திருக்குறள் - 84.பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்(டு) ஊதியம் போக விடல். |
831 |
பேதைமை என்று சொல்லப்படுவது யாது என்றால், தனக்கு கெடுதியானதைக் கைக் கொண்டு ஊதியமானதை கைவிடுதலாகும்.
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். |
832 |
ஒருவனுக்கு பேதைமை எல்லாவற்றிலும் மிக்க பேதைமை, தன் ஒழுக்கத்திற்குப் பொருந்தாததில் தன் விருப்பத்தை செலுத்துதல் ஆகும்.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில். |
833 |
தகாதவற்றிற்கு நாணாமலிருத்தல், தக்கவற்றை நாடாமலிருத்தல், அன்பு இல்லாமை, நன்மை ஒன்றையும் விரும்பாமை ஆகியவை பேதையின் தொழில்கள்.
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். |
834 |
நூல்களை ஓதியும், அவற்றின் பொருளை உணர்ந்தும், பிறர்க்கு எடுத்துச் சொல்லியும் தான் அவற்றின் நெறியில் அடங்கி ஒழுகாதப் பேதைப் போல் வேறு பேதையர் இல்லை.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்பு கழுந்தும் அளறு. |
835 |
எழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்துவதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான்.
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். |
836 |
ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. |
837 |
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்(று) உடைமை பெறின். |
838 |
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில். |
839 |
பேதையிரிடமிருந்து பிரிவு நேர்ந்த போது, அப்பிரிவு துன்பம் ஒன்றும் தருவதில்லை, ஆகையால் பேதையரிடம் கொள்ளும் நட்பு மிக இனியதாகும்.
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். |
840 |
சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
84.பேதைமை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - பேதைமை, ஒருவன், அவற்றின், பொய்படும், பேதையார், உணர்ந்தும், literature, இலக்கியங்கள், பேதையின்