தியாக பூமி - 4.14. கண் திறந்தது!
அதே அர்த்தராத்திரிப் போதில் இன்னொர் ஆத்மா கண் விழித்துக் கொண்டிருந்தது. சம்பு சாஸ்திரி அன்றிரவு சாவடிக் குப்பத்திலிருந்து பிரயாணப்பட்டுப் போவதென்று தீர்மானித்திருந்தார். நல்லானிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு போவதென்பது அசாத்தியமான காரியம்; இராமாயணத்தில் இராமர் தம்மைப் பின் தொடர்ந்த அயோத்திவாசிகள் தூங்கும் போது போனது போல் தாமும் அர்த்த ராத்திரியில் கிளம்பிப் போய்விட வேண்டியது தான் என்று அவர் முடிவு செய்திருந்தார்.
சாவடிக் குப்பத்துக் குடிசையில் கடிகாரம் கிடையாது. ஆனாலும், ஏறக்குறைய நடுநிசியில் சாஸ்திரி கண் விழித்தெழுந்தார். வாசலில் போய்ப் பார்த்தார். அன்று பௌர்ணமி; சந்திரன் உச்சி வானத்தை கடந்து கொஞ்சம் மேற்கே சாய்ந்திருந்தது. உலகம் அப்போது தான் பாற்கடலில் முழுகி எழுந்திருந்தது போல் காணப்பட்டது. தென்னை மரங்களின் மட்டைகள் இளங்காற்றில் அசைந்த போது, முத்துச் சுடர் போன்ற நிலவின் ஒளியில் அவை பளிச் பளிச்சென்று மின்னின.
சாவடிக் குப்பத்தில் நிச்சப்தம் குடிகொண்டிருந்தது. ஏழை உழைப்பாளி ஜனங்கள், பகலெல்லாம் உடலை வருத்தி வேலை செய்து விட்டு வந்தவர்கள், இரவில் அசந்து தூங்கினார்கள்.
சாஸ்திரி திரும்பவும் உள்ளே சென்றார். அம்பிகையின் முன்னால் கைகூப்பிக் கொண்டு உட்கார்ந்தார். "தாயே! ஜகதம்பிகே! உன்னையே தஞ்சமாக அடைந்த என்னை இப்படியா கஷ்டப்படுத்துவது? எத்தனையோ துக்கங்களை நானும் பொறுத்திருக்கிறேன்; ஆனால் இந்தக் குழந்தையைப் பிரிந்த துக்கத்தைப் பொறுக்க முடியவில்லையே? ஏன் இப்படிப்பட்ட பாசத்தைக் கொடுத்தாய்? ஏன் இப்படி என்னை வருத்துகிறாய்? எதற்காக இப்படி என் இருதயத்தைப் பிழிகிறாய்?"
சாஸ்திரியின் கண்ணில் ஜலம் ததும்பிப் பிரவாகமாய் ஓடிற்று. சட்டென்று அவர் எழுந்திருந்து நின்றார்.
"அம்மா! இந்த ஏழையாலே உனக்கு ஏதோ காரியம் ஆகவேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் இப்படித் துன்புறுத்த மாட்டாய். உன் ஆக்ஞையை நான் மீற வில்லை. இதோ புறப்படுகிறேன். இந்தத் தடவை உன்னை கூட நான் எடுத்துப் போகவில்லை. நீ இங்கேயே இருந்து இந்த நல்ல ஜனங்களைக் காப்பாற்றிக் கொண்டிரு!"
இப்படிச் சொல்லிச் சம்பு சாஸ்திரி அம்பிகைக்கு நமஸ்காரம் செய்து விட்டு எழுந்தார். அந்தக் குடிசையின் முன் புறத்து அறைக்குள் வந்தார். கொடியில் கிடந்த வேஷ்டி அங்க வஸ்திரங்களை எடுத்து மடிசஞ்சிக்குள் அடைக்கத் தொடங்கினார்.
அப்போது பின்னால், "தாத்தா! தாத்தா!" என்று குழந்தையின் குரல் கேட்டது.
சாஸ்திரிக்குத் தூக்கி வாரிப் போட்டது. திரும்பிப் பார்த்தார். அளவிலாத ஆச்சரியத்தினால் திக்பிரமை கொண்டார்.
"இதென்ன அதிசயம்? யார் இது? குழந்தை சாரு தானா?" என்று சொல்ல்விட்டு, கண்ணைத் துடைத்துக் கொண்டு பார்த்தார்.
அப்போது சாரு, "ஐயோ! தாத்தா! நான் கண்ட சொப்பனம் சரியாப் போயிடுத்தே! உனக்குக் கண் தெரியலையா? - நான் சாரு தான். என்னைத் தொட்டுப் பாரு" என்று சொல்லித் தாத்தாவின் அருகில் வந்தாள். கீழே கிடந்த அவருடைய அங்கவஸ்திரத்தை எடுத்துக் கொடுத்து, "இதோ உன் மேல்வேஷ்டி; தடவிப் பாரு; மேலே போட்டுக்கோ! தாத்தா! என் கையைப் பிடிச்சுக்கோ! உனக்கு எங்கெல்லாம் போகணுமோ அங்கெல்லாம் நான் அழைச்சுண்டு போறேன்" என்றாள்.
சாஸ்திரி குழந்தையை அணைத்துக்கொண்டு மேலெல்லாம் தடவிக் கொடுத்துவிட்டு, "நிஜமா, என் கண்மணி சாருதான். எப்படியம்மா இந்தப் பாதி ராத்திரிலே வந்தே? தனியாவா வந்தே?..." என்றார்.
"உனக்குக் கண் பொட்டையாப் போனது சொப்பனத்திலே தெரிஞ்சு போச்சு. நான் இல்லாத போனா உன்னை யாரு கையைப் புடிச்சு அழைச்சுண்டு போவான்னு ஓடி வந்துட்டேன்."
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 31 | 32 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
4.14. கண் திறந்தது! - Thiyaga Boomi - தியாக பூமி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சாஸ்திரி, தாத்தா, பார்த்தார், அப்போது, சாவடிக், அழைச்சுண்டு, உனக்குக், கையைப், கிடந்த, கொண்டு, காரியம், செய்து, விட்டு, இப்படி, உனக்கு