தியாக பூமி - 4.1. சாருவின் பிரார்த்தனை
"செந்தா மரை விரியத் தேமாங் கொழுந்தொழுக
மைந்தா ரசோகம் மடலவிழ...."
"மன்னுயிரெல்லா மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில்." - இளங்கோவடிகள்
கீழ் வானம் வெளுத்தது. காலைப் பிறை, ஒளி இழந்து மங்கிற்று. அதனருகில் தோன்றிய சுக்கிரன் 'இதோ மறையப் போகிறேன்' என்று கண் சிமிட்டிச் சமிக்ஞை செய்தது.
கோழி கூவிற்று; குருவி சிலும்பிற்று; காகம் கரைந்தது. சிறிது நேரத்திற்கெல்லாம் நானாவிதமான பட்சி ஜாலங்கள் பற்பல ஸ்வரங்களில் பாடத் தொடங்கின.
விருட்சங்களிலும் செடிகளிலும் இருந்த பூ மொக்குகள், பட்சிகளின் இனிய கானத்தைக் கேட்டு ஆனந்தத்தினால் சிலிர்த்தன.
அந்தக் குளிர்ந்த அதிகாலை நேரத்தில் வீசிய இனிய இளந்தென்றல் சற்று விரிந்த பூ இதழ்களின் மீது தவழ்ந்து சென்று நாலு பக்கமும் நறுமணத்தைப் பரப்பிற்று.
பட்சிகளின் கீதத்துக்குச் சுருதி போடுவதுபோல் தூரத்தில் கடலின் 'ஹோ' என்ற ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
சம்பு சாஸ்திரி படுக்கையில் எழுந்து உட்கார்ந்து மனோகரமான பூபாள ராகத்தில், "கௌஸ்ல்யா ஸுப்ரஜா ராமா" என்ற ராமாயண சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தார்.
"தாத்தா! தாத்தா!" என்றாள் சாரு.
"முழிச்சுண்டயா, அம்மா! எங்கே, எழுந்து உட்காரு" என்றார் சம்பு சாஸ்திரி.
"நான் முழிச்சுக்கலை; இன்னும் தூங்கிண்டு தான் இருக்கேன்" என்றாள் சாரு.
"அப்படின்னா, தூங்கினபடியே, நேத்திக்கு ஸரஸ்வதி ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுத்தேனே, அதைச் சொல்லு, பார்க்கலாம்" என்றார் சாஸ்திரி.
சாரு, உடனே எழுந்து உட்கார்ந்தாள். "எங்கே, சொல்லிக் கொடு தாத்தா, சொல்றேன்" என்றாள்.
சாஸ்திரிகள், "ஜய ஜய தேவி தயாலஹரி" என்ற கீதத்தை ஆரம்பித்துச் சொல்லிக் கொடுத்தார். சாருவும் சொல்லிக் கொண்டு வந்தாள். ஆனால், பாதிப் பாட்டில் திடீரென்று அவள் நிறுத்திவிட்டு, "தாத்தா! தாத்தா! கொஞ்சம் இரு, தாத்தா வர்றேன்!" என்று கூறிவிட்டு, வாசலில் ஓடினாள்.
ஒரு நிமிஷத்துக்கெல்லாம், "தாத்தா! இங்கே வாயேன், சீக்கிரம் வாயேன்" என்று சாரு வாசலிலிருந்து கூவுவதைக் கேட்டு, சாஸ்திரிகள் குடிசைக்கு வெளியே வந்தார்.
"பார்த்தாயா, தாத்தா! நம்மாத்துச் செடியிலே ரோஜாப்பூ பூத்திருக்கு. நேத்தி சாயங்காலம் மொட்டாயிருந்தது. இப்பப் பூவாய்ப் போயிடுத்து, தாத்தா!" என்று கூச்சலிட்டாள்.
சம்பு சாஸ்திரி, வைகறையின் மங்கிய வெளிச்சத்தில், அந்த மலர்ந்த ரோஜாவையும், சாருவின் மலர்ந்த முகத்தையும் மாறி மாறிப் பார்த்துச் சந்தோஷப்பட்டார்.
சாரு, பூவைத் தொடுவதற்குப் போனாள். கையை சுருக்கென்று முள் குத்தவே, "அப்பப்பா!" என்று கையை உதறினாள்.
"தாத்தா! நேத்திக்கு எங்க டீச்சர் கூடச் சொன்னா, ரோஜாப் பூவிலே முள் இருக்காப்பலே, சுகத்திலேயும் கஷ்டம் இருக்கும்னு. ஸ்வாமி என்னத்துக்காக, தாத்தா, இவ்வளவு அழகான பூச்செடியிலே கொண்டு போய் முள்ளை வைச்சிருக்கார்?" என்று கேட்டாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.1. சாருவின் பிரார்த்தனை - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - தாத்தா, சொல்லிக், சாஸ்திரி, எழுந்து, என்றாள், கொண்டு, வாயேன், மலர்ந்த, சாஸ்திரிகள், நேத்திக்கு, சாருவின், பட்சிகளின், என்றார், கேட்டு