முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 88.பகைத்திறம் தெரிதல்
திருக்குறள் - 88.பகைத்திறம் தெரிதல்
பகை என்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற் றன்று. |
871 |
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிறிதும் பொழுது போக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
வில்லே ருழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை. |
872 |
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக் கூடாது.
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். |
873 |
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தாரை விட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற் றுலகு. |
874 |
பகையையும் நட்பாக செய்து கொண்டு நடக்கும், பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. |
875 |
தனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.
தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். |
876 |
இதற்கு முன் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும் அழிவு வந்த காலத்தில் அவனைத் தெளியாமலும் நீங்காமலும் வாளாவிட வேண்டும்.
நோவற்க நொந்த(து) அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. |
877 |
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது, பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக் கூடாது.
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. |
878 |
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக் கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாவே அழியும்.
இளைதாக முன்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த விடத்து. |
879 |
முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். |
880 |
பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
88.பகைத்திறம் தெரிதல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - வேண்டும், ஒருவன், கூடாது, இலக்கியங்கள், மென்மை, பகைவரிடத்தில், கொண்டு, தேடிக், உழவராகிய, literature, ருழவர்