தியாக பூமி - 4.31. தியாகம்
அந்தப் புகழ்பெற்ற வருஷத்தில் பாரத புண்ணிய பூமியில் நிகழ்ந்து வந்த அதிசயங்களைப்பற்றி முன் ஓர் அத்தியாயத்தில் கூறினோமல்லவா? அந்த அதிசயங்களில் எல்லாம் மகா அதிசயம், பாரத நாட்டின் நாரீமணிகள் அந்த வருஷத்தில் கண் விழித்தெழுந்த அற்புதமேயாகும். அதற்கு முன்னாலும் தேசத்தில், "ஸ்திரீகளுக்குச் சுதந்திரம் வேண்டும்", "பெண்களுக்கு ஆண்களுடன் சம உரிமை வேண்டும்" என்ற கிளர்ச்சி ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருந்தது. ஆனால், அந்த வருஷத்தில் அந்த மாதர் உரிமைக் கிளர்ச்சி ஒரு புதிய ஸ்வரூபம் பெற்றது. அதற்கு அந்தப் புதிய ஸ்வரூபத்தைக் கொடுத்தவர் காந்தி மகான் தான் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா?
அதுகாறும், பாரதத் தாயின் புதல்விகளுக்கு வழிகாட்ட முன் வந்தவர்கள், "உங்கள் சுதந்திரத்துக்காகப் போராடுங்கள்", "ஆண்களுடன் சம உரிமைக்காகச் சண்டை பிடியுங்கள்" என்றெல்லாம் உபதேசித்து வந்தார்கள். இந்த உபதேசங்களைக் கேட்ட பாரதப் புதல்விகள் சிலர்,
"கற்புநெறி யென்று சொல்ல
வந்தார் - இரு
கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"
என்றும்,கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்"
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள்
செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
என்றும் சொல்லிப் பெண்ணுரிமைக்காகப் போராடத் தொடங்கியிருந்தார்கள்.பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி"
இத்தகைய மனப்பான்மை பரவிக் கொண்டிருந்த காலத்தில் மகாத்மா காந்தி தோன்றி, தேசத்துக்கு எல்லாத் துறைகளிலும் புதிய வழி காட்டினார். "உங்கள் சுதந்திரம் அப்புறம் இருக்கட்டும்; நாடு சுதந்திரம் அடையும் வழியை முதலில் பாருங்கள்" என்று அவர் சொன்னார். "தேச சேவையில் ஈடுபடுங்கள்; சிறையில் சுதந்திரத்தைக் காணுங்கள். விலங்கில் விடுதலையை அடையுங்கள்" என்று அவர் உபதேசித்தார். "தாயின் அடிமைத்தனத்தை நீக்குங்கள்; உங்கள் அடிமைத்தனம் தானே விலகிப் போகும்" என்று அவர் உறுதி கூறினார்.
காந்தி மகானுடைய போதனைக்குப் பாரத நாட்டின் பெண்குலம் செவி சாய்த்தது. தேசமெங்கும் ஆயிரக்கணக்கான ஸ்திரீகள் தாய்நாட்டின் தொண்டில் ஈடுபட்டார்கள்; அவர்களில் பலர் சுதந்திர இயக்கத்தின் முன்னணியில் நின்றார்கள்; சிறை புகுந்தார்கள்; இன்னும் பல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்தார்கள்.
இதனால், சாதாரணமாய் நூறு வருஷத்தில் நடக்கக் கூடிய பெண்குலத்தின் முன்னேற்றம் இந்த ஒரே வருஷத்தில் ஏற்பட்டது. வேறு நாடுகளில் எத்தனையோ காலம் ஸ்திரீகள் ஆண் மக்களுடன் போராடி, சண்டை பிடித்துப் பெற்ற உரிமைகளையெல்லாம் பாரதப் பெண்கள் அநாயாசமாகப் பெற்றுவிட்டார்கள். ஆண்களுடன் சரி நிகர் சமானமாக நின்று தேச விடுதலைப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு சமூகத்தில் சம உரிமை கொடுக்க எவ்விதம் மறுக்க முடியும்?
கோர்ட்டில் உமாராணி - ஸ்ரீதரன் வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்தில், பொது ஜனங்களுடைய அநுதாபமெல்லாம் உமாராணியின் பக்கம் இருந்ததற்கு முக்கிய காரணம் மேற்கூறிய தேச நிலைமையேயாகும். இது உமாராணிக்கும் தெரியாமலில்லை. நாட்டில் நடந்து கொண்டிருந்த தேச விடுதலை இயக்கத்தைப் பற்றியும், அந்த இயக்கத்தின் முன்னணியில் நின்று சிறை புகுந்த வீரப் பெண்மணிகளைப் பற்றியும் உமாராணி அறிந்து தான் இருந்தாள். வழக்கில் தோற்றுப் போனால் என்ன செய்வது என்று அவளுடைய இருதய அந்தரங்கத்தில் தீர்மானம் செய்திருந்தாள்.
வேண்டாத புருஷனுடன் சேர்ந்து வாழும்படி சட்டம் நிர்ப்பந்தப்படுத்தலாம்; கோர்ட்டும் அவ்வாறே தீர்ப்பளிக்கலாம். ஆனால், அந்தச் சட்டத்தையும் தீர்ப்பையும் அமுலுக்குக் கொண்டு வர முடியுமா? அது முடியாமல் செய்யும் வழி தனக்குத் தெரியும்! தேச சேவிகையர் படையில் சேர்ந்து சிறை புகுந்துவிட்டால், சிறைக்குள்ளே வந்து தன்னைச் சட்டம் கட்டாயப்படுத்தாதல்லவா? "சிறைக்குள் சுதந்திரத்தைக் காணுங்கள்" என்று மகாத்மா காந்தி சொன்னது மற்றையோர் விஷயத்தில் உண்மையோ, என்னமோ, தன் விஷயத்தில் அது முற்றும் உண்மையாயிருக்கும் என்று அவள் உறுதி கொண்டாள். சட்டத்துக்கும் தீர்ப்புக்கும் கட்டுப்பட்டு, ஸ்ரீதரனுடன் கூடிவாழ்ந்தால் அதுதான் அடிமை வாழ்வு; அதுதான் கொடிய சிறை வாழ்க்கை. இதற்கு மாறாக, தாய் நாட்டின் சுதந்திரத்துக்காகச் சிறை புகுந்தால், அந்தச் சிறை வாழ்க்கையே உண்மையான சுதந்திர வாழ்க்கையாகும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 26 | 27 | 28 | 29 | 30 | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.31. தியாகம் - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வருஷத்தில், காந்தி, நடந்து, உங்கள், ஆண்களுடன், கொண்டிருந்த, சுதந்திரம், நாட்டின், நின்று, உமாராணி, முன்னணியில், இயக்கத்தின், சுதந்திர, பற்றியும், சேர்ந்து, விஷயத்தில், அந்தச், சட்டம், ஸ்திரீகள், அதுதான், சுதந்திரத்தைக், தாயின், பாரதப், அதற்கு, கொண்டு, கிளர்ச்சி, என்றும், பெண்கள், வேண்டும், மகாத்மா, காலத்தில், அந்தப், காணுங்கள்