திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

கருங்கால் இளவேங்கை கான்றபூக் கள்மேல் இருங்கால் வயவேங்கை ஏய்க்கும் - மருங்கால் மழைவளரும் சாரல் இரவரின் வாழாள் இழைவளரும் சாயல் இனி. |
26 |
கருங்காலினையுடைய இனவேங்கை கன்மேலுகுத்த பூக்கள் பெரியதாளினையுடைய வயப்புலியை யொக்குகின்ற மருங்கான் மழைவளருஞ் சாரலானே இரவின்கண் நீவரின், உயிர்வாழ மாட்டாள்; இழை வளருஞ்சாயலாள்.
பனிவரைநீள் வேங்கைப் பயமலைநன் நாட இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன் - முனிவரையுள் நின்றான் வலியாக நீவர யாய்கண்டாள் ஒன்றாள்காப்பு ஈயும் உடன்று. |
27 |
குளிர்ந்த குவடுகளையும் நீண்ட வேங்கை மரங்களையும் உடைய பயமலை நாடனே! இதற்கு முன்பு வரைந்திலையாயினும் இனி வரைந்து புகுதாய் என்று நினக்கு ஆராய்ந்து சொல்வேன்; வெறுக்கத்தக்க மலையின் கண் நின்தாளாண்மையே வலியாக இரவின்கண் நீ வர எம் அன்னை கண்டாள்; இனி எங்களோடு பகைத்து வெகுண்டு மிக்க காவலை எமக்குத் தரும்.
மேகம்தோய் சாந்தம் விசைதிமிசு காழ்அகில் நாகம்தோய் நாகம்என இவற்றைப் - போக எறிந்துஉழுவார் தங்கை இருந்தடங்கண் கண்டும் அறிந்துழல்வான் ஓ!இம் மலை? |
28 |
முகிலைத் தோயாநின்ற சந்தனமும், விசை மரமும், திமிசும், காழகிலும், துறக்கத்தைச் சென்று தோயாநின்ற நாகமரமும் என்று சொல்லப்பட்ட இவையெல்லாம் போக வெட்டிப் புனமுழுவார் தங்கையாகிய இவளுடைய இருந்தடங்கண் கண்டுவைத்தும்,இங்கு நின்றும் மீண்டு அங்குவரவல்ல எம்பெருமான்இத்தோன்றுகின்ற மலைபோல் நிலையுடையன்.
பலாஎழுந்த பால்வருக்கைப் பாத்தி அதன்நேர் நிலாஎழுந்த வார்மணல் நீடிச் - சுலாஎழுந்து கான்யாறு கால்சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர் தான்நாறத் தாழ்ந்த இடம். |
29 |
பலா வெழுந்த மருங்கின்கண் வருக்கைப் பலாக்களாற் பாக்கப்பட்டத னடுவே நிலாவொளி மிக்க ஒழுகிய மணலுயர்ந்து வளைந்து தோன்றி, கான்யாறுகள் இடங்களெல்லாஞ் சீத்த காந்தளம்பூந் தண்பொதும்பர் தான் விரை கமழ்ந்து தழைத்தவிடம், யாங்கள்பகலின் கண் விளையாடுமிடம்.
திங்களுள் வில்லெழுதித் தேராது வேல்விலக்கித் தங்களுள் ளாள்என்னும் தாழ்வினால் - இங்கண் புனங்காக்க வைத்தார்போல் பூங்குழலைப் போந்தென் மனங்காக்க வைத்தார் மருண்டு. |
30 |
ஒரு நிறைமதியின் கண்ணே இரண்டுவில்லை எழுதிப் பிறருயிரை யுண்ணுமென்று ஆராயாது இரண்டு வேலினையழுத்தி, தங்கள் குலத்துள்ளா ளொருத்தி யென்று தாங்கள் கருதப்படுந் தாழ்வு காரணத்தால் இவ்விடத்தின்கட் டினைப்புனத்தைக் காக்க வைத்தார் போலப் பூங்குழலை என் மனத்தைப் போந்து காக்கவைத்தார் அறிவின்றி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திணைமாலை, கீழ்க்கணக்கு, நூற்றைம்பது, பதினெண், காந்தளம்பூந், தோயாநின்ற, வைத்தார், இருந்தடங்கண், தண்பொதும்பர், சொல்வேன், சங்க, இரவின்கண், வலியாக, மிக்க