திருக்குறள் - 106.இரவு
இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று. |
1051 |
இரந்து கேட்க தக்கவரைக் கண்டால் அவனிடம் இரக்க வேண்டும், அவர் இல்லை என்று ஒளிப்பாரானால் அது அவர்க்கு பழி, தமக்கு பழி அன்று.
இன்பம் ஒருவற்(கு) இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். |
1052 |
இரந்து கேட்ட பொருள் துன்பமுறாமல் கிடைக்குமானால், அவ்வாறு இரத்தலும் இன்பம் என்று சொல்லத் தக்கதாகும்.
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்(று) இரப்புமோர் ஏஎர் உடைத்து. |
1053 |
ஒளிப்பு இல்லாத நெஞ்சும், கடைமையுணர்ச்சியும், உள்ளவரின் முன்னே நின்று இரந்து பொருள் கேட்பதும் ஓர் அழகு உடையதாகும்.
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. |
1054 |
உள்ளதை மறைத்துக் கூறும் தன்மையைக் கனவிலும் அறியாதவரிடத்தில் இரந்து கேட்பதும் பிறர்க்கு கொடுப்பதைப் போன்ற சிறப்புடையது.
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்(று) இரப்பவர் மேற்கொள் வது. |
1055 |
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். |
1056 |
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.
இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து. |
1057 |
இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. |
1058 |
இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. |
1059 |
பொருள் இல்லை என்று இரந்து அதைப் பெற்றுக் கொள்ள விரும்புவோர் இல்லாதபோது, பொருள் கொடுப்பவனிடத்தில் என்ன புகழ் உண்டாகும்.
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி. |
1060 |
இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
106.இரவு - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - இரந்து, பொருள், இரப்பவர், உள்ளதை, வேண்டும், கண்டால், காணின், வறுமைத், நிரப்பிடும்பை, எல்லாம், இரப்பவரின், கெடும், இரத்தலும், இன்பம், இலக்கியங்கள், துன்பம், literature, கேட்பதும், நின்று, கனவிலும்