவற்றை உந்திவந்து குவியலாகக்கரையில் சேர்க்கும் காவிரியின் கரையில் உள்ள குரங்காடுதுறையாம்.
1851 | நல்லார்
பயில்காழி யுண்ஞான சம்பந்தன் கொல்லே றுடையான் குரங்கா டுதுறைமேல் சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே. |
2.035. 11 |
நல்லவர்கள் வாழும் காழியுள் தோன்றிய ஞான சம்பந்தன் கொல்லேற்றை ஊர்தியாக உடைய சிவபிரான் எழுந்தருளிய குரங்காடுதுறைமேல் பாடிய தமிழ்மாலை பத்தையும் பாடித்தொழ வல்லவர், வானவரோடு உறைவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 33 | 34 | 35 | 36 | 37 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்குரங்காடுதுறை - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - குரங்கா, டுதுறையே, சிவபிரானது, குரங்காடுதுறை, நின்று, னகர்போல், புறங்காட், சுடுகாட்டில், குளிர்ந்த, வீசும், தீயில், குரங்காடுதுறையாகும், எரியில், டெரியாடி, குரங்காடு, தமிழ்மாலை, சம்பந்தன், துறையே, சூழப்பட்ட, சிவபிரான், புனல்சூழ், சடையினை, ஆடுபவனும், றெரியாடி, சடையந், திருச்சிற்றம்பலம், பொழில், பொழில்சூழ், கொழிக்கும், திருமுறை, திருக்குரங்காடுதுறை, நீரால்