தியாக பூமி - 4.17. 'அவள் என் மனைவி'
வக்கீல் ஆபத்சகாயமய்யர் உமாராணியின் பங்களாவை அடைந்ததும், உமாராணி அவருக்கு விஷயத்தைச் சொல்லி யோசனை கேட்டாள். "உடனே போய்ப் போலீஸிலே எழுதி வைப்பதுதான் சரி" என்று ஆபத்சகாயமய்யர் சொன்னதும் இருவரும் போலீஸ் டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குச் சென்றார்கள்.
உமாராணியைப் பற்றித் தெரியாதவர்கள் சென்னையில் இல்லையாதலால், டிபுடி கமிஷ்னருக்கும் உமாராணியைத் தெரிந்திருந்தது. எனவே, அவர்களை அவர் மரியாதையுடன் வரவேற்று உட்காரவைத்து, அவர்கள் வந்த காரியம் என்னவென்று விசாரித்தார். வக்கீல் விவரங்களைச் சொன்னார். கடைசியாக, உமாராணி கமிஷ்னரைப் பார்த்து, "தாத்தாவும் பேத்தியுமாகத்தான் எங்கேயோ போயிருக்கிறார்கள். எப்படியாவது அவர்களைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். அதற்காக என்ன செலவானாலும் நான் ஒத்துக் கொள்கிறேன். இந்த ஒத்தாசை எனக்காகச் செய்யவேணும்" என்று வேண்டிக் கொண்டாள். அதற்கு டிபுடி கமிஷ்னர், "உங்களுக்கு ஒத்தாசை செய்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம், அம்மா! ஆனால் இந்த விஷயத்திலே எனக்கு ஒன்றும் அதிகாரமில்லையேயென்றுதான் பார்க்கிறேன். நீங்கள் சொல்கிற சம்பு சாஸ்திரி குற்றம் ஒன்றும் செய்து விடவில்லை. அவர் வளர்த்த குழந்தையைத் தான் அவர் அழைச்சிண்டு போயிருக்கிறார். நகை, கிகை ஒன்று கூட எடுத்துக் கொண்டு போகவில்லை. அப்படியிருக்கிறபோது 'அரெஸ்ட்' பண்ணியோ வேறு விதத்திலோ அவர்களைக் கொண்டு வருவதற்குச் சட்டம் இடங்கொடுக்காதே!" என்றார்.
"அரெஸ்ட்" என்று சொன்னதும் உமாவுக்குப் பகீர் என்றது.
"நீங்கள் அப்படியெல்லாம் அரெஸ்ட் கிரஸ்ட் ஒன்றும் பண்ண வேண்டாம். அந்தக் குழந்தை சௌக்கியமாயிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சால் போதும். அவா இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சுச் சொல்லுங்கோ! அதற்குமேலே அவாளை அழைச்சுண்டு வர்றதற்கு நானே ஏற்பாடு பண்ணிக்கிறேன்" என்றாள்.
டிபுடி கமிஷ்னர், "ஆகட்டும், அம்மா! நீங்க மட்டும் 'பார்மல் பெடிஷன்' ஒன்று எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டுப் போங்கோ" என்றார்.
உமா, வக்கீலை விண்ணப்பம் எழுதும்படி கேட்டுக் கொண்டாள். வக்கீல் விண்ணப்பம் எழுத ஆரம்பித்ததும், டிபுடி கமிஷ்னர், "இந்தக் காலத்திலேயே நல்லது ஆகிறதில்லை, பாருங்கள். ஏதோ ஓர் அநாதைக் குழந்தையை எடுத்து வளர்க்கலாம் என்று நீங்கள் நினைக்கப் போக, இந்த மாதிரி தொல்லை நேர்ந்தது" என்றார். அதற்கு உமா பதில் சொல்வதற்குள் டெலிபோனில் மணி அடித்தது.
டிபுடி கமிஷ்னர் டெலிபோனில் பின் வருமாறு பேசினார்: "ஹலோ - எஸ்! - பாங்கி போர்ஜரி கேஸா? - கல்கத்தாக்காரனா? - ஐஸீ! - சென்ட்ரல் ஸ்டேஷன்லேயா 'அரெஸ்ட்' ஆச்சு? - பேரென்ன? ஸ்ரீ...? ஓஹோ! - ஸ்ரீதரன்..."
இதுவரையில் மேற்படி பேச்சை அசட்டையாக கவனித்துக் கொண்டிருந்த உமாராணி, "ஸ்ரீதரன்!" என்று அழுத்தந்திருத்தமாய் டிபுடி கமிஷ்னர் சொன்னதும், திடுக்கிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
டிபுடி கமிஷ்னர், மேஜை மீதிருந்த நோட் புத்தகத்தில் ஏதோ குறித்துக் கொண்டு, மறுபடியும் டெலிபோனில், "ஆல் ரைட்! - இங்கே அனுப்பு - ரிமாண்டுக்கு ஆர்டர் பண்றேன்!-" என்று சொல்லிவிட்டு, டெலிபோன் ரிஸீவரைக் கீழே வைத்தார். வக்கீலைப் பார்த்து, "பெடிஷன் எழுதியாச்சா?" என்று கேட்டார்.
உமாவின் உள்ளமோ அளவிலாத குழப்பத்தை அடைந்திருந்தது. அவளால் தெளிவாகச் சிந்தனை செய்ய முடியவில்லை. 'ஸ்ரீதரன்...பாங்கி போர்ஜரி - அரெஸ்ட்; ஸ்ரீதரன் - பாங்கி போர்ஜரி - அரெஸ்ட்; ஸ்ரீதரன் - பாங்கி போர்ஜரி - அரெஸ்ட்...' - இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அவள் மனத்தில் சுழன்று கொண்டிருந்தன. இந்தக் குழப்பத்துக்கு மத்தியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் அவள் மனத்தில் தெளிவாகத் தோன்றியது. தான் உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விடவேண்டும். அவரை இங்கே கொண்டு வரப் போகிறார்கள்! அப்போது தான் இங்கே இருக்கக்கூடாது! - இப்படி அவள் மனம் பரபரப்பு அடைந்திருக்கையில், வக்கீல் ஆபத்சகாயமய்யர் தாம் எழுதிய விண்ணப்பத்தை அவளிடம் கொடுத்தார். கையெழுத்துப் போடப் போகையில் உமாவின் கை நடுங்கிற்று. மெதுவாகச் சமாளித்துக்கொண்டு கையெழுத்துப் போட்டாள். அதை டிபுடி கமிஷ்னரிடம் கொடுக்கக்கூட அவளுக்குத் துணிவு இல்லை. அப்படியே மேஜை மீது வைத்துவிட்டு எழுந்திருந்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.17. 'அவள் என் மனைவி' - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - டிபுடி, அரெஸ்ட், கமிஷ்னர், ஸ்ரீதரன், கொண்டு, பாங்கி, வக்கீல், போர்ஜரி, நீங்கள், கையெழுத்துப், டெலிபோனில், என்றார், ஒன்றும், சொன்னதும், உமாராணி, ஆபத்சகாயமய்யர், பார்த்து, மனத்தில், உமாவின், இந்தக், விண்ணப்பம், கொண்டாள், அதற்கு, ஒத்தாசை, மட்டும், அவர்களைக், பெடிஷன், எனக்கு