தியாக பூமி - 4.18. உமாராணியின் பழி
உமாராணி அன்றெல்லாம் ஒரே மனக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தாள். குழந்தையையும் தந்தையையும் பிரிந்த துன்பம் இப்போது அவ்வளவு பெரியதாயில்லை. அவர்களுடைய நினைவையே மறக்கச் செய்யக்கூடியதான சம்பவம் வேறொன்று நேர்ந்துவிட்டது.
விதியின் விசித்திரத்தை நினைக்க நினைக்க அவளுக்கு வியப்பாயிருந்தது. குழந்தையைக் கண்டுபிடிக்கச் சொல்வதற்காக டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குப் போன இடத்தில், இந்தச் சந்திப்பு ஏற்பட்டது. குழந்தையும் தாத்தாவும் இராத்திரி இப்படித் தன்னை ஏமாற்றிவிட்டுப் போகாதிருந்தால், தான் டிபுடி கமிஷ்னர் ஆபீஸுக்குப் போக நேர்ந்திராது. அவரைச் சந்திக்கவும் நேர்ந்திராது.
ஒரு வேளை பகவானுடைய செயல் இதில் ஏதேனும் இருக்குமோ?
பைத்தியந்தான்! பகவானாவது மண்ணாங்கட்டியாவது? உலகில் தற்செயலாக இந்த மாதிரி சம்பவங்கள் எத்தனையோ நிகழ்கின்றன. தன்னுடைய வாழ்க்கையிலேயே நடந்திருக்கிறது. அதற்கெல்லாம் சுவாமி பேரில் பாரத்தைப் போடுவதில் என்ன பிரயோஜனம்? அப்பாவாயிருந்தால், 'எல்லாம் பராசக்தி செயல்' என்று சொல்லிக் கொண்டிருப்பார். மனுஷ்யர்களுடைய காரியங்களையெல்லாம் பராசக்தி நடத்துவதாயிருந்தால், உலகம் இவ்வளவு கேவலமாயிருக்குமா? இவ்வளவு அநியாயங்களும் கொடுமைகளும் நடக்குமா? தானும் குழந்தையுமாகச் சாகப் போகும் சமயத்தில் அப்பாவின் குரல் கேட்டது தன்னுடைய வாழ்க்கையில் ஓர் ஆச்சரியமான விஷயம்! அப்பாவிடம் சொன்னால், அது பகவானுடைய செயல் என்றுதான் சொல்வார். அது பகவானுடைய செயலாயிருந்தால், கல்கத்தாவில் தான் பட்ட கஷ்டங்களும் பகவானுடைய செயல் தானே? சென்னையின் வீதிகளில் தான் அலைந்து திரிந்ததும் பராசக்தியின் செயல்தானே?
அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்பாவினுடைய வீண் பிரமை. வாழ்க்கையில் மனுஷ்யர்களுடைய முயற்சியினால் சில காரியங்கள் நடக்கின்றன; தற்செயலாகச் சில காரியங்கள் நடக்கின்றன. அந்த மாதிரி தற்செயலாக நடந்திருக்கும் சம்பவம் இது. தன்னுடைய வாழ்க்கையிலேயே இதற்கு முன் நடந்திருப்பதையெல்லாம் நினைக்கும் போது இது ஒரு பிரமாத அதிசயங்கூட இல்லை.
சரி; ஆனால் தான் இப்போது செய்ய வேண்டியது என்ன? எக்கேடாவது கெட்டுப் போகட்டுமென்று சும்மா இருந்துவிடலாமா?
விலங்கு பூட்டிய கையுடன் கூடிய ஸ்ரீதரனுடைய தோற்றம் அடிக்கடி உமாவின் மனக் கண்ணின் முன்னால் வந்து நின்றது. அதை நினைக்கும் போதெல்லாம் ஒரு பக்கம் அவள் மனத்தில் அளவிலாத வேதனை உண்டாயிற்று; மற்றொரு பக்கத்தில் திருப்தியும் ஏற்பட்டது. தன்னை எவ்வளவோ கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாக்கிய மனுஷர் இப்போது சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். வேண்டும், நன்றாய் வேண்டும்!
அதே சமயத்தில் தான் அவருக்கு உதவி செய்யக் கூடிய நிலைமையில் இருப்பதை நினைத்து உமா கர்வமும் குதூகலமும் கொண்டாள். அது தான் சரி! இந்த ஆபத்துச் சமயத்தில் அவருக்கு உதவி செய்து பழிவாங்க வேண்டும்; அப்படித்தான் புத்தி கற்பிக்க வேண்டும். தன் முகத்தைப் பார்த்துப் பேசுவதற்குக் கூட தைரியம் வராதபடி அடிக்க வேண்டும். ஆம்; எப்படியாவது அவரைக் கேஸிலிருந்து தப்பித்து விடுதலை பண்ண வேண்டும். விடுதலையான பிறகு நன்றி செலுத்த வருவாரல்லவா? "உமது நன்றி எனக்கு வேண்டாம்! போய்வாரும்! உமது முகத்தில் விழிக்கக்கூட எனக்கு இஷ்டமில்லை" என்று சொல்ல வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.18. உமாராணியின் பழி - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வேண்டும், பகவானுடைய, இப்போது, சமயத்தில், தன்னுடைய, காரியங்கள், வாழ்க்கையில், நினைக்க, நடக்கின்றன, நினைக்கும், எனக்கு, அவருக்கு, சம்பவம், இவ்வளவு, மனுஷ்யர்களுடைய, கமிஷ்னர், நேர்ந்திராது, ஏற்பட்டது, தற்செயலாக, மாதிரி, பராசக்தி, வாழ்க்கையிலேயே, டிபுடி, ஆபீஸுக்குப்