பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும், ஒல்லை வெகுளார், 'உலகு ஆண்டும்!' என்பவர்; சொல்லின் வளாஅய், தம் தாள் நிழற்கீழ்க் கொள்பவே, கொல்லையுள் கூழ்-மரமே போன்று. |
256 |
உலகினை ஆளக்கடவேம் எனக் கருதும் அரசர்கள் வரையறையென்ப தொன்று இல்லாமல் தீமை செய்தவர்களையும் விரைந்து சினத்தலிலர்; கொல்லையுள் கூழ்மரமே போன்று - மனைப்படப்பையின்கண் ஒருவன் தனக்கு உணவாகப் பயன்படுமாறு வைத்து வளர்க்கப்பெறும் மரமே போல சொற்களால் வளைத்து தமது அடிநிழலின்கீழ் இருக்கச்செய்து பாதுகாத்துக்கொள்வர்.
கருத்து: பகைவரையும் நட்பாகக் கொண்டுஒழுகுதலே அரசனது ஆக்கத்திற்கு ஏதுவாம்.
பொலந் தார் இராமன் துணையாகப் தான்போந்து, இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே போந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச் சார்ந்து கெழீஇயிலார் இல். |
257 |
இலங்கையரசனுக்கு இளவலாகிய வீடணன் பொன்மயமான மாலையினையுடைய இராமனுக்குத் துணையாக தான் சென்று (அவனது சார்பைப் பெற்று) இலங்கைக்கே தலைவனாய அரசபதவியை அடைந்தான் பெரியோர்களைச் சார்பாகப் பெற்று (அங்ஙனம் சார்பாகப் பெற்ற தன்மையால்)பயன் அடையாதார் இல்லை.
கருத்து: பெரியோரைச் சார்ந்தொழுகுவார்பயன்பெறுவர் என்பதாம்.
26. அமைச்சர்
கல்வி அகலமும், கட்டுரை வாய்பாடும், கொல் சின வேந்தன் அவை காட்டும்;-மல்கி, தலைப்பாய் இழிதரூஉம் தண் புனல் நீத்தம் மலைப் பெயல் காட்டும் துணை. |
258 |
தலை மல்கி பாய் இழிதரு தண்புனல் நீத்தம் மலையிடம் நிறைந்து பரந்து இழிகின்ற குளிர்ந்த புனலின் பெருக்கம் மலையிடத்துப் பெய்த மழையது அளவை அறிவிக்குமாறுபோல பகைவரைக் கொல்லுகின்ற சினத்தையுடைய அரசனது கல்வியது பெருக்கத்தையும் நீதி கூறும் முறையையும் அவனது அவையே அறிவித்து நிற்கும்.
கருத்து: அரசனது கல்விப்பெருக்கத்தையும், நீதிகூறும் முறையையும் அவனது அவை காட்டிநிற்கும்.
செயிர் அறு செங்கோல் சின வேந்தன் தீமை பயிர் அறு பக்கத்தார் கொள்வர்;-துகிர் புரையும் செவ்வாய் முறுவல் நற்சின்மொழியாய்!-செய்தானை ஒவ்வாத பாவையோ இல். |
259 |
பவளத்தை ஒக்கும் சிவந்த வாயினையும் புன்முறுவலையும் இனிய சிலவாகிய மொழியினையும் உடையாய்! குற்றமற்ற செங்கோலையும் சினத்தையும் உடைய அரசனது தீமையை. பயிர் அறு பக்கத்தார் கொள்வர் - குற்றமற்ற பக்கத்திலுள்ள அமைச்சர்களே முன்நின்று ஏற்றுக்கொள்ளக் கடவர் செய்தவனை ஒத்திராத சித்திரமோ உளவாதல் இன்மையான்.
கருத்து: அரசன் செய்யும் தீமை அமைச்சர்களைச் சாரும்என்பதாயிற்று.
கற்றார் பலரைத்தன் கண்ணாக இல்லாதான் உற்று இடர்ப் பட்ட பொழுதின்கண் தேற்றம் மரையா துணைபயிரும் மாமலை நாட சுரையாழ் நரம்பறுத் தற்று. |
260 |
பெண் மான்கள் தந்துணைகளை அழைக்கும் சிறந்த மலைநாடனே! நீதிநூல்களைக் கற்ற அமைச்சர்களைத் தனக்குக் கண்ணாகப் பெற்றிராத அரசன் யாதாயினும் ஒரு துன்பம் வந்துற்று அத்துன்பத்தில் தான் அகப்பட்டு நின்றபொழுது தானே ஒருவகையாகத் துணிதல் ஒரு நரம்பினையுடைய சுரைபொருந்திய யாழின் அந்த ஒரு நரம்பையும் அறுத்தாற் போலும்.
கருத்து: அமைச்சர்களின்றித் தானே ஒரு காரியத்தை அரசன் துணிந்தால்,அத்துணிவால் பயனுண்டாதல் இல்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 50 | 51 | 52 | 53 | 54 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, அரசனது, இலக்கியங்கள், அவனது, தீமை, பழமொழி, அரசன், பதினெண், நானூறு, கீழ்க்கணக்கு, மல்கி, முறையையும், நீத்தம், பக்கத்தார், தானே, குற்றமற்ற, கொள்வர், காட்டும், பயிர், தான், மரமே, கொல்லையுள், கல்வி, சங்க, போன்று, இலங்கைக்கே, இல்லை, சார்பாகப், பெற்று, வேந்தன்