தியாக பூமி - 4.19. ஸ்ரீதரன் சபதம்
வக்கீல் ஆபத்சகாயமய்யருக்கு உண்மையாகவே உமாவின் மீது சகோதர விசுவாசம் ஏற்பட்டிருந்தது. அவளுடைய வாழ்க்கையில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று அவர் ஊகித்திருந்தார். ரொம்பவும் கஷ்டப்பட்டவளாயிருக்க வேண்டும்; பிறகு திடீரென்று நல்ல காலம் பிறந்து பணக்காரியாகியிருக்க வேண்டும் என்றும் நினைத்தார். இந்தச் செல்வம் அவளுக்கு எப்படிக் கிடைத்தது என்பதைப் பற்றி அவருக்குச் சந்தேகங்கள் தோன்றியதுண்டு. ஏதாவது 'அவ்யாகிருதமான' வழியில் எண்ணமிட்டார். ஆனாலும் அவளுடைய உத்தமமான குணத்தை உத்தேசித்து அவளிடம் எந்த விதமான குற்றம் குறையிருந்தாலும் மன்னித்து விடத்தயாராயிருந்தார்.
இந்த மாதிரி ஒரு ஸ்திரீ, உற்றார் உறவினர் யாருமில்லாதவள், பணக்காரி என்பதைத் தவிர மற்றபடி நிராதரவான நிலைமையில் இருப்பவள் - அவளுக்கு ஒத்தாசை செய்யும் படியான சந்தர்ப்பம் தமக்கு ஏற்பட்டது பற்றி ஆபத்சகாயமய்யருக்கு ரொம்பவும் பெருமையாயிருந்தது. கோர்ட்டிலும் அட்வகேட் சங்கத்திலும் அவருடைய நண்பர்கள் சாதாரணமாக அவர 'மிஸ்டர் ஆபத்!' என்று கூப்பிட்டுப் பரிகாசம் செய்வது வழக்கம். அவரிடம் அகப்பட்டுக் கொள்ளும் 'கட்சிக்காரர்களுக்கெல்லாம் ஆபத்துத்தான்' என்றும் அவர்கள் சொல்வார்கள். ஆனால் ஸ்ரீமதி உமாராணியின் விஷயத்தில் தம்முடைய பெயரின் பின்பகுதியை உண்மையாக்கிக் கொள்ள வேண்டுமென்று ஆபத்சகாயமய்யர் தீர்மானித்திருந்தார்.
ஆகவே, இப்போது உமாராணி தம்மிடம் பெரிதும் நம்பிக்கை வைத்து ஒரு முக்கியமான வேலையைக் கொடுக்கவே அதில் தீவிரமாக ஈடுபட்டார். அவருடைய முயற்சி கடைசியில் பயன் அளித்தது. ஸ்ரீதரன் கையாண்டதாகச் சந்தேகிக்கப்பட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு கே அண்டு ஓ பாங்கிக்காரர்கள் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளச் சம்மதித்தார்கள். சமீபத்தில் நடந்த ஒரு பாங்கி மோசடி வழக்கில் ஏராளமான பணச் செலவுக்குப் பின்னர் குற்றம் ருசுவாகாமல் கைதி விடுதலையடைந்திருந்தபடியால், பாங்கிக்காரர்கள் இதற்கு எளிதில் இணங்கினர். போலீஸ் இலாகாவினர் முதலில் இதை ஆட்சேபித்த போதிலும், கடைசியில் குற்றம் ருசுவாவது கஷ்டம் என்று கண்டு அவர்களும் சம்மதித்து விட்டார்கள். எனவே, ஸ்ரீதரனுடைய குற்றம் மோசடி இல்லையென்றும், கவனக் குறைவுதான் என்றும் தீர்மானிக்கப்பட்டு, ஸ்ரீதரன் சில தினங்களில் விடுதலையடைந்தான்.
