திருக்குறள் - 131.புலவி
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. |
1301 |
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். |
1302 |
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவு கடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது.
அலந்தாரை அல்லல்நோய் செய்தற் றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். |
1303 |
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்ப நோய் செய்து வரத்தினாற் போன்றது.
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. |
1304 |
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணா ரகத்து. |
1305 |
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.
துனியும் புலவியும் இல்லாயன் காமம் கனியும் கருக்காயும் அற்று. |
1306 |
பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. |
1307 |
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும் காதலர் இல்லா வழி. |
1308 |
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. |
1309 |
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. |
1310 |
ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.
தேடல் தொடர்பான தகவல்கள்:
131.புலவி - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - போன்றது, புலவியும், பிணக்கும், துன்பம், நீரும், காதலர், ஊடலின், பிணங்கியவரை, புல்லா, இலக்கியங்கள், அல்லல்நோய், சிறிது, literature, நெஞ்சம்