முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 120.தனிப்படர் மிகுதி
திருக்குறள் - 120.தனிப்படர் மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. |
1191 |
தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. |
1192 |
தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.
வீழுநர் வீழப் படுவார்க்(கு) அமையுமே வாழுநம் என்னும் செருக்கு. |
1193 |
காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். |
1194 |
தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை. |
1195 |
நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. |
1196 |
காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். |
1197 |
( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?
வீழ்வாரின் இன்சொல் பெறாஅ(து) உலகத்து வாழ்வாரின் வன்கனார் இல். |
1198 |
தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. |
1199 |
யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
உறாஅர்க்(கு) உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. |
1200 |
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.
தேடல் தொடர்பான தகவல்கள்:
120.தனிப்படர் மிகுதி - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - காதலர், விரும்பும், காதலரால், பிரிவுத், செவிக்கு, அளிக்கும், இலக்கியங்கள், பெற்றவர், literature, தாம்வீழ்வார்