முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.036.திருஇரும்பூளை
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.036.திருஇரும்பூளை

2.036.திருஇரும்பூளை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - காசியாரண்ணியேசுவரர்.
தேவியார் - ஏலவார்குழலம்மை.
1852 | சீரார்
கழலே தொழுவீ ரிதுசெப்பீர் வாரார் முலைமங் கையொடும் முடனாகி ஏராரி ரும்பூ ளையிடங் கொண்டவீசன் காரார் கடனஞ் சமுதுண் டகருத்தே. |
2.036.1 |
சீர் பொருந்திய இறைவன் திருவடிகளையே பணியும் அடியவர்களே! கச்சணிந்த தனங்களைக் கொண்ட உமையம்மையோடும் உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் கரிய கடலில் எழுந்த நஞ்சினை அமுதாக உண்டதற்குக் காரணம் யாதோ? இதனைச் சொல்வீராக.
1853 | தொழலார்
கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர் குழலார் மொழிக்கோல் வளையோடு டனாகி எழிலா ரிரும்பூ ளைஇடங் கொண்டவீசன் கழல்தான் கரிகா னிடையா டுகருத்தே. |
2.036.2 |
வணங்குதற்குரிய திருவடிகளையே தொழும் தொண்டர்களே! வேய்ங்குழல் போன்ற இனிய மொழியையும் திரண்ட வளையல்களையும் உடைய அம்மையோடு உடனாய் அழகிய இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தன் திருவடிகளால் கரிந்த சுடுகாட்டில் ஆடுதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1854 | அன்பா
லடிகை தொழுவீ ரறியீரே மின்போன் மருங்குன் மடவா ளொடுமேவி இன்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் பொன்போற் சடையிற் புனல்வைத்த பொருளே. 3 |
2.036.d |
அன்பால் இறைவன் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர்களே! மின்னல் போன்ற இடையினை உடைய உமைமடவாளோடு கூடி மகிழ்வாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுறையும் ஈசன் பொன் போன்ற தன் சடைமீது கங்கையை வைத்துள்ளதன் கருத்து யாது? அறிவீர்களோ!
1855 | நச்சித்
தொழுவீர் கணமக் கிதுசொல்லீர் கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடி இச்சித் திரும்பூ ளையிடங் கொண்டவீசன் உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே. |
2.036. 4 |
சிவபிரானை விரும்பித்தொழும் அடியவர்களே! காஞ்சி மாநகரில் கோயில் கொண்டு விளங்கும் காமாட்சியாகிய வல்லிக்கொடியுடன் கூடி இச்சை கொண்டு இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் தலையோட்டில் பலியேற்று உணவின் பொருட்டு உழலக் காரணம் யாதோ? நமக்குக் கூறுவீராக.
1856 | சுற்றார்ந்
தடியே தொழுவீ ரிதுசொல்லீர் நற்றாழ் குழனங் கையொடும் முடனாகி எற்றே யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் புற்றா டரவோ டென்புபூண் டபொருளே. |
2.036. 5 |
சூழ்ந்தும், நிறைந்தும், சிவபிரான் திருவடிகளையே தொழும் அன்பர்களே! அழகியதாய்த் தொங்குகின்ற கூந்தலை உடைய உமையம்மையோடும் உடனாய் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன் புற்றில் வாழும் ஆடுகின்ற பாம்பையும் எலும்பையும் அணிகலனாகப் பூண்டுள்ளதன் காரணம் யாதோ? சொல்வீராக.
1857 | தோடார்
மலர்தூய்த் தொழுதொண் டர்கள்சொல்லீர் சேடார் குழற்சே யிழையோ டுடனாகி ஈடாய் இரும்பூ ளையிடங் கொண்டவீசன் காடார் கடுவே டுவனா னகருத்தே. |
2.036. 6 |
இதழ் நிறைந்த மலர்களைத் தூவித்தொழும் தொண்டர்களே! திரண்ட கூந்தலையும் செவ்விய அணிகலன்களையும் கொண்டுள்ள அம்மையோடும் உடனாய், பெருமையோடு இரும்பூளையில் உறையும் ஈசன் காட்டில் வாழும் கடுமையான வேடனாய் வந்தது ஏனோ? சொல்வீராக.
