முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.049.திருவெண்காடு
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.049.திருவெண்காடு

5.049.திருவெண்காடு
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சுவேதாரணியேசுவரர்.
தேவியார் - பிரமவித்தியாநாயகியம்மை.
1558 | பண்காட்டிப்படி யாயதன் பத்தர்க்குக் கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும் பெண்காட் டிப்பிறை சென்னிவைத் தான்திரு வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே. |
5.049.1 |
அறியாமையை உடைய நெஞ்சமே! பண்ணிசை காட்டி வழிபடுகின்ற, நிலவுலகிற் பொருந்திய தன் அன்பர்களுக்குத் திருக்கடைக்கண் காட்டி அருளி, கண்ணிற்கருமணி போன்றுள்ளவனும், சென்னியின்கண் பெண், பிறை ஆகியவற்றை வைத்தவனும் ஆகிய பெருமானது திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.
1559 | கொள்ளி வெந்தழல் லீசிநின் றாடுவார் ஒள்ளி யகணஞ் சூழுமை பங்கனார் வெள்ளி யன்கரி யன்பசு வேறிய தௌளி யன்றிரு வெண்கா டடைநெஞ்சே. |
5.049.2 |
நெஞ்சே! கொள்ளியாகிய வெவ்விய தழலைவீசி நின்று ஆடுபவரும் ஒள்ளிய பூதகணங்கள் சூழ்பவரும், உமைபங்கரும், வெள்ளிய திருவெண்ணீற்றினரும், அயிராவணம் என்ற ஆனைக்குரியவரும், விடையேறிய தௌவுடையவரும் ஆகிய பெருமானுக்குரிய திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.
1560 | ஊனோக் குமின்பம் வேண்டி யுழலாதே வானோக் கும்வழி யாவது நின்மினோ தானோக் குந்தன் னடியவர் நாவினில் தேனோக் குந்திரு வெண்கா டடைநெஞ்சே. |
5.049.3 |
நெஞ்சே! தன்னால் நோக்கப்படும் அடியார்கள் நாவினில் அருள் தேன் பாயுமாறு நோக்கும் திருவெண்காட்டை அடைவாயாக! உலகீர்! உடல் நோக்கிய சிற்றன்பங்களைவிரும்பி உழலாது. வான்நோக்கும் வழி எதுவோ அதில் நிற்பீர்களாக.
1561 | பருவெண் கோட்டுப் பைங்கண்மத வேழத்தின் உருவங் காட்டிநின் றானுமை யஞ்சவே பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடம் திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே. |
5.049.4 |
நெஞ்சமே! பருத்த வெள்ளிய தந்தங்களையும், பசுங்கண்களையும், மதத்தையும் உடைய வேழத்தின் உருவத்தை உமையாள் அஞ்சக் காட்டி நின்றவனும், பெரிய சாம்பலால் வெள்ளிய இடுகாட்டில் தங்குபவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாம் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.
1562 | பற்ற வன்கங்கை பாம்பு மதியுடன் உற்ற வன்சடை யானுயர் ஞானங்கள் கற்ற வன்கய வர்புர மோரம்பால் செற்ற வன்திரு வெண்கா டடை நெஞ்சே. |
5.049.5 |
நெஞ்சே! உயிர்களாற் பற்றத்தக்கவனும், கங்கை, பாம்பு, பிறையுடன் உற்றவனும் சடையினனும், உயர்ஞானங்கள் கற்றவனும், கீழ்மைக்குணமுடையார் புரங்களை ஓரம்பாற் செற்றவனும் ஆகிய பெருமான் உறையும் திருவெண்காட்டை அடைந்து வழிபாடு செய்வாயாக.
1563 | கூடி னானுமை யாளொரு பாகமாய் வேட னாய்விச யற்கருள் செய்தவன் சேட னார்சிவ னார்சிந்தை மேயவெண் காட னாரடி யேயடை நெஞ்சமே. |
5.049.6 |
நெஞ்சமே! உமையாளை ஒருபாகமாய்க் கூடியவரும், விசயற்கு வேடனாய் அருள்புரிந்தவரும். உயர்ந்த சிவனாரும் ஆகிய அன்பானினைவார் சிந்தையில்மேவிய திருவெண்காடனாரின் திருவடியே அடைவாயாக.
