பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

அடைய அடைந்தாரை அல்லவை செய்து, கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி, குடிகள்மேல் கூட்டு இறப்பக் கொண்டு, தலையளிப்பின், அஃது அன்றோ, சூட்டு அறுத்து வாயில் இடல். |
246 |
தன்னை நெருங்க அடைந்த குடிகளை துன்புறுத்தி கொடையினையுடைய அரசன் கொடுங்கோலை உடையவனாகி குடிகளிடத்தில் தாங்கொள்ளும் இறைப்பொருளை மிகுதியாகக்கொண்டு பின்னர் அவருக்கு வேண்டிய நன்மைகளைச் செய்தலான் அன்பு செய்யின் அச்செயல் மயிலினது உச்சிக் கொண்டையை அறுத்து அதற்குணவாக அதன் வாயில் இடுதலைஒக்கும்.
கருத்து: அரசன் இறைப்பொருளைத் துன்புறுத்தி மிகுதியாகக்கொண்டு பின்னர் எத்துணை செய்யினும் குடிகள்மகிழ்ச்சியடையார்.
வெண்குடைக்கீழட வாழும் குடிகட்கு வேந்தனும் செங்கோலன் அல்லனேல், செய்வது என்?-பொங்கு படு திரைச் சேர்ப்ப!-மற்று இல்லையே, யானை தொடு உண்ணின், மூடும் கலம். |
247 |
மிகுந்த அலைகள் பொங்கி எழுகின்ற கடல் நாடனே! தனது வெண்மையான கொற்றக்குடை நிழலின்கீழ் உயிர்வாழ்கின்ற குடிமக்கட்கு அரசன் செம்மையான கோலையுடையவன் அல்லாதவிடத்து அவர்கள் செய்வது யாது? யானை தனது கரத்தால் தொட்டு அக்கலத்தை உருட்டி உண்ணின் அதனைமூடுங்கலம் வேறொன்றும் இல்லையாதல்போல.
கருத்து: கொடுங்கோலரசனின் கீழுள்ள குடிகள் இறந்து படுதலேசெய்யத்தக்க செயலாம்.
ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால், களி யானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதும்; துளி உண் பறவைபோல் செவ்வன் ஓர்ப்பாரும், எளியாரை எள்ளாதார் இல். |
248 |
நீர்த்துளியையே உண்ணுகின்ற வானம்பாடியைப்போல செம்மையான ஒன்றினையே நோக்கித் தவம் செய்கின்றவர்களுள்ளும் எளியவர்களைச் சினந்திகழாதார் யாரும் இல்லை (அதுபோல) செருக்குப் பொருந்திய யானைப்படையை உடைய அரசர்களுக்கு தம்மோடு மாறுபட்டு ஒழுகும் எளிய அரசர்களை மேற்பட்டுச் சென்று போரிட்டு வென்று ஒழுகுவதேயல்லாமல் அது செய்யாது இகழ்ச்சியான் நீக்குதல் துன்பந்தருவதாம்.
கருத்து: தன்னோடு மாறுபட்டொழுகும் எளிய அரசர்களை அரசன் உடனேசென்று வெல்க.
மறு மனத்தன் அல்லாத மா நலத்த வேந்தன் உறு மனத்தன் ஆகி ஒழுகின்,-செறு மனத்தார் பாயிரம் கூறிப் படை தொக்கால் என் செய்ப?- ஆயிரம் காக்கைக்கு ஓர் கல். |
249 |
குற்றமுடைய மனத்தனல்லாத மனதையும் சிறந்த வேற்றுமைத் துணை நலங்களையும் உடைய அரசன் யாவரிடத்தும் பொருந்திய அன்புடைய மனத்தனாகி ஒழுகின் வெல்லும் மனதுடைய அரசர்கள் வேண்டிய அளவு முகவுரை கூறிப் படையைத் திரட்டினால் அப்படைகள் என்ன செய்யும்? ஆயிரம் காக்கைகளை ஓட்டுவதற்கு இட்ட ஒரு கல்லைப்போல அவர் தோன்றியதுணையானே பறந்து செல்வர்.
கருத்து: அரசர்கள் அன்பு ஒன்றே கொண்டுமறத்தை வெல்லலாம்.
அம் கோல் அவிர்தொடி!-ஆழியான் ஆயினும், செங்கோலன் அல்லாக்கால், சேர்ந்தாரும் எள்ளுவரால், வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிது எனினும்; தண் கோல் எடுப்புமாம் மொய். |
250 |
அழகிய கோல் போன்று திரண்டு விளங்குகின்ற தொடியை உடையாய்! அரசன் பகையரசர்மாட்டு கொடுங்கோன்மையைச் சிறிது விரும்பினானாயினும் தன்னிழற்கீழ் வாழ்வாரிடத்துச்செங்கோன்மை உடையவன் அல்லாதவிடத்து ஆழிப்படையை உடைய திருமாலேயாயினும் தன்னைச் சேர்ந்தவர்களும் இகழ்வார்கள்; தண்கோல் - தன்கீழ் வாழ்வாரிடத்துச் செலுத்தும் செங்கோலே உண்மையாக வெற்றியைத் தோற்றுவிக்கு மாதலான்.
கருத்து: அரசனது வெற்றிக்குஅவனது செங்கோலே காரணமாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, அரசன், கருத்து, கோல், இலக்கியங்கள், உடைய, பழமொழி, யானை, நானூறு, கீழ்க்கணக்கு, பதினெண், எளிய, பொருந்திய, அல்லாதவிடத்து, அரசர்களை, கூறிப், சிறிது, செங்கோலே, அரசர்கள், ஆயிரம், ஒழுகின், செம்மையான, மனத்தன், செங்கோலன், வாயில், துன்புறுத்தி, அறுத்து, வேந்தன், சங்க, மிகுதியாகக்கொண்டு, பின்னர், உண்ணின், செய்வது, அன்பு, வேண்டிய, தனது