தியாக பூமி - 4.15. சாரு எங்கே?
தொட்டிலில் படுத்துத் தூங்குவதுபோல், கட்டை வண்டியில் ஆனந்தமாகத் தூங்கிய சாரு அதிகாலை நேரத்தில் பட்சிகள் பாடிய திருப்பாவையைக் கேட்டுத் துயிலெழுந்தாள். பக்கத்தில் கையால் தடவிப் பார்த்தாள். தாத்தா இல்லாமற் போகவே, "தாத்தா!" என்று அலறிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். ஏற்கெனவே எழுந்திருந்து வண்டியின் பின்னால் உட்கார்ந்து தியானத்தில் ஆழ்ந்திருந்த சம்பு சாஸ்திரி, "ஏன், சாரு! இன்னும் சற்றுத் தூங்கேன்" என்றார். சாரு அவரைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, "நான் பயந்து போய் விட்டேன், தாத்தா! முன்னே மாதிரி எங்கே என்னை விட்டுட்டுப் போய்விட்டயோன்னு பார்த்தேன்" என்றாள்.
சம்பு சாஸ்திரி சிரித்துக் கொண்டார்.
"தாத்தா! உன்னை விட்டுட்டு நான் அந்த மாமி வீட்டுக்குப் போனதிலிருந்து, அடிக்கடி உன்னைப் பத்தி சொப்பனம் கண்டுண்டிருந்தேன். நீ என்னைச் சொப்பனத்திலே பார்த்தாயோ?" என்றாள் சாரு.
"இல்லை, சாரு! நான் உன்னைச் சொப்பனத்திலே பார்க்கலை. ஆனால், ஏன் தெரியுமா?" என்று சாஸ்திரி கேட்டார்.
"ஏன்னா, உனக்கு என் மேலே ஆசை இல்லை."
"அதுதான் தப்பு. சொப்பனம் எப்ப காணுவா எல்லாரும்? தூங்குகிற போது தானே? உன்னைப் பிரிஞ்ச அப்புறம் நான் தூங்கவே இல்லை, சாரு!" என்று சாஸ்திரி சொன்னார்.
அதைச் சரியாய்க் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல், "தாத்தா, தாத்தா! அதோ 'ரிகிங் ரிகிங்' என்று ஒரு பட்சி கத்தறதே, அது என்ன பட்சி, தாத்தா?" என்று சாரு கேட்டாள்.
இந்த மாதிரி ஒவ்வொரு பட்சியின் குரலையும் தனித்தனியே கண்டுபிடித்துத் தாத்தாவை அது என்ன பட்சி என்று கேட்டு வந்தாள். அவரும் தெரிந்த வரையில் சொல்லிக் கொண்டு வந்தார்.
கிழக்கே சூரியன் தகதகவென்று புறப்பட்டுக் கொண்டிருந்த சமயம், சாலை ஓரத்தில் ஓர் அழகான குளம் தென்பட்டது. வண்டியை நிறுத்தச் சொல்லி, சாஸ்திரியும் சாருவும் இறங்கி அந்தக் குளக்கரைக்குச் சென்றார்கள்.
சாரு, இந்த மாதிரி நாட்டுப் புறத்தையும், குளத்தையும் இதற்கு முன் பார்த்ததே கிடையாது. ஆகையால், அவளுக்கு அளவிலாத சந்தோஷம் உண்டாயிற்று. குளத்தில் பூத்திருந்த தாமரையையும், அதைச் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரம் செய்த வண்டையும் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தாள். குளக் கரையிலிருந்த மரங்களின் மீது அணிற்பிள்ளைகள் துள்ளி ஓடுவதைப் பார்த்தபோது, அவளுக்குத் தானும் ஓர் அணிற் பிள்ளையாக மாறி மரத்தின் மீது துள்ளி ஓட வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. குளத்தில் வாத்துக்களைப்போல் நீந்த வேண்டுமென்றும், வானத்தில் பட்சிகளைப் போல் பறக்க வேண்டுமென்றும் ஆசை கொண்டாள். வண்டாக மாறித் தாமரைப் பூவைச் சுற்றிச் சுற்றி வரவேண்டுமென்று விரும்பினாள். குளத்து ஜலத்தில் காலை வைத்ததும் மீன்கள் சுற்றிக் கொண்டு கொத்தின. அப்போது உண்டான குறுகுறுப்பு அவளுக்கு மிகுந்த குதூகலத்தை அளித்தது. ஜலத்தில் காலை வைப்பதும், மீன்கள் கொத்த ஆரம்பித்தவுடன் எடுப்பதும் அவளுக்குப் பெரிய விளையாட்டாயிருந்தது.
சாஸ்திரியார் இதற்குள் காலைக் கடன்களையெல்லாம் முடித்துவிட்டு, சாருவை அருகில் அழைத்து உட்கார வைத்தார். "குழந்தை! பாரதத் தாயைப் பற்றி உனக்கு ஒரு பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறேன், கற்றுக் கொள்ளுகிறாயா?" என்று கேட்டார்.
"பேஷாய்க் கத்துக்கறேன்" என்றாள் சாரு.
"இனிய பொழில்கள் நெடிய
வயல்கள்
எண்ணரும் பெரு நாடு
கனியுங் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு"
என்று சம்பு சாஸ்திரி சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.எண்ணரும் பெரு நாடு
கனியுங் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு"
காலையில் குளக்கரைக்கு வந்த கிராமவாசிகள் சிலர் சம்பு சாஸ்திரி சாருவுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டுவிட்டுப் போய், "யாரோ ஒரு பெரியவரும் குழந்தையும் வந்திருக்கிறார்கள்" என்ற செய்தியை ஊரில் பரப்பினார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.15. சாரு எங்கே? - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - தாத்தா, சாஸ்திரி, கொண்டு, சொல்லிக், என்றாள், மாதிரி, துள்ளி, சுற்றி, சுற்றிச், மீன்கள், பாட்டுச், குளத்தில், ஜலத்தில், வேண்டுமென்றும், ரிகிங், சொப்பனம், உன்னைப், சொப்பனத்திலே, கேட்டார், அவளுக்கு, உனக்கு, உண்டாயிற்று