முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.033.திருநள்ளாறு
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.033.திருநள்ளாறு
2.033.திருநள்ளாறு
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ள சப்த தியாகர் தலங்களிலொன்று.
சுவாமிபெயர் - தெர்ப்பாரணியர்.
தேவியார் - போகமார்த்தபூண்முலையம்மை.
1819 | ஏடுமலி
கொன்றையர விந்துவிள வன்னி மாடவல செஞ்சடையெ மைந்தனிட மென்பர் கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை நாடுமலி வாசமது வீசியநள் ளாறே. |
2.033.1 |
இதழ்கள் நிறைந்த கொன்றைமலர், பாம்பு, திங்கள், வன்னிஇலை ஆகியவற்றை அணிந்த செஞ்சடையை உடைய சிவபிரானது இடம் கிளைகளோடு கூடிய ஞாழல், குரவு. சுரபுன்னை முதலிய மரங்களின் மணம் வீசும் திருநள்ளாறு ஆகும்.
1820 | விண்ணியல்
பிறைப்பிள வறைப்புனன் முடித்த புண்ணிய னிருக்குமிட மென்பர்புவி தன்மேல் பண்ணிய நடத்தொடிசை பாடுமடி யார்கள் நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே. |
2.033. 2 |
வானில் இயங்கும் பிறைமதியோடு கங்கையையும் முடியில் சூடிய புண்ணியனாகிய சிவபிரான் இருக்குமிடம், உலகில் ஆடிப்பாடி அடியவர்கள் மனம் பொருந்த வழிபாடு செய்யும் திருநள்ளாறு ஆகும்.
1821 | விளங்கிழை
மடந்தைமலை மங்கையொரு பாகத் துளங்கொள விருத்திய வொருத்தனிட மென்பர் வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவி நளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே. |
2.033. 3 |
விளங்கும் அணிகலன்களைப் பூண்டுள்ள மலைமங்கையைமேனியின் ஒருபாகமாக இருத்தியுள்ள ஒப்பற்றவனாகிய சிவபிரான் இருக்கும் இடம், நளன் வந்து தங்கி நாள்தோறும் தூபதீபங்களுடன் மலர்தூவி வழிபட்டுக் கலி நீங்கப்பெற்ற திருநள்ளாறு ஆகும்.
1822 | கொக்கரவர்
கூன்மதியர் கோபர்திரு மேனிச் செக்கரவர் சேருமிட மென்பர்தட மூழ்கிப் புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரு நண்ணி நக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே. |
2.033.4 |
திருக்குளத்தில் மூழ்கி நாகலோகத்தவரும், வித்யாதரர்களும், தேவர்களும், திகம்பரராய சிவபெருமான்திருவைந்தெழுத்தை நினைந்து வழிபடும் திருநள்ளாறு, கொக்கிற்கு அணிந்தவர். வளைந்த பிறைமதியைச் சூடியவர், கோபம் உடையவர், சிவந்த திருமேனியர் ஆகிய சிவபெருமான் சேரும் இடம், என்பர்.
1823 | நெஞ்சமிது
கண்டுகொ ளுனக்கென நினைந்தார் வஞ்சம தறுத்தருளு மற்றவனை வானோர் அஞ்சமுது காகியவர் கைதொழ வெழுந்த நஞ்சமுது செய்தவனி ருப்பிடநள் ளாறே. |
2.033.5 |
மனமே! இதுவே நீ உய்தற்குரிய நெறி எனத் தம் மனத்துக்கு அறிவுறுத்தி நினைந்தவர்களின் குற்றங்களைப் போக்கி யருள் பவரும், தேவர்கள் கடலிடைத் தோன்றிய நஞ்சைக் கண்டு அஞ்சி, புறமுதுகிட்டு ஓடிவந்து, தன்னை வந்து கைதொழுத அளவில், அந்நஞ்சினை அமுதாக உண்டவரும் ஆகிய சிவபிரானது இருப்பிடம் திருநள்ளாறு.
1824 | பாலனடி
பேணவவ னாருயிர் குறைக்குங் காலனுடன் மாளமு னுதைத்தவர னூராம் கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர் நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே. |
2.033. 6 |
மார்க்கண்டேயர் தம் திருவடிகளை வணங்கும் வேளையில் அவர் உயிரைக் கவர்தற்கு வந்த காலன் உடனே மாளுமாறு உதைத்தருளிய சிவபிரானது ஊர். மறையவர் அழகிய மலர்கள், நீர் நிரம்பிய குடங்கள் ஆகியவற்றை எடுத்து வந்து நால்வேத நெறிநின்று நீராட்டி, அருச்சித்து வழிபடும் திருநள்ளாறு ஆகும்.
