தியாக பூமி - 4.16. 'ஸுலோச்சு விஷயம்'
வக்கீல் ஆபத்சகாயமய்யர் தமது ஆபீஸ் அறையில் உட்கார்ந்து சட்டப் புத்தகம் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார். அவருடைய குழந்தை ஸுலோசனா அருகில் நின்று மேஜை மீதிருந்த இங்கிப் புட்டியின் மூடியைத் திறப்பதற்கு முயன்று கொண்டிருந்தாள்.
"ஏன்னா, ஸுலோச்சு அங்கே இருக்காளா?" என்று கேட்டுக் கொண்டே அவருடைய தர்மபத்தினி உள்ளே வந்தாள்.
"இதோ இருக்காளே, கண்ணு! ஏண்டி அம்மா, ஆபீஸ் ரூமிலே வந்து அப்பாவைத் தொந்தரவு படுத்தாதேன்னு எத்தனை தடவை சொல்றது?" என்று சொல்லிக் கொண்டே தானும் பக்கத்தில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.
"குழந்தை தொந்தரவு படுத்தினால் படுத்தட்டும். நீ தொந்தரவு படுத்தாதிருந்தால் போதும். இப்போ என்னத்துக்கு இங்கே வந்தே?" என்றார் வக்கீல்.
"இதென்ன ஆபத்தான்னா இருக்கு? வர வர என்னைப் பார்க்கறதுக்கே உங்களுக்கு பிடிக்கலையா என்ன?"
"ஆபத்துத்தான்; என் பேரே ஆபத்துத்தானே? இப்ப தானா உனக்கு அது தெரிஞ்சுது?"
"போரும், போரும். இந்த அரட்டைக் கல்லியெல்லாம் அந்தப் பம்பாய்க்காரியண்டே கத்துண்டிருக்கேளாக்கும். பேச்சு மட்டும் கிழியறதேயொழியக் காரியத்திலே உப்புக்குப் பிரயோஜனம் இல்லை. நான் சொன்னேனே, அந்த விஷயத்தைப்பத்தி ஏதாவது பேசினேளோ, இல்லையோ?"
"என்ன விஷயம் சொன்னே? ஞாபகம் இல்லையே?"
"அட ஏன் ஞாபகம் இருக்கப் போகிறது? ஊரிலே இருக்கிறவாளெல்லாம் சொன்னா நினைவிருக்கும். நான் சொன்னா நினைவிருக்குமா?"
"கோவிச்சுக்கறயே? என்ன விஷயம்னு இன்னொரு தடவைதான் சொல்லேன்."
"நம்ம ஸுலோச்சு விஷயந்தான்."
"என்ன ஸுலோச்சு விஷயம்?"
"உங்களுக்கு எல்லாம் பிரிச்சுப் பிரிச்சுச் சொல்லியாகணும். எங்கேயோ குப்பத்திலே கிடந்த பெண்ணைக் கொண்டு வந்து அந்தப் பம்பாய்க்காரி வச்சிண்டிருக்காளே, நம்ம ஸுலோச்சுவை வேணும்னா வச்சுக்கட்டும்னு சொன்னேனே?"
"வேணும்னாத்தானே வச்சுக்கணும்? அவவேணும்னு சொல்லலையே?" என்றார் வக்கீல்.
"அவளா வந்து வேணும்னு சொல்லுவாளா என்ன? நம்ம காரியத்துக்கு நாம் தான் சொல்லணும். சம்பு சாஸ்திரியா, சொம்பு சாஸ்திரியா, அந்தப் பிராமணனுக்கு இருக்கிற துப்புக்கூட உங்களுக்கு இல்லை. நீங்களுந்தான் வைக்கல் பண்ணறயள், வைக்கல்! மாட்டுக்குப் போடற வைக்கல்தான்!" என்றாள் ஸுலோச்சுவின் தாயார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.16. 'ஸுலோச்சு விஷயம்' - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஸுலோச்சு, உங்களுக்கு, அந்தப், வக்கீல், விஷயம், தொந்தரவு, சொன்னேனே, சொன்னா, வைக்கல், சாஸ்திரியா, ஞாபகம், என்றார், அவருடைய, குழந்தை, கொண்டே, கிடந்த, போரும்