1858 | ஒருக்கும்
மனத்தன் பருள்ளீ ரிதுசொல்லீர் பருக்கை மதவே ழமுரித் துமையோடும் இருக்கை இரும்பூ ளையிடங் கொண்டவீசன் அரக்கன் னுரந்தீர்த் தருளாக் கியவாறே. |
2.036. 8 |
ஒருமைப்பாடு கொண்ட மனத்தினராகிய அன்பர் கூட்டத்தைச் சார்ந்த அடியவர்களே! நீண்ட கையையும் மதத்தையும் உடைய யானையை உரித்து உமையம்மையோடு இரும்பூளையை இடமாகக் கொண்ட ஈசன் இராவணனின் வலிமையை அழித்துப் பின் அருள் செய்தது ஏனோ? சொல்வீராக.
1859 | துயரா
யினநீங் கித்தொழுந் தொண்டர்சொல்லீர் கயலார் கருங்கண் ணியொடும் முடனாகி இயல்பா யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே. |
2.036. 9 |
துன்பம் நீங்கித் தொழும் தொண்டர்களே! கயல் போன்ற கரிய கண்ணினளாகிய அம்மையோடும் உடனாய் இயல்பான இடமாக இரும்பூளையைக் கொண்டுறையும் ஈசன் காணமுயன்ற திருமால், பிரமர்க்கு அரியனாய் எரியுருவில் நின்ற ஆற்றல் எத்தகையதோ? சொல்வீராக.
1860 | துணைநன்
மலர்தூய்த் தொழுந்தொண் டர்கள்சொல்லீர் பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகி இணையில் லிரும்பூ ளையிடங் கொண்டவீசன் அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே. |
2.036.10 |
திருவடிக்கு ஒப்புடைய மலர்களைத்தூவித் தொழும் தொண்டர்களே! பருத்த தனபாரங்களைக் கொண்டுள்ள பார்வதி தேவியோடு உடனாய் இணையற்ற தலமான இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசன், அணைந்து வழிபடுதல் இல்லாத சமணபௌத்த மதங்களைப் படைத்தது ஏனோ? கூறுவீராக.
1861 | எந்தை
யிரும்பூ ளையிடங் கொண்டவீசன் சந்தம் பயில்சண் பையுண்ஞா னசம்பந்தன் செந்தண் டமிழ்செப் பியபத் திவைவல்லார் பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே. |
2.036. 11 |
எம் தந்தையும் இரும்பூளையை இடமாகக் கொண்டுள்ள ஈசனும் ஆகிய பெருமானை வதங்களை உணர்ந்த சண்பைப் பதிக்குரிய ஞானசம்பந்தன் செவ்விய தண்டமிழால் செப்பிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர் மலபந்தம் நீங்கி உயர்ந்த தன்மையைப் பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஇரும்பூளை - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கொண்டவீசன், ளையிடங், இரும்பூளையை, இடமாகக், கொண்டுள்ள, உடனாய், சொல்வீராக, தொழும், யிரும்பூ, காரணம், தொண்டர்களே, அடியவர்களே, டர்கள்சொல்லீர், முடனாகி, கொண்டுறையும், தொழுவீ, திருவடிகளையே, ரிதுசொல்லீர், வாழும், டுடனாகி, மலர்தூய்த், இரும்பூ, கியவாறே, அம்மையோடும், செவ்விய, கூறுவீராக, திரண்ட, திருஇரும்பூளை, திருச்சிற்றம்பலம், கையொடும், தொழுதொண், இறைவன், திருமுறை, உமையம்மையோடும், கொண்டு