முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.001.திருப்பூந்தராய்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.001.திருப்பூந்தராய்

2.001.திருப்பூந்தராய்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
1470 | செந்நெ
லங்கழ னிப்பழ னத்தய லேசெழும் புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய் துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர் பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே. |
2.001.1 |
செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில், நல்ல தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம்பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக.
1471 | எற்று
தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள் பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச் சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர் பெற்றம் ஏறுதல் பெற்றிமை யோபெரு மானிரே. |
2.001. 2 |
எறிகின்ற தௌந்த கடல் அலைகளில் ஏறிவந்த சங்குகளும் இப்பிகளும் பொன்போல் விளங்கும் தாமரைகள் மலர்ந்த வயல்களில் வந்து புகும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் சூழ்ந்து தொழும் அழகிய திருவடிகளை உடைய இறைவரே! அயிராவணம் முதலிய ஊர்திகள் இருக்க விடையேறி வருதல் உமக்கு ஏற்ற தன்மைத் தாகுமோ? சொல்வீராக.
1472 | சங்கு
செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடு பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த் துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர் மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே. |
2.001.3 |
பொங்கி வரும் தௌந்த கடல் அலைகள் சங்கு செம்பவளம் முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து வீசும் நீர்வளம் சான்ற பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் உயரிய பெரிய களிற்று யானையை உரித்து அதன் தோலைப் போர்த்து மகிழ்ந்துறையும் இறைவரே! உமது திருமேனியின் இடப்பாகமாக உமையம்மையை ஓருடம்பில் ஒன்றுவித்துள்ள மாண்புயாதோ? சொல்வீராக.
1473 | சேம
வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர் பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச் சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர் காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே. |
2.001.4 |
பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும் பொன்னால் அழகுறுத்தப்பெற்ற அழகிய மாளிகைகளும், மிக உயர்ந்து மலர்மணம் கமழும் சோலைகளும் சூழ்ந்துள்ள பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், திங்களும் பாம்பும் தங்கிய செஞ்சடையுடையவராய் எழுந்தருளிய இறைவரே! உயிர்கட்குப் போகத்தின் மேல் அவாவினை விளைக்கும் மன்மதன் வெண்பொடியாகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து அழித்தது ஏனோ? சொல்வீராக.
1474 | பள்ள
மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன புள்ளு நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த் துள்ளு மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர் வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே. |
2.001. 5 |
நீர்ப்பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்துகொள்ளுதற்குத் திரியும் பிளந்த வாயை உடைய நாரைப் பறவைகள், நாள்தோறும், பல இடங்களிலிருந்தும் வந்து தங்கும் பொழில்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், துள்ளுகின்ற மான் கன்றை ஏந்திய செங்கையை உடைய சிவபிரானே பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சிவந்த சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய வியத்தகு செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1475 | மாதி
லங்கிய மங்கைய ராட மருங்கெலாம் போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச் சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர் காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே. |
2.001. 6 |
அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும், ஊர் மருங்கெலாம் பூத்துள்ள அழகிய தாமரை மலர்கள் தம்மிடம் நிறைந்துள்ள தேனை ஒழுக விடுவதும் ஆகிய நீர்வளம் மிக்க பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், ஒளிமிக்க அழகிய தமது திருமேனியில் வெண்ணீறு அணிந்து எழுந்தருளிய இறைவரே! காதுகள் இரண்டனுள் ஒன்றில் குழையையும் ஒரு காதில் சங்கத் தோட்டையும் அணிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1476 | வருக்க
மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள் தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த் துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர் அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே. |
2.001. 8 |
இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண் குரங்குகளோடு கூடி, மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும் கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப் பதியில் எழுந்தருளியிருந்து, செலுத்தக்க மாலாகிய இடபத்தின் மேல் காட்சிதரும் அடிகளே! இராவணனின் தருக்கினை அழித்து உடன் அவனுக்கு அருள் வழங்கிய ஆக்கத்திற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1477 | வரிகொள்
செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம் புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச் சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர் கரிய மால்அயன் நேடிஉ மைக்கண்டி லாமையே. |
2.001. 9 |
மருங்கெலாம் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய கயல்மீன்கள் பாயும் நீர் நிலை சூழ்ந்ததும், மதில்கள் சூழ்ந்து நீண்டு உயர்ந்த மாடமாளிகைகள் விளங்குவதுமான பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், வேதங்களைப் பாடியும், இசைப்பாடல் போன்ற இனிய மொழிகளைப் பேசியும் எழுந்தருளி விளங்கும் இறைவரே! கரிய திருமாலும் பிரமனும் உம்மைத் தேடிக் காண இயலாமைக்குரிய காரணம் யாதோ? சொல்வீராக.
1478 | வண்டலங்கழ
னிம்மடை வாளைகள் பாய்புனற் புண்ட ரீகம லர்ந்தும துத்தரு பூந்தராய்த் தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர் குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே. |
2.001. 10 |
வளம்மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின் மடைகளில் வாளை மீன்கள் பாயும் நீர் நிலைகளில் தாமரைமலர்கள் மலர்ந்து தேனைத்தரும் புந்தராய் என்னும் சீகாழிப் பதியில், தொண்டர்கள் வந்து வணங்கும் கழல் அணிந்த பழமையான திருவடிகளை உடைய இறைவரே! சமணர்களும் சாக்கியர்களும் உம்மைக் கூறும் பொருளற்ற பழிமொழிகட்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1479 | வார்கடல்
வந்தண வும்மணற் கானல்வாய்ப் புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப் பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார் அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே. |
2.001. 11 |
சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர் வந்து சேரும் மணல் நிறைந்த கடற்கரைச் சோலைகளைக் கொண்டுள்ள புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், அழகுமிக்க பூந்தராயில் எழுந்தருளிய இறைவரைப் பரவிப்பாடிய இப்பதிகப் பாடல் பத்தையும் ஓதவல்லவர் தீவினை அகல்வர். அவர்கள் நல்வினை உடையவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பூந்தராய் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சொல்வீராக, என்னும், பூந்தராய், இறைவரே, காரணம், சீகாழிப்பதியில், பதியில், மருங்கெலாம், பூந்தராய்ச், பூந்தராய்த், சீகாழிப், லீர்சொலீர், விளங்கும், திருப்பூந்தராய், திருவடிகளை, செஞ்சடை, எழுந்தருளிய, சூழ்ந்த, மீன்களை, நல்வினை, தீவினை, பாயும், கடைக்கண், நிறைந்துள்ள, கொண்டுள்ள, அகல்வர், தெண்டிரை, நல்லிமை, வைத்ததே, புன்னை, திருச்சிற்றம்பலம், திருமுறை, மரங்கள், தேவர்கள், சூழ்தரு, நீர்வளம், சூழ்ந்து, வணங்கும், யீர்சொலீர்