சிறையில் ரிமாண்டு கைதியாக இருந்த ஸ்ரீதரனை வக்கீல் ஆபத்சகாயமய்யர் பார்த்துப் பேசியபோது, உமா கூறிய நிபந்தனைகளை அவனிடம் தெரிவித்தார். ஸ்ரீதரனும் அவற்றுக்கு உடனே இணங்கினான். ஆனால் நிபந்தனைகளை நிறைவேற்றும் உத்தேசம் அவனுக்குக் கிடையவே கிடையாது. பணங்கொடுப்பது யார் என்று கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாகவே அவன் நினைக்கவில்லை. சாவித்திரிதான் தன்னை விடுதலை செய்ய முயற்சி எடுக்கிறாள் என்பதைப் பற்றி அவனுக்குச் சந்தேகமே இல்லை. வேறு யார் தன்னிடம் இவ்வளவு அக்கறை காட்டிக் கேஸிலிருந்து தப்புவிக்க முயற்சி எடுக்கப் போகிறார்கள்?
ஆனால் விடுதலையானதும் சென்னையை விட்டுப் போக வேண்டும் என்ற நிபந்தனை அவன் மனத்தைப் புண்படுத்திக் கோபமூட்டியது. இதற்கு முக்கிய காரணம், சாவித்திரியை அன்று பார்த்ததிலிருந்து அவள் பேரில் அவனுக்கு ஏற்பட்டிருந்த பாசமேயாகும். ஏற்கெனவே, சாவித்திரியின் விஷயத்தில் தான் நடந்து கொண்ட விதத்தைக் குறித்து அவன் பல தடவைகளில் பச்சாத்தாபப் பட்டிருக்கிறான். அவளைப் பூரண கர்ப்பவதியாயிருக்கையில் வழிப்போக்கர்களுடன் கூட்டி அனுப்பி, அப்புறம் தகவல் ஒன்றுமே தெரியாமல் போன பிறகு, தாயார் தகப்பனார்களுடன் அவன் அதைக் குறித்துச் சில சமயம் சண்டை பிடித்ததும் உண்டு. கொஞ்ச நாளைக்குப் பிறகு, ராஜாராமய்யர் மனநோயும் உடல் நோயும் அதிகமாகிக் காலஞ் சென்றார். பிறகு, தாயாருக்கும் பிள்ளைக்கும் ஒத்துக் கொள்ளவேயில்லை. தங்கம்மாள் பிள்ளையைச் சீர்திருத்த எவ்வளவோ முயற்சி செய்தும் பயனில்லாமல் கடைசியில் மனம் வெறுத்து ஹைதராபாத்தில் இருந்த தன் பெண்ணுடன் வசிக்கப் போய்விட்டாள். அம்மாவுடன் ஸ்ரீதரன் சண்டை போட்ட போதெல்லாம், "படுபாவி! ஒன்றுந் தெரியாத சாதுப் பெண்ணை அநியாயமாய்க் கொன்றுவிட்டாயே?" என்று திட்டுவது வழக்கம். இம்மாதிரி, சாவித்திரியைப் பிரிந்த பிறகு அவள் விஷயத்தில் அவனுடைய மனம் மாறியதோடு கூட, "ஐயோ! இந்த மாதிரி செய்துவிட்டோ மே!" என்று அடிக்கடி வருத்தப்பட்டதும் உண்டு. மறுபடியும் ஒரு தடவை சாவித்திரி தன்னைத் தேடி வந்தாளானால் முன்னால் செய்ததற்கெல்லாம் பிராயச்சித்தமாக அவளை ரொம்ப நன்றாக நடத்தவேண்டுமென்று அவன் தீர்மானித்திருந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.19. ஸ்ரீதரன் சபதம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - முயற்சி, குற்றம், ஸ்ரீதரன், கடைசியில், என்றும், வேண்டும், விஷயத்தில், ஆபத்சகாயமய்யர், நிபந்தனைகளை, இதற்கு, பாங்கிக்காரர்கள், இருந்த, மாதிரி, அவளுடைய, ஆபத்சகாயமய்யருக்கு, வக்கீல், ரொம்பவும், அவளுக்கு, அவருடைய, என்பதைப், வழக்கம்