முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.050.திருவாய்மூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.050.திருவாய்மூர்

5.050.திருவாய்மூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வாய்மூரீசுவரர்.
தேவியார் - பாலினுநன்மொழியம்மை.
1569 | எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண் டங்கே வந்தடை யாள மருளினார் தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார் அங்கே வாவென்று போனா ரதென்கொலோ. |
5.050.1 |
தென்னனகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர். என்னை எங்கே என்று தேடி, இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர், திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்?
1570 | மன்னு மாமறைக் காட்டு மணாளனார் உன்னி யுன்னி யுறங்குகின் றேனுக்குத் தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி என்னை வாவென்று போனார தென்கொலோ. |
5.050.2 |
எம்பெருமானையே நினைந்து, நினைந்து உறங்குகின்ற எளியேனுக்கு நிலைபெற்ற பெருமை உடைய மறைக்காட்டுறையும் மணவாளனார் தன்னை வாய்மூர் இறைவனாமாற்றை விளங்கக்கூறி என்னை அங்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்?
1571 | தஞ்சே கண்டேன் தரிக்கிலா தாரென்றேன் அஞ்சே லுன்னை யழைக்கவந் தேனென்றார் உஞ்சே னென்றுகந் தேயெழுந் தோட்டந்தேன் வஞ்சே வல்லரே வாய்மூ ரடிகளே. |
5.050.3 |
தரித்து ஓரிடத்தில் இராதவர்க்குத் தஞ்சப் பொருளைக் கண்டேன் என்றேன்; "அஞ்சாதே! உன்னை அழைக்க வந்தேன்" என்று அருளினார்; 'உய்ந்தேன்' என்று மகிழ்ந்து எழுந்து ஓட்டம் எடுத்தேன்; வாய்மூர் அடிகள் வஞ்சனையில் வல்லவரோ?
1572 | கழியக் கண்டிலேன் கண்ணெதி ரேகண்டேன் ஒழியப் போந்திலே னொக்கவே யோட்டந்தேன் வழியிற் கண்டிலேன் வாய்மூரடிகள்தம் சுழியிற் பட்டுச் சுழல்கின்ற தெனகொலோ. |
5.050.4 |
அவர் என்னைவிட்டு நீங்குமாறு கண்டேனில்லை; கண்ணெதிரே கண்டேன்; என்னைவிட்டு அவர் நீங்கியபின் போந்தேனில்லை; ஒக்கவே ஓடிவந்தேன்; ஆயினும் இடைவழியிற் கண்டேனில்லை; வாய்மூர் அடிகளின் மாயச்சுழலில் அடியேன் இவ்வாறு பட்டுச் சுழல்கின்றதன் காரணம் என்னையோ?
1573 | ஒள்ளி யாரிவ ரன்றிமற் றில்லையென் றுள்கி யுள்கி யுகந்திருந் தேனுக்குத் தௌளி யாரிவர் போலத் திருவாய்மூர்க் கள்ளி யாரவர் போலக் கரந்ததே. |
5.050.5 |
ஒளியுடையவர் இவரையன்றி மற்றுயாரும் இல்லை என்று நினைந்து நினைந்து மகிழ்ந்திருந்த எளியேனுக்கு, திருவாய் மூரின்கண் தௌந்தவர் இவர்போலக்காட்டிக் கள்ளம் உடையவர் போல ஒளித்துவிட்டனரே.
1574 | யாதே செய்துமி யாமலோ நீயென்னில் ஆதே யேயு மளவில் பெருமையான் மாதே வாகிய வாய்மூர் மருவினார் போதே யென்றும் புகுந்ததும் பொய்கொலோ. |
5.050.6 |
எச்செயல் செய்தாலும் அவன் செயல் என்று எண்ணினால் அதுவே நல்ல பயனைத்தரும். அளவில்லாத பெருமையுடையான் அவன், மாதேவனாகிய வாய்மூர் இறைவா என்றதும் சென்றதும் பொய்யோ?
1575 | பாடிப்பெற்ற பரிசில் பழங்காசு வாடி வாட்டந் தவிர்ப்பா ரவரைப்போல் தேடிக் கொண்டு திருவாய்மூர்க் கேயெனா ஓடிப் போந்திங் கொள்ளித்தவா றென்கொலோ. |
5.050.7 |
பாடி அதனாற்பெற்ற பரிசிலாகிய பழங்காசினைக் கொண்டு வாடிய வாட்டத்தைத் தவிர்ப்பாரைப்போலத் திருவாய்மூர்க்கே தேடிக்கொண்டு ஓடிவந்து இங்கே ஒளித்தவாற்றிற்கான காரணம் என்னேயோ?
1576 | திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ் உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார் மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப் பிறைக்கொள் செஞ்சடை யாரிவர் பித்தரே. |
5.050.8 |
வேதங்களாற் பூசிக்கப்பெற்று அடைக்கப்பட்டிருந்த மறைக்காட்டுத் திருக்கதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன்பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் உதோ நின்றார்; திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லரோ? இவர் பித்தரேயாவர்.
1577 | தனக்கே றாமை தவிர்க்கென்று வேண்டினும் நினைத்தேன் பொய்க்கருள் செய்திடு நின்மலன் எனக்கே வந்தெதிர் வாய்மூருக் கேயெனாப் புனற்கே பொற்கோயில் புக்கதும் பொய்கொலோ. |
5.050.9 |
தனக்கு உள்ளம் பொருந்தாமையைத் தவிர்த்தருள்வாயாக என்று வேண்டினும், பொய்யாக நினைக்கும் எளியேன் பொய்க்கும் அருள் செய்யும் நின்மலனாகிய இறைவன், எனக்கு எதிரேவந்து வாய்மூருக்கே வா என்று கூறிவந்து தீர்த்தத்தை அடுத்த பொற்கோயிலில் வந்து புகுந்ததும் பொய்தானோ?
1578 | தீண்டற் கரிய திருவடி யொன்றினால் மீண்டற் கும்மிதித் தார்அரக் கன்தனை வேண்டிக்கொண் டேன்திரு வாய்மூர் விளக்கினைத் தூண்டிக் கொள்வன்நா னென்றலுந் தோன்றுமே. |
5.050.10 |
பன்றி வடிவாகச் சென்று தோண்டியும் தீண்டுதற்கரிய திருவடியின்கண் அமைந்த திருவிரல் ஒன்றினால் அரக்கனை மீண்டு அருள்புரிவதற்கும் மிதித்தவராகிய பெருமானை வேண்டிக் கொண்டேன்; திருவாய்மூர் விளக்கினைத் தூண்டிக்கொள்வேன் நான் என்றலும் தோன்றி அருள்புரிந்தான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 48 | 49 | 50 | 51 | 52 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாய்மூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - வாய்மூர், நினைந்து, காரணம், திருவாய்மூர், கண்டேன், விளக்கினைத், புகுந்ததும், திருவாய்மூர்க், பொய்கொலோ, வேண்டினும், வல்லரோ, மறைக்க, கொண்டு, யாரிவர், செஞ்சடை, கண்டிலேன், திருவாய்மூரில், வாவென்று, திருச்சிற்றம்பலம், திருமுறை, கூறியருளிச், சென்றார், என்னைவிட்டு, பட்டுச், எளியேனுக்கு, கண்டேனில்லை