1825 | நீதியர்
நெடுந்தகையர் நீண்மலையர் பாவை பாதியர் பராபரர் பரம்பர ரிருக்கை வேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும் ஓதியர னாமமு முணர்த்திடுநள் ளாறே. |
2.033. 7 |
நீதி வடிவினர். மேலான குணங்களை உடையவர். புகழ் விரிந்த கயிலைமலைக்கு உரியவர். உமையொரு கூறர். மேலானவர். அவரது இருப்பிடம் அந்தணர்கள் நாள்தோறும் வேள்வி செய்து வேதங்களை ஓதித் திருவைந்தெழுத்தின் சிறப்பை உணர்த்தி வரும் திருநள்ளாறு ஆகும்.
1826 | கடுத்துவ
லரக்கன்மு னெருக்கிவரை தன்னை எடுத்தவன் முடித்தலைகள் பத்துமிகு தோளும் அடர்த்தவர் தமக்கிடம தென்பர்அளிபாட நடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே. |
2.033.8 |
சினந்து வந்த கயிலைமலையை அடைந்து அதனை எடுத்தவனாகிய வலிய இராவணனின் முடியணிந்த தலைகள் பத்தையும், வலிமிகுந்த இருபது தோள்களையும் அடர்த்தவனாகிய சிவபிரானது இடம். வண்டுகள் இசைபாட மக்கள் நடைமுறையில் பயன்படுத்தும் மணப் பொருள்களின் மணம் நிறைந்த திருநள்ளாறு ஆகும்.
1827 | உயர்ந்தவ
னுருக்கொடு திரிந்துலக மெல்லாம் பயந்தவ னினைப்பரிய பண்பனிட மென்பர் வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும் நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே. |
2.033.9 |
உயர்ந்த உருவம் கொண்டு திரிந்த திருமால், உலகங்கள் அனைத்தையும் படைத்த பிரமன் ஆகியோர் நினைப்பதற்கும் அரிய பண்புகளை உடைய சிவபிரானது இடம் தேவர்கள் வியந்து போற்ற மலர்கள் நிறைந்த பொழில்கள் சூழ்ந்து விளங்குவதும் எல்லா இடங்களிலும் அறநெறியின் வடிவான வேதங்களின் ஒலி நிறைந்துள்ளதுமான திருநள்ளாறு என்பர்.
1828 | சிந்தைதிரு
கற்சமணர் தேரர்தவ மென்னும் பந்தனை யறுத்தருள நின்றபர மன்னூர் மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச் சந்தம்விர விப்பொழின் முழங்கியநள் ளாறே. |
2.033.10 |
மனம் மாறுபட்ட சமணர் தேரர்கள் செய்யும் தவம் என்னும் கட்டுப்பாடுகளை விலக்கி, தன்னை வழிபடும் அன்பர்க்கு அருள்புரிய நின்ற பரமனது ஊர், மந்த இசையொடு முழவம் முழங்கும்விழாக்களின் ஒலியும், வேதவொலியும் கலந்து நிறைந்து பொழிலில் முழங்கும் திருநள்ளாறு ஆகும்.
1829 | ஆடலர
வார்சடைய னாயிழைதன் னோடும் நாடுமலி வெய்திட விருந்தவனள் ளாற்றை மாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல் பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே. |
2.033.11 |
ஆடுகின்ற அரவினை அணிந்த சடையினனாகிய சிவபிரான் உமையம்மையோடு உலகம் மகிழ்ச்சியால் நிறையுமாறு எழுந்தருளியுள்ள திருநள்ளாற்றை, மாடவீடுகள் நிறைந்த சீகாழியில் வாழும் ஞானசம்பந்தன் பாடிய செஞ்சொற்களாலியன்ற இப்பதிகப் பாடல்களைப் பாடி வழிபடுபவரைப் பழிகளும் நோய்களும் அடையா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநள்ளாறு - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருநள்ளாறு, சிவபிரானது, நிறைந்த, மென்பர், சிவபிரான், வழிபடும், மலர்கள், இருப்பிடம், உடையவர், தேவர்கள், நாள்தோறும், என்பர், பாடுசெய்நள், திருச்சிற்றம்பலம், திருமுறை, நாடுமலி, ஆகியவற்றை, அணிந்த, செய்யும்