முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.034.திருப்பழுவூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.034.திருப்பழுவூர்
2.034.திருப்பழுவூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வடவனநாதர்.
தேவியார் - அருந்தவநாயகியம்மை.
1830 | முத்தன்மிகு
மூவிலைநல் வேலன்விரி நூலன் அத்தனெமை யாளுடைய வண்ணலிட மென்பர் மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப் பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே. |
2.034.1 |
இயல்பாகவே பாசங்களில் நீங்கியவன், மூவிலை வடிவானவேலை உடையவன், விரிந்த வேதங்களை அருளியவன். தலைவன் எம்மை ஆளாக உடைய முதல்வன். அவனது இடம் கரிய தழைகளை உடைய பெரிய பொழிலின் மணம் கமழ்வதும், பத்தர் சித்தர் பயில்வதுமான பழுவூர் என்பர்.
1831 | கோடலொடு
கோங்கவை குலாவுமுடி தன்மேல் ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர் மாடமலி சூளிகையி லேறிமட வார்கள் பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே. |
2.034. 2 |
வெண்காந்தள் மலரும் கோங்கமலரும் சூடிய, முடிமேல் ஆடும் அரவினையும் அணிந்துள்ள, பெருமானின் இடம், பெண்கள் மாடங்களின் உச்சியில் ஏறிப்பாடும் ஒலி நிறைந்துள்ள பழுவூர் என்பர்.
1832 | வாலிய
புரத்திலவர் வேவவிழி செய்த போலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர் வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர் பாலென மிழற்றிநட மாடுபழு வூரே. |
2.034. 3 |
பெரிய முப்புரங்களைத் தமது இல்லமாகக் கொண்ட அவுணர் வெந்தழியுமாறு கண் விழித்த கோலத்தைக் கொண்ட ஒப்பற்றவரும், முப்புரி நூலணிந்தவருமான சிவபெருமானது இடம், வயல்களில் முளைத்த தாமரைமலர் போன்ற முகத்தினராய மகளிர் பால் போல இனிய சொற்களால் பாடல் பாடி நடம் புரியும் பழுவூர் என்பர்.
1833 | எண்ணுமொ
ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார் கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர் மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப் பண்ணினொலி கொண்டுபயில் கின்ற பழுவூரே. |
2.034.4 |
எண், எழுத்து, இசை இவற்றை ஆராய்வளர் கருதும் முதற்பொருளாய கடவுளின் இடம், மலையாள அந்தணர் உலகில் பாடியாடித் தொழுது ஏத்திப்பாடி வழிபடும் பழுவூர் என்பர்.
1834 | சாதல்புரி
வார்சுடலை தன்னில்நட மாடும் நாதனமை யாளுடைய நம்பனிட மென்பர் வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன் பாதமவை யோதநிகழ் கின்றபழு வூரே. |
2.034. 5 |
இறந்தவர்களை எரிக்கும் சுடலையில் நடனமாடும் நாதனும் நம்மை ஆளாக உடைய நம்பனும் ஆகிய சிவபெருமானது இடம் மறையாளர் வேதங்களை ஓதி இறைவனின் திருவடிப் பெருமைகளைப்பாடும் பழுவூர் என்பர்.
1835 | மேவயரு
மும்மதிலும் வெந்தழல் விளைத்து மாவயர வன்றுரிசெய் மைந்தனிட மென்பர் பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப் பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே. |
2.034.6 |
தங்கள் மீது மேவுதலால் துயர் செய்வனவாகிய மும்மதில்களையும் வெந்தழலால் அழித்தும், யானையை அயருமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தும் வீரம் விளைவித்த சிவபிரானது இடம், நாகண வாய்ப் பறவைக்கு இறைவன் புகழைக் கற்பித்துப் பேச வைக்கும் பெண்கள் கற்பொடு விளங்கும் பழுவூர் என்பர்.
