முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 56.கொடுங்கோன்மை
திருக்குறள் - 56.கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்(டு) அல்லவை செய்தொழுகும் வேந்து. |
551 |
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
வேலோடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. |
552 |
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். |
553 |
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. |
554 |
(ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
அல்லற்பட்(டு) ஆற்றா(து) அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. |
555 |
(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. |
556 |
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.
துளியின்மை ஞாலத்திற்(கு) எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. |
557 |
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
இன்மையின் இன்னா(து) உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். |
558 |
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். |
559 |
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். |
560 |
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
56.கொடுங்கோன்மை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - மன்னவன், நாட்டில், போகும், அரசர்க்கு, செல்வத்தைத், குன்றும், வாழும், செய்யும், இல்லாத, அரசனுடைய, நாட்டை, பொருள், நின்றான், இலக்கியங்கள், நாடொறும், முறைசெய்யா, literature, தோறும், இழந்து