முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 49.காலம் அறிதல்
திருக்குறள் - 49.காலம் அறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. |
481 |
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.
பருவத்தோ(டு) ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு. |
482 |
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். |
483 |
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தாற் செயின். |
484 |
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். |
485 |
உலகத்தைக் கொள்ளக் கருதிகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. |
486 |
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல் போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்க்காகப் பின்னே கால் வாங்குதலைப் போன்றது.
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்(து) உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். |
487 |
அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. |
488 |
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்லவேண்டும், அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்த போது அவருடைய தலை கீழே விழும்.
எய்தற் கரிய(து) இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். |
489 |
கிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. |
490 |
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
49.காலம் அறிதல் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - வேண்டும், அறிந்து, செய்தால், கைகூடும், காலத்தை, ஊக்கம், முடிப்பதற்கு, காணின், செயின், காக்கை, இலக்கியங்கள், அதற்கு, பொருந்துமாறு, literature, செய்யும்