1836 | மந்தண
மிருந்துபுரி மாமடிதன் வேள்வி சிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர் அந்தணர்க ளாகுதியி லிட்டவகின் மட்டார் பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே. |
2.034.7 |
இரகசிய ஆலோசனைகளுடன் மாமனாகிய தக்கன் செய்த வேள்வி அழியுமாறு செய்த சிவபெருமானது இடம், அந்தணர்கள் செய்த வேள்விகளால் அகிலின் மணம் கமழ்வதும் அணிகலன்கள் அணிந்த அழகிய பெண்களின் காலடிச் சுவடுகள் உடையதுமான பழுவூர் என்பர்.
1837 | உரக்கடல்
விடத்தினை மிடற்றிலுற வைத்தன் றரக்கனை யடர்த்தருளு மப்பனிட மென்பர் குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டு பரக்குறு புனற்செய்விளை யாடுபழு வூரே. |
2.034.8 |
வலிய கடலிடை எழுந்த நஞ்சினை மிடற்றிடை வைத்துள்ளவனும், அக்காலத்தில் இராவணனை அடர்த்து அருள் செய்த தந்தையும் ஆகிய சிவபிரானது இடம், குரங்குகள் மணமுடைய பொழிலின் மீது ஏறிக் கனிவகைகளை உண்டு நீர் பரவிய வயல்களில் விளையாடும் பழுவூர் என்பர்.
1838 | நின்றநெடு
மாலுமொரு நான்முகனும் நேட அன்றுதழ லாய்நிமிரு மாதியிட மென்பர் ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள் மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே. |
2.034. 9 |
உயர்ந்து நின்ற திருமாலும் நான்முகனும் தேடுமாறு அன்று அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த தலைவனது இடம், சிவபரம் பொருளாகிய ஒருவனையும், நால்வேதங்களையும் ஆறு அங்கங் களையும் உணர்ந்தவர்கள் பொது இடங்களிலிருந்து மகிழ்ந்துறையும் ஊராகிய பழுவூர் என்பர்.
1839 | மொட்டையம
ணாதர்துகின் மூடுவிரி தேரர் முட்டைகண் மொழிந்தமுனி வான்றனிட மென்பர் மட்டைமலி தாழையிள நீரதிசை பூகம் பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே. |
2.034. 10 |
முண்டிதமான தலையை உடைய அமணர்களாகிய அறிவிலிகளும் ஆடையைவிரித்து உடலைப் போர்த்த தேரர்களும் ஆகிய குற்ற முடையோர் கூறுவனவற்றை ஏலாத இறைவனது இடம், மட்டைகள் நிறைந்த தென்னையினது இளநீர்களும் கமுக மரங்களின் பாக்குப் பட்டைகளோடு கூடிய பாக்குக் குலைகளும் நிறைந்த பழுவூர் என்பர்.
1840 | அந்தணர்க ளானமலை
யாளரவ ரேத்தும் பந்தமலி கின்றபழு வூரரனை யாரச் சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி வந்தவண மேத்துமவர் வானமுடை யாரே. |
2.034. 11 |
மலையாள அந்தணர்கள் ஏத்தும் அருளுறவு நிறைந்த பழுவூர் இறைவனை ஞானசம்பந்தன் மனம் ஆரச் சந்த இசையால் பாடிய இப்பாடல்களை விரும்பித் தமக்கு இயன்ற இசையோடு ஏத்தித் தொழுபவர் சிவலோகம் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 32 | 33 | 34 | 35 | 36 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பழுவூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பழுவூர், என்பர், மென்பர், கின்றபழு, சிவபெருமானது, நிறைந்த, மலையாள, கற்பொடு, அந்தணர்க, நான்முகனும், அந்தணர்கள், வயல்களில், வேள்வி, சிவபிரானது, வார்கள், யாளுடைய, திருச்சிற்றம்பலம், திருமுறை, வேதங்களை, பொழிலின், திருப்பழுவூர், கமழ்வதும், பெண்கள்