1564 | தரித்த வன்கங்கை பாம்பு மதியுடன் புரித்த புன்சடை யான்கய வர்புரம் எரித்த வன்மறை நான்கினோ டாறங்கம் விரித்த வன்னுறை வெண்கா டடைநெஞ்சே. |
5.049.7 |
நெஞ்சே! கங்கை, பாம்பு, மதி ஆகியவற்றை ஒருங்கு தாங்கியவனும். முறுக்குண்ட புன்சடையுடையவனும். கீழவர் புரங்களை எரித்தவனும், நான்கு மறைகளையும், ஆறங்கங்களையும் விரித்தவனும் ஆகிய பெருமான் உறைகின்ற திருவெண் காட்டை அடைந்து வழிபடுவாயாக.
1565 | பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள் சிட்ட னாதியென் றுசிந்தை செய்யவே நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே. |
5.049.8 |
நெஞ்சே! பட்டமும், இண்டைமாலைகளும் கொண்டு அன்பர்கள் "உயர்ந்தவனே! ஆதியே!" என்று சிந்தைசெய்ய நடனமாடும் மூர்த்தியாகவும், ஞானச்சுடராய் நின்ற அட்டமூர்த்தியாகவும் உள்ள பெருமானின் திருவெண்காடடைந்து வழிபடுவாயாக.
1566 | ஏன வேடத்தி னானும் பிரமனும் தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா ஞான வேடன் விசயற் கருள்செயும். கான வேடன்றன் வெண்கா டடை நெஞ்சே. |
5.049.9 |
நெஞ்சே! பன்றி வேடம் கொண்ட திருமாலும், பிரமனும் தானவேடத்தை முன் தாழ்ந்து அறிய வலிமையில்லாத ஞானவேடனும், அருச்சுனனுக்கு அருள்செய்யும் காட்டு வேடனும் ஆகிய பெருமானின் திருவெண்காடு அடைந்து வழிபடுவாயாக.
1567 | பாலை யாடுவர் பன்மறை யோதுவர் சேலை யாடிய கண்ணுமை பங்கனார் வேலை யார்விட முண்டவெண் காடர்க்கு மாலை யாவது மாண்டவ ரங்கமே. |
5.049.10 |
பாலைநிலத்தில் ஆடுபவரும், பல மறைகளை ஓதுபவரும், சேல்மீன்போன்று காதளவும் ஆடுகின்ற கண்ணை உடைய உமையொருபாகரும், கடலிற் பொருந்திய விடமுண்டவரும் ஆகிய வெண்காடர்க்கு இடிழுதவர் உறுப்புக்களாகிய எலும்புகளே மாலையாவது.
1568 | இராவ ணஞ்செய மாமதி பற்றவை இராவ ணம்முடை யான்றனை யுள்குமின் இராவ ணன்றனை யூன்றி யருள்செய்த இராவ ணன்திரு வெண்கா டடைமினே. |
5.049.11 |
அறிவைப்பற்றியிருக்கும் பற்று இல்லாத படி செய்தற்பொருட்டு அயிராவணத்தை உடைய பெருமானை நினைமின். இராவணனைக் கால்விரலால் ஊன்றி அருள்செய்த அகோர முகத்தினரின் திருவெண்காட்டை அடைவீராக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 47 | 48 | 49 | 50 | 51 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவெண்காடு - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நெஞ்சே, வெண்கா, திருவெண்காட்டை, அடைந்து, நெஞ்சமே, பாம்பு, டடைநெஞ்சே, வழிபடுவாயாக, திருவெண்காடு, வெள்ளிய, காட்டி, திருச்சிற்றம்பலம், வன்கங்கை, உறையும், திருவெண், மதியுடன், பெருமான், பிரமனும், பெருமானின், திருமுறை, வன்னுறை, புரங்களை, வேழத்தின், ஆடுபவரும், பொருந்திய, ஆகியவற்றை, பங்கனார், துய்ம்மட, வழிபாடு, அடைவாயாக, நாவினில், செய்வாயாக, உய்வாயாக